ஹர்ரி புரூக்கின் அதிரடி சதத்தோடு சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் வெற்றி

113
Kolkata Knight Riders vs Sunrisers Hyderabad

இந்தியன் பிரீமியர் லீக் 2023 (IPL) தொடரின் 19ஆவது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியினை சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் 23 ஓட்டங்களால் வீழ்த்தியுள்ளது.

>> பஞ்சாப்பை வீழ்த்திய குஜராத் டைடன்ஸ்

இந்த வெற்றியுடன் 2023ஆம் ஆண்டுக்கான IPL தொடரில் தம்முடைய இரண்டாவது வெற்றியினை சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் பதிவு செய்து கொள்கின்றது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணிகள் இடையிலான IPL போட்டி நேற்று (14) கொல்கத்தா ஈடன் கார்டன் அரங்கில் ஆரம்பமாகியது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைவர் நிதிஷ் ரானா முதலில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியை துடுப்பாட பணித்திருத்தார். அதன்படி சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் ஹர்ரி புரூக்கின் அதிரடி சதத்தோடு 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுக்களை இழந்து 228 ஓட்டங்கள் எடுத்தது.

சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணியின் துடுப்பாட்டம் சார்பில் தன்னுடைய கன்னி IPL சதத்தினைப் பதிவு செய்த ஹர்ரி புரூக் 55 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 12 பௌண்டரிகள் அடங்கலாக 100 ஓட்டங்கள் பெற்றார். மறுமுனையில் சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணித் தலைவர் எய்டன் மார்க்ரம் 26 பந்துகளில் 5 சிக்ஸர்கள் மற்றும் 2 பௌண்டரிகள் அடங்கலாக 50 ஓட்டங்கள் எடுத்தார்.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பந்துவீச்சில் அன்ட்ரே ரஸல் 22 ஓட்டங்களுக்கு 03 விக்கெட்டுக்களை சுருட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட சவால் மிக்க 229 ஓட்டங்களை அடைய பதிலுக்கு துடுப்பாடிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியானது வெற்றிக்காக போராடிய போதும் 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 205 ஓட்டங்களையே எடுத்து போட்டியில் தோல்வியினைத் தழுவியது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் துடுப்பாட்டம் சார்பில் இறுதி வரை வெற்றிக்காக போராடிய ரிங்கு சிங் ஆட்டமிழக்காது 31 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 4 பௌண்டரிகள் உடன் 58 ஓட்டங்களப் பெற, அணித்தலைவர் நிதிஷ் ரானா 41 பந்துகளில் 6 சிக்ஸர்கள் மற்றும் 5 பௌண்டரிகள் அடங்கலாக 75 ஓட்டங்கள் எடுத்தமை குறிப்பிடத்தக்கது.

மறுமுனையில் சன்ரைஸர்ஸ் அணியின் பந்துவீச்சில் மயாங் மார்க்கண்டே மற்றும் மார்கோ ஜான்சன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் சாய்த்து தமது தரப்பு வெற்றியினை உறுதி செய்தனர். போட்டியின் ஆட்டநாயகனாக சன்ரைஸர்ஸ் அணிக்காக சதம் விளாசிய ஹர்ரி புரூக் தெரிவானார்.

போட்டியின் சுருக்கம்

சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் – 228/4 (20) ஹர்ரி புரூக் 100(55), எய்டன் மார்க்ரம் 50(26), அன்ட்ரே ரசல் 22/3(2.1)

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் – 205/7 (20) நிதிஷ் ரானா 75(41), ரிங்கு சிங் 58(31), மயான்க் மார்கண்டே 27/2(4), மார்கோ ஜான்சன் 37/2(4)

முடிவு – சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் 23 ஓட்டங்களால் வெற்றி

இம்முறை இடம்பெறவுள்ள இந்தியன் பிரீமியர் லீக் தொடரின் சகல போட்டிகளையும் இலங்கையின் முதல்தர விளையாட்டு இணையத்தளமான ThePapare.com ஊடாக (இலங்கையில் மாத்திரம்) நேரடியாகப் பார்வையிடலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<