யாழ் சென். ஜோன்ஸ் கல்லூரிக்கு இலகு வெற்றி

577

களனி சிறி தம்மாலோக்க கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி ஆகியவற்றின் 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணிகள் இடையே நடைபெற்று முடிந்திருக்கும், ஒருநாள் மோதலில் சென். ஜோன்ஸ் கல்லூரி அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றிருக்கின்றது. 

டினோஷனின் சகலதுறை ஆட்டத்துடன் சென். ஜோன்ஸ் கல்லூரி அணி வெற்றி

டிவிஷன் – II பாடசாலை கிரிக்கெட் தொடரின் அங்கமாக அமையும் இந்த ஒருநாள் போட்டி இன்று (29) கிரின்திவெல உபாலி குணரட்ன மைதானத்தில் ஆரம்பமாகியது. 

தொடர்ந்து போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற சென். ஜோன்ஸ் கல்லூரி அணியின் தலைவர் தெய்வேந்திரம் டினோஷன் முதலில் துடுப்பாடும் சந்தர்ப்பத்தினை சிறி தம்மாலோக்க அணிக்கு வழங்கியிருந்தார்.

கடந்த வாரம் வத்தளை லைசியம் கல்லூரி அணி வீரர்களை தமது கடைசி டிவிஷன்-II மோதலில் வீழ்த்தியிருந்த, சென். ஜோன்ஸ் கல்லூரி அணியினர் அதே உத்வேகத்துடன் இப்போட்டியினையும் ஆரம்பம் செய்தனர். 

அதன்படி, போட்டியில் நாணய சுழற்சிக்கு அமைவாக முதலில் துடுப்பாடிய சிறி தம்மாலோக்க கல்லூரி அணிக்கு, சென். ஜோன்ஸ் கல்லூரி அணியின் பந்துவீச்சாளர்கள் ஆரம்பத்தில் இருந்தே அழுத்தம் வழங்கியிருந்தனர்.  

இதனால், 44.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் பறிகொடுத்த சிறி தம்மாலோக்க கல்லூரி அணியினர் 134 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டனர். 

தம்மாலோக்க கல்லூரி அணியின் துடுப்பாட்டம் சார்பில் லக்சித்த பொத்தேஜூ 6 பௌண்டரிகள் அடங்கலாக 33 ஓட்டங்கள் பெற்றிருந்ததே வீரர் ஒருவர் அவரது தரப்பில் பெற்ற கூடுதல் ஓட்டங்களாக பதிவானது. 

மறுமுனையில் அசத்தலாக செயற்பட்ட சென். ஜோன்ஸ் கல்லூரி அணியின் பந்துவீச்சு சார்பாக அன்டன் சரண், தமிழ்க்கதிர் அபிரஞ்சன் மற்றும் தியாகராஜா வினோஜன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்திருந்தனர். 

ஆறு பந்துகளில் ஆறு சிக்ஸர்கள் விளாசிய திசர பெரேரா

பின்னர், போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 135 ஓட்டங்களை அடைவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய யாழ்ப்பாணம் சென். ஜோன்ஸ் கல்லூரி அணியினர் அதனை வெறும் 18 ஓவர்களில் 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து அடைந்தனர். 

சென். ஜோன்ஸ் கல்லூரியின் வெற்றிக்கு பந்துவீச்சு போன்று துடுப்பாட்டத்திலும் உதவியாக இருந்த தியாகராஜா வினோதன் அரைச்சதம் பூர்த்தி செய்து 9 பௌண்டரிகள், ஒரு சிக்ஸர் அடங்கலாக 63 ஓட்டங்களைப் பெற்றிருந்தார். மறுமுனையில், அதிரடியாக துடுப்பாடிய அன்தோனிப்பிள்ளை சுகேதன் வெறும் 16 பந்துகளுக்கு 6 சிக்ஸர்கள் அடங்கலாக 41 ஓட்டங்களை அதிரடியாகப் பெற்று தனது தரப்பின் வெற்றிக்கு பங்களிப்புச் செய்தார். 

சிறி தம்மாலோக்க கல்லூரி அணியினது பந்துவீச்சு சார்பில் கவிந்து மல்ஷான், ஹசிந்து பிரசாத் மற்றும் சுபுன் மலிந்து ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீதம் சாய்த்தும் அவர்கள் அனைவரதும் பந்துவீச்சு வீணானது. 

போட்டியின் சுருக்கம்

சிறி தம்மாலோக்க கல்லூரி – 134 (44.3) லக்ஷித்த பொத்தேஜூ 33, தியாகராஜா வினோதன் 11/3, அன்டன் சரண் 28/3, தமிழ்க்கதிர் அபிரஞ்சன் 31/3

சென். ஜோன்ஸ் கல்லூரி – 135/3 (18) தியாகராஜா வினோஜன் 63, அன்தோனிப்பிள்ளை சுகேதன் 41, சுபுன் மலிந்து 12/1 

முடிவு – சென். ஜோன்ஸ் கல்லூரி அணி 7 விக்கெட்டுக்களால் வெற்றி 

மேலும் கிரிக்கெட் செய்திகளுக்கு…