தேசிய விளையாட்டு விழா மரதனில் தங்கம் வென்று சண்முகேஸ்வரன் சாதனை

49th National Sports Festival

83
49th National Sports Festival

விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களம் என்பன இணைந்து நடத்தும் 49ஆவது தேசிய விளையாட்டு விழா மரதன  ஓட்டப் போட்டியில் அட்டன், வெலிஓயாவை பிறப்பிடமாகக் கொண்ட குமார் சண்முகேஸ்வரன் தங்கப் பதக்கத்தை வென்று சாதனை படைத்தார்.

மத்திய மாகாணம் சார்பாக போட்டியிட்ட சண்முகேஸ்வர்ன் அப் போட்டியை 2 மணித்தியாலங்கள், 24 நிமிடங்கள், 43 செக்கன்களில் நிறைவுசெய்தார்.

நீண்ட தூர ஓட்டப் போட்டிகளில் தேசிய சம்பியனான சண்முகேஸ்வரன், தேசிய விளையாட்டு விழா மரதன் ஓட்டத்தில் வென்ற முதல் தங்கப் பதக்கம் இதுவாகும். இறுதியாக இவர் கடந்த ஆண்டு மஹியங்கனையில் நடைபெற்ற தேசிய விளையாட்டு விழா மரதன் ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றமை குறிப்பிடத்தக்கது.

அதேபோல, முன்னதாக இந்த ஆண்டு முற்பகுதியில் நடைபெற்ற இராணுவ அரை மரதனில் தங்கப் பதக்கம் வென்ற குமார் சண்முகேஸ்வரன், கடந்த ஏப்ரல் மாதம் சீனாவில் நடைபெற்ற ஆசிய மரதன் ஓட்ட சம்பியன்ஷிப்பில் வெள்ளிப் பதக்கத்தை வென்று அசத்தியிருந்தார்.

நேற்று நடைபெற்ற மரதன் ஓட்டத்தில் ஏ. சந்தன (ஊவா மாகாணம் 2:25.18) வெள்ளிப் பதக்கத்தையும், தலவாரிஸ் ரத்னபால (கிழக்கு மாகாணம் 2:30.46) வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.

இதனிடையே, பெண்கள் பிரிவில் தங்கம் மற்றும் வெள்ளிப் பதக்கத்தை மத்திய மாகாணம் சார்பில் பங்குகொண்ட வத்சலா மதுஷானி ஹேரத் (2.53.42) மற்றும் சர்மினி ஹேரத் (3.00.21) தனதாக்கிக்கொள்ள, வெண்கலப் பதக்கத்தை ஊவாக மாhகாணத்தைச் சேர்ந்த நிமேஷா நிதர்ஷனி (3.02.32) சுவீகரித்தார்.

இந்த நிலையில், பெண்கள் பிரிவில் மத்திய மாகாணம் சார்பாக போட்டியிட்ட வேலு க்ரிஷாந்தினி (3:14.15) 7ஆம் இடத்தைப் பெற்றார்.

இது இவ்வாறிருக்க, இம்முறை தேசிய விளையாட்டு விழாவின் ஓர் அங்மான ஆண், பெண் இருபாலாருக்குமான சைக்கிளோட்டப் போட்டி நேற்று ஹிக்கடுவ பிரதேச செயலகத்திற்கு முன்பாக நடைபெற்றது. இதன் ஆண்கள் பிரிவில் மேல் மாகாணத்தைச் சேர்ந்த டி.எஸ்.சி ஜயசிங்க (04 மணி. 07.01 செக்.) முதலிடத்தைப் பெற்றுக்கொள்ள, வட மத்திய மாகாணத்தைச் சேர்ந்த எஸ். வீரசிங்க மற்றும் கே சன்ஜுல ஆகிய இருவரும் முறையே 2ஆவது, 3ஆவது இடங்களைப் பிடித்தனர்.

இதனிடையே 55.3 கி.மீ. தூரத்தைக் கொண்ட பெண்களுக்கான சைக்கிளோட்டப் போட்டியில் மேல் மகாணத்தைச் சேர்ந்த வீராங்கனைகள் முதல் 3 இடங்களையும் பிடித்து அசத்தினர். இதில் எஸ். பெரேரா (ஒரு மணி. 46.00 செக்.) முதலிடத்தையும், ஆகஷா சந்தமினி இரண்டாவது இடத்தையும், பன்ச்சாலி சுலோச்சனா மூன்றாமிடத்தையும் பெற்றுக்கொண்டனர்.

இந்த நிலையில், இம்முறை தேசிய விளையாட்டு விழாவின் மற்றுமொரு அங்கமான வேகநடைப் போட்டி இ;ன்று (20) நடைபெற்றது. இதில் ஆண்கள் பிரிவில் ஊவா மாகாணத்தைச் சேர்ந்த ஆர்.எம்.டி ருக்மாலும் (ஒரு மணி. 38.34 செக்.) பெண்கள் பிரிவில் சப்ரமுகவ மாகணத்தைச் சேர்ந்த ஹஷினி லக்ஷானியும் (ஒரு மணி 49.25 செக்.) தங்கப் பதக்கத்தை தனதாக்கிக் கொண்டனர். அதேபோல, பெண்கள் பிரிவில் முதல் 3 இடங்களையும் சப்ரமுகவ மாகாணத்தைச் சேர்ந்த வீராங்கனைகள் பெற்றுக்கொண்டமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

அதுமாத்திரமின்றி, பெண்கள் பிரிவில் 8ஆவது இடத்தை வட மாகாணத்தைச் சேர்ந்த ஜே. தமிழரசியும் (2 மணி 21.40 செக்.) 10ஆவது இடத்தை அதே மாகாணத்தைச் சேர்;ந்த ஆர். தனுஹியா (2 மணி. 29.11 செக்.) பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இம்முறை தேசிய விளையாட்டு விழா மரதன், சைக்கிளோட்டம் மற்றும் வேகநடை ஆகிய போட்டி நிகழ்ச்சிகளுக்கு வழக்கம் போல நெஸ்லே லங்கா நிறுவனத்தின் நெஸ்டமோல்ட் பூரண அனுசரணை வழங்கியதுடன், முதல் 10 இடங்களைப் பெற்றுக்கொண்ட வீரர்களுக்கு பணப்பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.

>> மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க <<