19 வயதின்கீழ் பிரிவு 3 இறுதிப்போட்டிக்கு யாழ் மத்திய கல்லூரி தெரிவு

U19 SCHOOLS CRICKET TOURNAMENT 2020/22

713

இலங்கை பாடசாலை அணிகளுக்கு இடையிலான 19 வயதின்கீழ் பிரிவு 3 கிரிக்கெட் போட்டித்தொடரின் முதல் அரையிறுதிப் போட்டியில் ஹங்வெல்ல இராஜசிங்க மத்திய கல்லூரி அணிக்கு எதிராக 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற யாழ்.மத்திய கல்லூரி அணி தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது.

இதற்கு முன்னர் இடம்பெற்ற காலிறுதிப் போட்டியில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி எந்தேரமுல்ல சென். ஜோசப் கல்லூரிக்கு எதிராக 10 விக்கெட் வித்தியாசத்தில் இலகு வெற்றியை பெற்றது. இராஜசிங்க மத்திய கல்லூரி வீரர்கள் தமது காலிறுதியில் மதகமை புனித மரியார் கல்லூரி அணிக்கு எதிராக 6 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றனர்.

இந்நிலையில், சனிக்கிழமை (27) கொழும்பு நாலந்த கல்லூரி மைதானத்தில் இடம்பெற்ற இந்த அரையிறுதிப் போட்டியின் நாணய சுழற்ச்சியில் வெற்றிபெற்ற யாழ் மத்திய கல்லூரி அணியின் தலைவர் இந்துஜன் முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தார்.

இதன்படி முதலில் துடுப்பாடிய இராஜசிங்க அணி வீரர்கள் யாழ் வீரர்களின் பந்துவீச்சுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் முதல் ஆறு விக்கெட்டுகளையும் வெறும் 27 ஓட்டங்களுக்கு இழந்தனர்.

எனினும், ஏழாவது விக்கெட்டுக்கு இசுரு உதேஷ் மற்றும் பிரவீன் மனீஷ ஆகியோர் இணைந்து பெற்ற 48 ஓட்ட இணைப்பாட்ட உதவியுடன் இராஜசிங்க மத்திய கல்லூரி வீரர்கள் 47.2 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 104 ஓட்டங்களை பெற்றனர்.

அந்த அணிக்கு இசுரு உதேஷ் 35 ஓட்டங்களையும் பிரவீன் மனீஷ 28 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றார்.

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் பந்துவீச்சில் நியூடன் 3 விக்கெட்டுக்களையும், இந்துஜன் மற்றும் கௌதம் ஆகியோர் தலா 2 விகெட்டுக்களையும் கைப்பற்றினர்.

பின்னர் 105 என்ற வெற்றியிலக்கை நோக்கி களமிறங்கிய யாழ் மாத்திய கல்லூரி அணி வீரர்கள் 20.3 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தனர்.

இந்த வெற்றிக்கு துடுப்பாட்டத்தில் பிரகாசித்த ஆரம்ப துடுப்பாட்ட சாரங்கன் 50 ஓட்டங்களுடன் அரைச் சதம் கடந்தார். ஆரம்ப விக்கெட்டுக்காக சாரங்கன் மற்றும் விதுஷன் ஜோடி 70 ஓட்டங்களை பெற்றனர்.

பந்துவீச்சில் வீழ்த்தப்பட்ட 3 விக்கெட்டுகளையும் பிரவீன் மனீஷ கைப்பற்றினார்.

இந்த வெற்றியின் மூலம் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி அணி இந்த தொடரின் இறுதி போட்டிக்கு தெரிவாகியுள்ளது. இறுதிப்போட்டி அடுத்த வாரம் இடம்பெறும்.

போட்டியின் சுருக்கம்

இராஜசிங்க மத்திய கல்லூரி 104(47.2), இசுரு உதேஷ் 35, பிரவீன் மனீஷ 28, நியூடன் 3 விக்கெட்டுகள், இந்துஜன் 2 விக்கெட்டுகள், கௌதம் 2 விக்கெட்டுகள்

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி – 105 (20.3), சாரங்கன் 50,  பிரவீன் மனீஷ 3 விக்கெட்டுகள்

முடிவு – யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி