தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் தொடர் இரத்து

106

நாட்டில் தற்போது வேகமாக பரவி வருகின்ற கொவிட் – 19 வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நவம்பர் மாதம் கொழும்பில் நடைபெறவிருந்த  தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் போட்டிகளை இரத்து செய்வதாக இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனம் இன்று (31) உத்தியோகப்பூர்வமாக அறிவித்தது. 

அத்துடன், எதிர்வரும் டிசம்பர் மாதம் முற்பகுதியில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த 98ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரை டிசம்பர் மாதம் 26ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கால மதிப்பீடு மெய்வல்லுனர் போட்டிகள் ஒத்திவைப்பு

கொவிட் – 19 வைரஸ் காரணமாக இலங்கையில் இதுவரை எந்தவொரு தேசிய மட்ட மெய்வல்லுனர் போட்டிகளும் நடைபெறவில்லை. 

முன்னதாக இம்மாதம் 10ஆம், 11ஆம் திகதிகளில் கதிர்காமத்தில் நடைபெறவிருந்த தேசிய விளையாட்டு விழாவின் மரதன், வேகநடை மற்றும் சைக்கிளோட்டப் போட்டிகள் கொவிட் – 19 வைரஸ் அச்சுறுத்தலினால் காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக விளையாட்டுத்துறை அமைச்சு அறிவித்திருந்தது.   

இதனையடுத்து இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற சுப்பர் மற்றும் தேசிய ஆகிய இரண்டு குழாங்களிலும் உள்ள தெரிவு செய்யப்பட்ட வீரர்களுக்கு மாத்திரம் நடத்தப்படும் விசேட கால மதிப்பீடு மெய்வல்லுனர் தகுதிகாண் போட்டிகள் இம்மாதம் 24ஆம், 25ஆம் திகதிகளில் கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டது

எனினும், நாட்டில் தற்போது வேகமாக பரவி வருகின்ற கொரோனா வைரஸ் காரணமாக குறித்த தகுதிகாண் போட்டிகளை காலவரையின்றி ஒத்திவைப்பதாக இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனம் கடந்த வாரம் அறிவித்தது.  

Video – முன்னணி வீரர்களின் வெளியேறல் LPL ரசிகர்களுக்கு ஏமாற்றமா?

இதனிடையே, இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தின் விசேட நிறைவேற்று குழுக் கூட்டம் இன்று (31) Zoom செயலி வாயிலாக இடம்பெற்றதுடன், இதன்போது இரண்டு முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்பட்டன

இதில், நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்திற் கொண்டு நவம்பர் மாதம் 21ஆம், 22ஆம் மற்றும் 28ஆம் ஆகிய தினங்களில் கொழும்பு சுகததாஸ விளையாட்டரங்கில் நடைபெறவிருந்த தேசிய கனிஷ்ட மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டித் தொடரை இரத்து செய்வதாக தீர்மானிக்கப்பட்டுள்ளதுமுன்னதாக இந்தத் தொடர் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெறவிருந்தமை குறிப்பிடத்தக்கது

இதுஇவ்வாறிருக்க, இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்தினால் எதிர்வரும் டிசம்பர் மாதம் 4ஆம், 5ஆம், 6ஆம் திகதிகளில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த 98ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரை குறித்த தினங்களில் நடத்தப் போவதில்லை என தீர்மானிக்கப்பட்டது

இதன்படி, நாட்டில் உள்ள சுகாதார நிலைமைகள் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்தால் தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரை டிசம்பர் மாதம் 26ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை நடத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இந்த கூட்டத்தின் போது தீர்மானிக்கப்பட்டுள்ளது

இராணுவ அரை மரதன் ஓட்டத்தில் சம்பியனாகிய சண்முகேஸ்வரன்

அத்துடன், குறித்த தொடரானது முதலில் கொழும்பு சுகததாஸ மைதானத்தில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டிருந்தது. எனினும், சுகாதார நிலைமைகளை கருத்திற் கொண்டு தியகம மஹிந்த ராஜபக்ஷ விளையாட்டரங்கில் குறித்த தொடரை நடத்துவதற்கு அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் மெய்வல்லுனர் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன

எதுஎவ்வாறாயினும், தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரை இலக்காகக் கொண்டு தனிப்பட்ட முறையில் பயிற்சிகளை முன்னெடுத்து வருகின்ற சுப்பர் மற்றும் தேசிய குழாம்களில் இடம்பிடித்துள்ள வீரர்கள் குறித்த தினத்தில் தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்பை நடத்துவதற்கான உறுதி மொழியை தமக்கு வழங்கும்படி இலங்கை மெய்வல்லுனர் சம்மேளனத்திடம் கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது

>>மேலும் பல மெய்வல்லுனர்  செய்திகளைப் படிக்க<<