ஜொப்ரா ஆச்சரின் பந்துவீச்சை எதிர்கொள்வது குறித்து கருத்து வெளியிட்ட டு பிளெசிஸ்

856
AFP

இங்கிலாந்து அணியுடன் விளையாடுகின்ற எந்தவொரு அணியாக இருந்தாலும், ஜொப்ரா ஆச்சர் வீசுகின்ற ஷோர்ட்  (Short) பந்துவீசினால் அது நிச்சயம் விக்கெட்டாக இருக்கும் என்பதை மறந்துவிட வேண்டாம் என தென்னாபிரிக்க அணியின் தலைவர் பாப் டு பிளெசிஸ் தெரிவித்தார்.

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் நேற்று (30) நடைபெற்ற முதலாவது லீக் போட்டியில் தென்னாபிரிக்க அணியை 104 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இங்கிலாந்து அணி அபார வெற்றி பெற்றது. பென் ஸ்டோக்ஸ் மற்றும் ஜொப்ரா ஆச்சர் ஆகியோர் அந்த வெற்றியில் முக்கிய பங்கு வகித்தனர்.

பென் ஸ்டோக்ஸின் திறமையைக் கண்டு ஈர்க்கப்பட்டேன் – மோர்கன்

குறித்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது. போட்டியின் முதலாவது ஓவரில் ஜொன்னி பேயார்ஸ்டேவின் விக்கெட்டை இம்ரான் தாஹிர் வீழ்த்தினாலும், அந்த அச்சுறுத்தலை தென்னாபிரிக்கா அணியால் நீடிக்க முடியவில்லை. இதனை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட இங்கிலாந்து அணி 311 ஓட்டங்களைக் குவித்து அசத்தியது.

இந்த நிலையில், பதிலுக்கு துடுப்பெடுத்தாடக் களமிறங்கிய தென்னாபிரிக்க அணி, இங்கிலாந்தின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் விக்கெட்டுகளை மளமளவென தாரைவார்த்து 207 ஓட்டங்களைப் பெற்று தோல்வியைத் தழுவியது. அத்துடன், உலகக் கிண்ணப் போட்டிகள் வரலாற்றில் தென்னாபிரிக்க அணியின் 2 ஆவது மோசமான தோல்வியாக இது பதிவாகியது.

இந்த நிலையில் போட்டியின் பிறகு இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு இங்கிலாந்து அணியுடனான தோல்வி குறித்து பாப் டு பிளெசிஸ் கருத்து தெரிவிக்கையில், ”312 ஓட்டங்களை துரத்தியடிக்கும் போது சிறந்ததொரு ஆரம்பத்தைப் பெற்றுக் கொள்ள வேண்டும். எனினும் துரதிஷ்டவசமாக ஹஷிம் அம்லாவுக்கு தலையில் பந்து தாக்கி மைதானத்தில் இருந்து வெளியேற நேரிட்டது. முதல் விக்கெட்டுக்காக சிறந்த இணைப்பாட்டமொன்றை மேற்கொண்டால் தான் உடைமாற்றும் (dressing room) அறையில் இருக்கின்ற வீரர்கள் உத்வேகத்துடன் அடுத்தடுத்து வந்து விளையாடுவார்கள். ஆனால் ஆரம்பத்திலேயே ஹஷிம் அம்லா மைதானத்திலிருந்து வெளியேறினார். அதன் பிறகு எய்டன் மார்கன், மற்றும் நானும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தோம்.

