பாகிஸ்தான் T20I தொடரில் புதிய தலைவரை நியமித்துள்ள ஆஸி. அணி

59
JOSH INGLIS

பாகிஸ்தானுடன் நடைபெறவிருக்கும் T20I தொடரில் அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியினை தலைவராக வழிநடாத்த விக்கெட்காப்பு துடுப்பாட்டவீரரான ஜோஷ் இங்கிலீஷ் நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார்.

>>இலங்கை A அணியின் தலைவராகும் பசிந்து, நுவனிந்து<<

தற்போது அவுஸ்திரேலியா சென்றிருக்கும் பாகிஸ்தான் அணி அங்கே மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆடி வருகின்றது. இந்த ஒருநாள் தொடர் நிறைவடைந்த பின்னர் இரு அணிகளும் பங்கெடுக்கும் T20I தொடர் இடம்பெறவிருக்கின்றது.

இந்த T20I தொடருக்கான அவுஸ்திரேலிய குழாம் கடந்த வாரம் அறிவிக்கப்பட்ட போதிலும் தலைவர் யார் என்பது கூறப்பட்டிருக்கவில்லை. விடயங்கள் இவ்வாறு காணப்படும் நிலையிலையே 29 வயது நிரம்பிய ஜோஷ் இங்கிலீஷ் அவுஸ்திரேலிய T20I அணியின் தலைவராகப் பெயரிடப்பட்டிருக்கின்றார்.

அவுஸ்திரேலிய T20I அணியின் தலைவராக செயற்பட்டு வந்த மிச்சல் மார்ஷ் மற்றும் ட்ராவிஸ் ஹெட் ஆகியோர் குடும்ப விடுமுறை காரணமாக பாகிஸ்தான் T20 தொடரில் ஆடாததன் காரணமாகவே ஜோஷ் இங்கிலீஷிற்கு அணித்தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கின்றது.

அத்துடன் பாகிஸ்தான் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் பேட் கம்மின்ஸ், மிச்சல் ஸ்டார்க், ஜோஸ் ஹேசல்வூட், மார்னஸ் லபச்சேனே மற்றும் ஸ்டீவ் ஸ்மித் போன்ற சிரேஷ்ட வீரர்களுக்கு இந்திய டெஸ்ட் தொடர் காரணமாக ஓய்வு வழங்கப்படுவதனால் அந்தப் போட்டியிலும் அவுஸ்திரேலிய அணியினை ஜோஷ் இங்கிலீஷ் வழிநடாத்துவார் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

பாகிஸ்தான் – அவுஸ்திரேலிய அணிகள் இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடர் இம்மாதம் 14ஆம் திகதி பிரிஸ்பேனில் ஆரம்பமாகுகின்றமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<