இலங்கை இளையோர் தரப்பை வெற்றிப் பாதைக்கு வழி நடத்திய கமில் நிஷார

1006
Kamil Nishara

கொழும்பு கோல்ட்ஸ் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற 16 வயதுக்கு உட்பட்ட இலங்கை அபிவிருத்தி அணிக்கும் இங்கிலாந்து வாரிய பன்பரி அணிக்குமிடையிலான கிரிக்கெட் போட்டியில் இலங்கை கனிஷ்ட அணி வெற்றி பெற்றுள்ளது.

துடுப்பாட்டத்துக்கு உகந்த குறித்த மைதானத்தில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து பன்பரி அணித் தலைவர் முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தார். அந்த வகையில் களமிறங்கிய அவ்வணிக்கு  47 ஓவர்களுக்குள் சகல விக்கெட்டுகளையும் இழந்து 195 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொள்ளக் கூடியதாக இருந்தது.

அவ்வணி சார்பாக நிலைத்து நின்று துடுப்பாடிய பென் சார்ல்ஸ் அரைச் சதம் கடந்தார். மறுமுனையில் இருந்து அவருக்கு ஒத்தாசை வழங்கிய சாம் டார்சி நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி பெறுமதி மிக்க வகையில் 45 ஓட்டங்களை அணி சார்பாக பதிவு செய்தார்.

மழையின் குறுக்கீட்டால் கைநழுவிச் சென்ற இலங்கையின் வெற்றி வாய்ப்பு

தம்புள்ள ரங்கிரி சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கு இடையிலான…

இங்கிலாந்து அணியின் துடுப்பாட்ட வீரர்களை சாவாலுக்கு உட்படுத்திய ரோஹான் சஞ்சய மற்றும் அவிஷ்க தறிந்து ஆகியோர் வலிமை மிக்க இங்கிலாந்து அணியை துவம்சம் செய்து, தலா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினர்.    

பின்னர் 196 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு களமிறங்கிய இலங்கை வாரிய அணி சார்பாக கமில் நிஷார ஆட்டமிழக்காமல் 88 ஓட்டங்களையும், அவிஷ்க பெரேரா 40 ஓட்டங்களையும் பெற்றனர். எனினும் ஏனைய வீரர்கள் அதிகளவான ஓட்டங்களைப் பெறாமல் ஆட்டமிழந்து சென்றனர்.  

எனினும் போட்டியின் நிறைவில் இலங்கை இளையோர் தரப்பு 6 விக்கெட்டுக்களால் இலகுவான வெற்றியைப் பதிவு செய்தது.

இங்கிலாந்து பன்பரி கனிஷ்ட அணி சார்பாக சிறப்பான பந்து வீச்சை வெளிப்படுத்தியிருந்த ஜாக் மோர்லி 31 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

போட்டியின் சுருக்கம்

இங்கிலாந்து பன்பரி அணி : 195 (46.3) பென் சார்ல்ஸ் வொர்த் 64, சாம் டார்சி 45, ஹம்மி கோட்ரி 21*, ரோஹான் சஞ்சய 3/21, அவிஷ்க தறிந்து 3/34.

இலங்கை அபிவிருத்தி அணி  – 198/4 (39.2) கமில் நிஷார 88*, அவிஷ்க  பெரேரா  40, முஹமத் ஷம்மாஸ் 22, ஜாக் மோர்லி 2/31.