சாதனைகளுடன் தரவரிசையில் முதல் இடத்திற்கு வந்த பும்ரா

168

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அபாரமாக பந்துவீசி 6 விக்கெட்டுகளை வீழ்த்திய ஜஸ்பிரித் பும்ரா, ICC ஒருநாள் பந்துவீச்சாளர்களுக்கான தரவரிசையில் மீண்டும் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

சுற்றுலா இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையில் கெனிங்டன் ஓவல் மைதானத்தில் நேற்றுமுன்தினம் (12) நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்தப் போட்டியில் பந்துவீச்சில் மிரட்டிய பும்ரா 19 ஓட்டங்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி பல சாதனைகளை முறியடித்தார்.

இது இவ்வாறிருக்க, ICC நேற்று (13) வெளியிடப்பட்டுள்ள ஒருநாள் போட்டிக்கான சிறந்த பந்து வீச்சாளர்கள் தரவரிசைப் பட்டியலில் பும்ரா ஐந்து இடங்கள் முன்னேறி நியூசிலாந்து வீரர் ட்ரெண்ட் போல்ட்டை பின்னுக்குத் தள்ளி 718 புள்ளிகளை எடுத்து முதலிடத்தைப் பிடித்துள்ளார் .

இறுதியாக, பும்ரா கடந்த 2020ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ICC ஒருநாள் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்திருந்தார்.

இதனிடையே, ICC ஒருநாள் போட்டி தரவரிசைப் பட்டியலில் அதிக நாட்கள் முதலிடம் பிடித்த இந்திய பந்துவீச்சாளர் மற்றும் கபில்தேவுக்கு பிறகு ICC தரவரிசையில் முதலிடம் பிடித்துள்ள இந்திய வேகப் பந்துவீச்சாளர் என்ற பெருமைகளை பும்ரா பெற்றுள்ளார்.

அத்துடன், தற்போது ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகள் தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்கள் பிடித்துள்ள மூன்றாவது பந்துவீச்சாளர் பும்ரா ஆவார்.

இதேவேளை, இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்திய மொஹமட் ஷமி, ஒருநாள் தரவரிசையில் மூன்று இடங்கள் முன்னேறி 23ஆவது இடத்தை பிடித்துள்ளார்.

ICC ஒருநாள் தரவரிசையில் நியூசிலாந்தின் டிரெண்ட் போல்ட் 712 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும், பாகிஸ்தான் அணியின் சஹீன் அப்ரிடி மூன்றாவது இடத்திலும் உள்ளனர்.

அதேபோல, இங்கிலாந்துக்கு எதிராக 76 ஓட்டங்கள் அடித்த ரோஹித் சர்மா ஒருநாள் துடுப்பாட்ட வீரர்களுக்காண தரவரிசைப் பட்டியலில் நான்காவது இடத்தையும், அதே போட்டியில் 31 ஓட்டங்கள் அடித்த ஷிகர் தவான், ஒரு இடம் முன்னேறி தரவரிசைப் பட்டியலில் 12ஆவது இடத்தையும் பிடித்துள்ளனர்.

இது இவ்வாறிருக்க, T20I போட்டியில் சிறந்த துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசைப் பட்டியலை ICC வெளியிட்டுள்ளது. அதன்படி பாகிஸ்தான் வீரர்களான பாபர் அசாம் மற்றும் மொஹமட் ரிஸ்வான் ஆகிய இருவரும் முதலிரெண்டு இடங்களை தக்கவைத்துக் கொள்ள, தென்னாபிரிக்காவின் எய்டன் மார்க்ரம் 3ஆவது இடத்தில் உள்ளார் இதனிடையே, இங்கிலாந்துக்கு எதிரான 3ஆவது T20I போட்டியில் சதமடித்த இந்திய வீரர் சூர்ய குமார் யாதவ் 5ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

இந்த நிலையில், ICC ஒருநாள் அணிகளுக்கான தரவரிசைப் பட்டியலில் இந்திய அணி முன்னேறியுள்ளது. இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது போட்டியின் வெற்றிக்குப் பிறகு இந்திய அணி பாகிஸ்தானைப் பின்னுக்குத் தள்ளி 108 புள்ளிகள் பெற்று 3ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.

இந்தப் பட்டியலில் 127 புள்ளிகள் பெற்று நியூசிலாந்து அணி முதலிடத்திலும், இங்கிலாந்து அணி 122 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும் உள்ளது. பாகிஸ்தான் அணி 106 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது.

>>  மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<