இந்த பருவத்துடன் பார்சிலோனாவிலிருந்து விடைபெறும் இன்னியஸ்டா

726

பார்சிலோனா கால்பந்து ஜாம்பவான் அன்ட்ரெஸ் இன்னியஸ்டா இந்த பருவத்துடன் ஸ்பெயின் கழகத்தில் இருந்து வெளியேறப்போவதாக அறிவித்துள்ளார்.

பார்சிலோனா மத்தியகள வீரரான 33 வயதுடைய இன்னியஸ்டா 16 பருவங்களில் 669 போட்டிகளில் விளையாடியிருப்பதோடு அந்த அணிக்காக 31 கிண்ணங்களையும் ஸ்பெயினுக்காக மூன்று பிரதான தொடர்களையும் வென்றுள்ளார்.

அவர் சீன சுப்பர் லீக் போட்டிகளில் ஆடவிருப்பதாக கூறப்பட்டபோதும், அது பற்றி தொடர்ந்து மௌனம் காக்கும் இன்னியஸ்டா அடுத்த பருவத்தில் எங்கே விளையாடுவது என்பது பற்றி தெரிவிக்கவில்லை.

”நான் ஒருபோதும் பார்சிலோனாவுக்கு எதிராக விளையாடப்போவதில்லை, எனவே ஐரோப்பாவில் தொடர்ந்து விளையாட மாட்டேன்” என்று இன்னியஸ்டா தெரிவித்தார். ”நாம் இப்போது இந்த பருவத்தை முடித்துக் கொள்வோம், அது பற்றி பேச இன்னும் விடயங்கள் இருக்கின்றன” என்றார்.

இன்னியஸ்டா ஸ்பெயின் அணிக்காக 2010 உலகக் கிண்ணம், 2008 மற்றும் 2012 ஐரோப்பிய கிண்ணங்களை வென்றதோடு, நான்கு சம்பியன்ஸ் லீக் மற்றும் எட்டு லா லிகா பட்டங்களையும் வென்றுள்ளார். பார்சிலோனாவுக்காக ஒன்பதாவது லா லிகா பட்டத்தை வெல்லவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்வீடன் அணிக்கு ஏமாற்றம் அளித்த இப்ராஹிமோவிக்

”எனது முழு வாழ்நாளையும் இங்கே கழித்திருக்கும்போது இப்போது விடைபெற்றுச் செல்வதாக கூறுவது எனக்கு மிகக் கடினமாக உள்ளது” என்று தனது குடும்பத்தினர், சக வீரர்கள் மற்றும் அணி முகாமையாளர் ஏர்னஸ்டோ வெல்வர்டே பார்த்திருக்க ஊடகவியலாளர் மாநாட்டில் வைத்து இன்னிஸ்டா கூறினார்.  

தனது கண்ணீரைக் கட்டப்படுத்த போராடியபடி கடந்த சனிக்கிழமை அவர் மேலும் கூறியதாவது, ”நான் இப்போது இருப்பதற்கு காரணமான பார்சிலோனா மற்றும் லா மாசியாவுக்கு எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். வீரர்கள், பயிற்சியாளர்கள் என பலருடனும் நான் பேசினேன் அவர்களுக்கு என்ன வேண்டும் என்பது எனக்கு தெரியும் என்றாலும் எனக்கும் கழகத்திற்கும் உண்மையானவனாக இருக்க நான் முயற்சிக்கிறேன்” என்றார்.  

இன்னியஸ்டா இந்த பருவத்தில் பார்சிலோனா அணியுடன் அதிக பிணைப்புடன் விளையாடும் வீரராக காணப்படுகிறார். அந்த அணி அண்மையில் நடந்த கோபா டெல் ரே இறுதிப் போட்டியில் செவில்லா அணியை 5-0 என்ற கோல் வித்தியாசத்தில் வீழ்த்தி கிண்ணத்தை வென்றது.

பார்சிலோனா அணிக்கு இந்த பருவத்தில் இன்னும் ஐந்து போட்டிகள் எஞ்சியுள்ளன. எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் போட்டியில் டெபோர்டிவோ லா கொரூனா அணியிடம் தோல்வியை தவிர்த்தால் பார்சிலோன லா லிகா பட்டத்தை வெல்லும்.

தனது 12 வயதில் பார்சிலோனா அணியுடன் இணைந்த இன்னியஸ்டா தனது ஒட்டுமொத்த கால்பந்து வாழ்வையும் அந்த அணியுடனேயே செலவிட்டுள்ளார். பார்சிலோனா கழகத்திற்காக அதிக போட்டிகளில் விளையாடிய வீரர்கள் வரிசையில் சாவிக்கு (Xavi) அடுத்து இரண்டாவது இடத்தில் உள்ளார். மத்தியகள சக வீரரான சாவி 2015இல் கட்டாரின் அல் சாத் அணிக்குச் சென்றார்.