இங்கிலாந்து T20I அணிக்கு தலைவராகும் 21 வயது சகலதுறை வீரர்

England tour of Ireland 2025

47
Jacob Bethell

அயர்லாந்து அணிக்கெதிராக நடைபெறவுள்ளT20I தொடருக்கான இங்கிலாந்து அணியின் தலைவராக 21 வயது சகலதுறை இளம் வீரர் ஜேக்கப் பெத்தேல் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன் மூலம் அனைத்து வடிவங்களிலும் இங்கிலாந்து அணியின் இளைய வயது தலைவராக இடம்பிடித்து 136 ஆண்டுகால வயது சாதனையை முறியடித்துள்ளார்.

அயர்லாந்துக்கு அடுத்த மாதம் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இங்கிலாந்து அணி மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடரில் விளையாடுகிறது. இந்தத் தொடர் செப்டம்பர் 17, 19, 21 ஆகிய திகதிகளில் டப்ளினில் நடைபெறவுள்ளன.

இந்நிலையில் இந்த தொடருக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து T20I அணியின் வழக்கமான தலைவரான ஹெரி புரூக், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் மற்றும் T20I தொடர்களில் தலைவராக செயல்படவுள்ளதால், அவருக்கு இந்த தொடரில் ஓய்வளிக்க அந்நாட்டு தேர்வாளர்கள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதன் காரணமாக இங்கிலாந்து அணி இந்த தொடரில் இளம் வீரர் ஜேக்கப் பெத்தேல் (வயது 21) தலைமையில் களமிறங்க உள்ளது. இதன் மூலம் இங்கிலாந்து அணியின் இளம் வயது தலைவர் என்ற பெருமையை ஜேக்கப் பெத்தேல் பெற்றுள்ளார்.

இதற்கு முன்பு, 1889ஆம் ஆண்டு, மான்டி பௌடன் தனது 23 வயதில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் கேப்டனாக செயல்பட்டதே சாதனையாக இருந்தது. தற்போது, 136 ஆண்டுகளுக்குப் பிறகு அந்த சாதனையை ஜேக்கப் பெத்தேல் முறியடித்துள்ளார்.

பார்படாஸில் பிறந்த ஜேக்கப் பெத்தேல், ஒரு திறமையான இடது கை பேட்ஸ்மேன் மற்றும் இடது கை ஆர்த்தடாக்ஸ் பந்துவீச்சாளர் ஆவார். தனது 21 வயதிலேயே இங்கிலாந்து அணிக்காக மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் அறிமுகமாகிவிட்டார். கடந்த ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான இவர், மிகக் குறுகிய காலத்தில் தனது சிறப்பான ஆட்டத்தால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.

இங்கிலாந்து தேர்வாளர் லூக் ரைட் இதுபற்றி கூறுகையில், ‘ஜேக்கப் பெத்தேல் இங்கிலாந்து அணியில் இணைந்ததிலிருந்து தனது தலைமைப் பண்புகளால் அனைவரையும் கவர்ந்துள்ளார். அயர்லாந்துக்கு எதிரான இந்தத் தொடர், சர்வதேச அளவில் அவரது தலைமைப் பண்புகளை மேலும் வளர்த்துக்கொள்ள ஒரு சிறந்த வாய்ப்பாக அமையும்’ என்று தெரிவித்தார்.

ஜேக்கப் கிரஹம் பெத்தேல் என்ற இயற்பெயர் கொண்ட பெத்தேல் 2023 அக்டோபர் 23ஆம் திகதி மேற்கிந்தியத் தீவுகளில் உள்ள பார்படோஸில் பிறந்தார். இடது கை துடுப்பாட்டமும், இடது கை சுழல்பந்து வீச்சாளரான இவர், 20 வயதில் இங்கிலாந்து அணிக்காக ஆடிய 2-வது போட்டியிலேயே அவுஸ்திரேலியாவின் ஆடம் ஜம்பா வீசிய ஓவரில் 20 ஓட்டங்களை விளாசி சர்வதேச கிரிக்கெட்டில் தன் வரவை அறிவித்தார். 47 பந்துகளில் 90 ஓட்டங்களை விளாசி அந்தப் போட்டியில் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு வித்திட்டார். அதன் பிறகு நடைபெற்ற மேற்கிந்தியத் தீவுகளுடனான T20I தொடரில் 3 அரைச் சதங்கள் அடித்து தன் திறமையை வெளிப்படுத்தினார்.

அதேபோல, இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சம்பியன் பட்டம் வென்ற றோயல் சேலஞ்சரஸ் பெங்களூரு அணிக்காக விளையாடிய ஜேக்கப் பெத்தேல், இங்கிலாந்து 19 வயதுக்குட்பட்டோர் அணியிலும், வார்விக்ஷெயர் அணியின் 2-வது பதினொருவர் அணியிலும் தலைவராக இருந்த அனுபவம் பெற்றவர்.

13 வயதில் றக்பி விளையாடுவதற்காக புலமைப்பரிசில் ஒன்றைப் பெற்றுக்கொண்ட அவர், இங்கிலாந்துக்கு குடிபெயர்ந்தார். எனவே, இன்று இங்கிலாந்து அணியின் 3 வடிவ கிரிக்கெட்டிலும் எழுச்சி பெற்று தற்போது தலைவராகவும் உயர்வு பெற்றுள்ளார்.

இதனிடையே, 22 வயதான சொன்னி பேக்கர் தனது முதல் தடவையாக இங்கிலாந்து அணிக்காக அழைக்கப்பட்டுள்ளார். அவர் தென்னாப்பிரிக்காவுடன் நடைபெறவுள்ள ஒருநாள் அணியிலும், அயர்லாந்தை எதிர்கொள்ளும் T20I அணியிலும் இடம்பெற்றுள்ளார். அதேபோல, உள்ளூர் தொடர்களில் துடுப்பாட்டத் திறன்களை வெளிப்படுத்திய லெக்-ஸ்பின் சுழல்பந்து வீச்சாளர் ரெஹான் அஹமட்டும் ஒருநாள் மற்றும் T20I அணிகளுக்கு மீண்டும் அழைக்கப்பட்டுள்ளார். அவர் கடைசியாக இந்த வடிவங்களில் முறையே 2023 மற்றும் 2024இல் விளையாடியிருந்தார். இது தவிர, இடதுகை சுழல்;பந்து வீச்சாளர் டொம் ஹார்ட்லியும் அயர்லாந்தை எதிர்கொள்ளும் வு20ஐ அணிக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

அயர்லாந்து T20I இங்கிலாந்து அணி விபரம்

ஜேக்கப் பெத்தேல் (தலைவர்), ரெஹான் அஹமட், சொன்னி பேக்கர், டொம் பென்டன், ஜோஸ் பட்லர் (விக்கெட் காப்பாளர்), லியாம் டோசன், டொம் ஹார்ட்லி, வில் ஜெக்ஸ், சகிப் மஹ்மூத், ஜேமி ஓவர்டன், மேத்யூ பாட்ஸ், ஆதில் ரஷீத், பில் சோல்ட், லூக் வூட்.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<