பிளே ஓப் வாய்ப்பை தவறவிட்ட நல்லூர்; பந்தேர்ஸிற்காக அரைச்சதம் கடந்த சந்தோஷ்

168

முதலாவது ஜெப்னா சுப்பர் லீக் தொடரின் இறுதிக் குழு நிலைப் போட்டிகள் கடந்த வாரத்துடன் நிறைவிற்கு வந்திருக்கின்றன. அதனடிப்படையில் தோல்விகள் ஏதுமின்றி முறையே குழு A மற்றும் B இல் முன்னிலை வகிக்கும் ஜெப்னா பந்தேர்ஸ் மற்றும் வேலணை வேங்கைகள் முதலாவது தகுதிப்போட்டியிலும், குழு நிலை போட்டிகளில் ஒரு தோல்வியுடன் இரண்டாவது இடத்திலிருக்கும் அரியாலை வோரியர்ஸ் மற்றும் கொக்குவில் ஸ்டார்ஸ் விலகல் போட்டியிலும் சனிக்கிழமை (1) மோதவுள்ளன. அதேவேளை,  மறுநாளான ஞாயிற்றுக்கிழமை (2) காலையில் இரண்டாவது தகுதிப்போட்டியும் இடம்பெறவுள்ளது.

பிளே ஓப் சுற்றில் ஜெப்னா பந்தேர்ஸ், அதிரடியில் வென்ற நல்லூர் புறோங்கோஸ்

அரியாலை வோரியர்ஸ் எதிர் நல்லூர் புறோங்கோஸ்

இந்த போட்டியில் வெற்றிபெறும் அணி பிளே ஓப் சுற்றுக்கு தகுதிபெறும் என்ற நிலையில், நல்லூர் புறோங்கோஸ் மற்றும் அரியாலை வோரியர்ஸ் அணிகள் தமது இறுதி குழு நிலை போட்டியில் மோதியிருந்தன.

முதலாவதாக துடுப்பெடுத்தாடுவதற்கு பணிக்கப்பட்ட நல்லூர் புறோங்கோஸ், அணித்தலைவர் ஜேம்ஸினது விக்கெட்டினை 18 ஓட்டங்களுக்கு பறிகொடுத்தனர். மூன்றாவது இலக்கத்தில் துடுப்பெடுத்தாடுவதற்கு களம் நுழைந்த முன்னாள் மத்திய கல்லூரி அணித்தலைவர் பிரியலக்ஷன் ஒரு முனையில் ஓட்ட எண்ணிக்கையினை அதிகரிக்க மறுமுனையில் சீரான இடைவெளியில் விக்கெட்டுக்கள் வீழ்த்தப்பட நல்லூர் புறோங்கோஸ் 156 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர்.

இளம் துடுப்பாட்ட வீரர் பிரியலக்ஷன் 74 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்திருந்தார். பந்துவீச்சில் ஜெரிக் துஷாந்த் மற்றும் லோகதீஷ்வர் தலா 2 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

பதிலுக்கு துடுப்பாட களம் நுழைந்த அரியாலை வோரியர்ஸின் முதலிரு விக்கெட்டுக்களையும், முதலாவது ஓவரிலேயே பிரபவன் வீழ்த்தினார். மத்திய வரிசையில் ஜெரிக் துஷாந்த், கோபிராம் மற்றும் பிரியலக்ஷன் ஆகியோர் பெற்ற ஓட்டங்களின் துணையுடன் போட்டியை அரியாலை வீரர்கள் நகர்த்திக் கொண்டிருந்தனர்.

16 ஆவது ஓவர் நிறைவில் அரியாலை வோரியர்ஸிற்கு வெறுமனே 3 விக்கெட்டுக்கள் கைவசமிருக்கையில் 46 ஓட்டங்கள் பெற வேண்டும் என்ற நிலையில் புறோங்கோஸிற்கு சாதகமாக போட்டி நகர்ந்தது.

அடுத்த ஓவரில் 10 ஓட்டங்களை மட்டும் நோபேர்ட் விட்டுக்கொடுக்க, ஜெம்ஸ் ஜான்சன் வீசிய 17 ஆவது ஓவரில் மதுசன் 22 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து  இறுதிப் பந்தில் ஆட்டமிழந்தார்.

பிரபவன் வீசிய இறுதி ஓவருக்கு முன்னைய ஓவரில் இரண்டு சிக்ஸர்களை பெற்றுக்கொடுத்த லினோர்த்தன் போட்டியை தம் அணியின் பக்கம் மாற்றினார்.

சுஜனது இறுதி ஓவரின் மூன்றாவது பந்தில் வெற்றி இலக்கினை அடைந்த அரியாலை வோரியேர்ஸ் பிளே ஓப் சுற்றுக்கு தகுதிபெற்றது.

ஆட்டநாயகன் – ஜெரிக் துஷாந்த் (அரியாலை வோரியர்ஸ்)

போட்டியின் சுருக்கம்

நல்லூர் புறோங்கோஸ் 156/7 (20) – பிரியலக்சன் 74, சிம்சன் 23, லோகதீஸ்வர் 2/17, ஜெரிக் துஷாந் 2/32

அரியாலை வோரியர்ஸ் 157/8 (19.3) – ஜெரிக் துஷாந்த் 33, செல்டன் 28*, மதுசன் 23, ஜெம்ஸ் ஜான்சன் 4/33, பிரபவன் 2/35

போட்டி முடிவு – அரியாலை வோரியேர்ஸ் அணி 2 விக்கெட்டுக்களால் வெற்றி

போட்டியின் புகைப்படங்களைப் பார்வையிட


ஜெப்னா பந்தேர்ஸ் எதிர் பொயின்ட் பிட்றோ சுப்பர் கிங்ஸ்

ஜெப்னா பந்தேர்ஸ் அணி ஏற்கனவே பிளே ஓப் சுற்றுக்கு தகுதிபெற்ற நிலையிலும், பொயின்ட் பிட்றோ சுப்பர் கிங்ஸ் தொடரிலிருந்து வெளியேறிய நிலையிலும் இரு அணிகளுக்குமிடையிலான போட்டி இடம்பெற்றிருந்தது.

முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு அழைக்கப்பட்ட சுப்பர் கிங்ஸ் அணியினர், சாம்பவன் மற்றும் கதியோனினது சுழல் பந்துக்கு விக்கெட்டுக்களை பறிகொடுத்தபோதும், சஜீகன் (34), சாகித்தியன் (28) ஆகியோரது துடுப்பாட்டத்தின் உதவியுடன் 153 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர்.

பந்தேர்ஸ்ஸிற்காக கதியோன் 3 விக்கெட்டுக்களையும், சாம்பவன் 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தியிருந்தனர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஜெப்னா பந்தேர்ஸ், முன்னாள் யாழ் இந்துக் கல்லூரி வீரரான சந்தோஷினது 87 ஓட்டங்கள் மற்றும் தொடர் முழுவதுமாக சோபித்து வரும் மோகன்ராஜின் 47 ஓட்டங்களுடனும் 16 ஆவது ஓவரில் வெற்றி இலக்கை அடைந்தது.

பந்துவீச்சில் உமைசுதனிற்கு 2 விக்கெட்டுக்கள் கிடைத்திருந்தது.

தொடர்ச்சியான மூன்றாவது வெற்றியுடன் வேலணை வேங்கைகளுக்கு எதிரான முதலாவது தகுதிப்போட்டிக்கு ஜெப்னா பந்தேர்ஸ் அணி தகுதிபெற்றுள்ளது.

ஆட்டநாயகன் – சந்தோஷ் (ஜெப்னா பந்தேர்ஸ்)

போட்டியின் சுருக்கம்

பொயின்ட் பிட்றோ சுப்பர் கிங்ஸ் – 153 (20) – சஜீகன் 34, சாகித்தியன் 28, கதியோன் 3/34,  சாம்பவன் 2/20

ஜெப்னா பந்தேர்ஸ் – 155/4 (15.2) – சந்தோஷ் 87* மோகன்ராஜ் 47, உமைசுதன் 2/21

போட்டி முடிவு ஜெப்னா பந்தேர்ஸ் 6 விக்கெட்டுக்களால் வெற்றி

போட்டியின் புகைப்படங்களைப் பார்வையிட

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<