எனவே ஆரம்பத்திலேயே 3 விக்கெட்டுக்களை இழந்து தடுமாறினால் அடுத்து வரும் வீரர்களுக்கு துடுப்பெடுத்தாடுவதற்கு கடினமாக இருக்கும். அப்போது வெற்றி இலக்கும் மிகப் பெரியதாக இருக்கும். எனவே அந்த இலக்கை அடைவது மிகவும் கடினமாக அமையும். எனவே இப்போட்டியில் இங்கிலாந்து அணி எம்மைவிட சிறப்பாக விளையாடியிருந்தனர். உலகின் தலைசிறந்த ஒருநாள் அணியென்பதை நிரூபித்துக் காட்டினார்கள். எனவே இதுவொரு லீக் போட்டியாகும். எனவே எஞ்சியுள்ள போட்டிகளில் சிறப்பாக விளையாடி வெற்றி பெறுவதற்கு எதிர்பார்த்துள்ளோம்” என அவர் தெரிவித்தார்.

இதற்கிடையில், தென்னாபிரிக்க அணியின் முக்கிய 3 விக்கெட்டுக்களை வீழ்த்தியிருந்த ஜொப்ரா ஆச்சரின் பந்துவீச்சு தொடர்பில் அவர் கருத்து வெளியிடுகையில், அவர் 80 சதவீதம் மித வேகப் பந்துகளை வீசுவார். அதுவும் பௌண்சர் பந்துளாக இருக்கும். எனவே அவர் சோர்ட் பந்து வீசும்போது அவருடைய மற்றைய பந்துகளை விட வேகமாக வரும். எனவே துடுப்பாட்ட வீரர்கள் அவருடைய பந்துவீச்சு சைகையை நன்கு அவதானித்து விளையாட வேண்டும்.

உலகக் கிண்ணத் தொடரை வெற்றியுடன் ஆரம்பித்துள்ள இங்கிலாந்து

ஆகவே இங்கிலாந்து அணியுடன் எமக்கு மீண்டும் விளையாடுகின்ற சந்தர்ப்பம் கிடைத்தால், அதில் ஜொப்ரா ஆச்சர் சோர்ட் பந்துவீசினால் அது விக்கெட்டாக இருக்கும் என்பதை எமது வீரர்கள் ஞாபகத்தில் வைத்துக் கொள்ளுங்கள் என தெரிவித்தார்.

இதேநேரம், தென்னாபிரிக்க அணியின் பந்துவீச்சு குறித்து அவர் கருத்து வெளியிட்ட போது, ”இந்தப் போட்டியில் லுங்கி எங்கிடி சிறப்பாக பந்துவீசியிருந்தார். ஒரு சாதாரண வீரராக சமநிலையுடன் பந்துவீசியிருந்தார். அவர் அதில் அதிக தவறுகள் செய்யவும் இல்லை. ஒரு சில முன்பின் தவறுகள் இருந்தாலும் அது பரவாயில்லை. அதிலும் உலகின் தலைசிறந்த துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான ஜோஸ் பட்லரின் விக்கெட்டை அவர் கைப்பற்றியதும் பாராட்டுக்குரியது” என குறிப்பிட்டார்.

இங்கிலாந்து இன்னிங்ஸின் ஆரம்பத்தில், இம்ரான் தாஹிருக்கு பந்துவீச வாய்ப்பு வழங்கப்பட்டதுடன், அந்த அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஜொன்னி பேயார்ஸ்டோ இரண்டாவது பந்தில் ஆட்டமிழந்தார். இந்த தந்திரோபாய வியூகத்தை பற்றி ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு டு பிளெசிஸ் கருத்து தெரிவிக்கையில்,

”இதில் எந்தவொரு ஆச்சரியமும் இல்லை, அது ஒரு திட்டமாக இருந்தது, அதை நாங்கள் ஒரு வருடத்திற்கு முன்பே யோசித்து இருந்தோம், அதிலும் இங்கிலாந்துக்கு எதிராக விளையாடும் போது, இவ்வாறானதொரு வித்தியாசமான திட்டத்தை நாங்கள் முன்னெடுத்தோம்” என்றார்.

இதேவேளை, எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (02) நடைபெறவுள்ள பங்களாதேஷ் அணியுடனான 2 ஆவது லீக் ஆட்டத்தில் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஹஷிம் அம்லா விளையாடுவார் என அவர் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்தார்.  

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<