இந்திய அணியின் அனுபவம் வாய்ந்த சுழல்பந்து வீச்சாளர்களில் ஒருவரான அமித் மிஸ்ரா அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இதன் மூலம் அவரது 25 ஆண்டுகால கிரிக்கெட் பயணம் முடிவுக்கு வந்துள்ளது.
தொடர்ச்சியான காயங்கள் காரணமாகவும், இளம் வீரர்களுக்கு வழிவிடும் நோக்கிலும், அனைத்து விதமான கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அவர் உருக்கமாகத் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் அனுபவ நட்சத்திர சுழல்பந்து வீச்சாளரான அமித் மிஸ்ரா கடந்த 2003 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அறிமுகமாகி 22 டெஸ்ட் போட்டிகள், 36 ஒருநாள் போட்டிகள் மற்றும் 10 T20I போட்டிகளில் விளையாடியுள்ளார். மூன்று வகையான இந்திய அணியிலும் இடம்பிடித்து விளையாடியிருந்த அவர் 156 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இளம் வீரர்களின் ஆதிக்கத்தால் அமித் மிஸ்ராவால் சர்வதேச போட்டிகளில் பெரிய அளவு சோபிக்க முடியாமல் போனது.
2003 இல் ஒருநாள் போட்டியிலும், 2008-ல் டெஸ்ட் போட்டியிலும் இந்தியாவிற்காக அறிமுகமானார் மிஸ்ரா. 2008 இல் அவுஸ்திரேலியாவுக்கு எதிராக தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். 2013 இல் ஜிம்பாப்வேக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரில் 5 போட்டிகளில் 18 விக்கெட்டுகளை வீழ்த்தி, ஜவகல் ஸ்ரீநாத்தின் உலக சாதனையைச் சமன் செய்தார். அதேபோல, 2014 ஐசிசி T20 உலகக் கிண்ணத்தில் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறவும் அவரது பந்துவீச்சு முக்கியக் காரணமாக அமைந்தது.
- ஆசியக்கிண்ணத்துக்கான இந்திய குழாம் அறிவிப்பு!
- மகளிர் ஒருநாள் உலகக் கிண்ண போட்டி அட்டவணையில் மாற்றம்
- ராஜஸ்தான் அணியின் பயிற்சியாளர் பதவியிலிருந்து ராகுல் டிராவிட் விலகல்
இந்திய அணிக்காக விளையாடியதை விட, ஐபிஎல் தொடரில்தான் அமித் மிஸ்ராவின் புகழ் உச்சிக்குச் சென்றது. ஐபிஎல் போட்டிகளில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை 162 போட்டியில் விளையாடியுள்ள அவர் 174 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். ஐபிஎல் வரலாற்றில் 3 முறை ஹெட்ரிக் விக்கெட் வீழ்த்திய ஒரே பந்துவீச்சாளர் இவர்தான். டெல்லி டேர்டெவில்ஸ் (2008), கிங்ஸ் லெவன் பஞ்சாப் (2011), மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (2013) என மூன்று வெவ்வேறு அணிகளுக்காக இந்தச் சாதனையை அவர் நிகழ்த்தியுள்ளார். மொத்தமாக 162 ஐபிஎல் போட்டிகளில் 174 விக்கெட்டுகளை வீழ்த்தி, தொடரின் அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் 7ஆவது இடத்தில் தனது பயணத்தை நிறைவு செய்துள்ளார். ஐபிஎல் இல் கடைசியாக ராஜஸ்தான் றோயல்ஸுக்கு எதிரான போட்டியில் லக்னௌ அணிக்காக விளையாடி ஒரு விக்கெட்டை வீழ்த்தியிருந்தார்.
குறிப்பாக, கடந்த 2017-ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்து வரும் 42 வயதான அமித் மிஸ்ரா இனியும் சர்வதேசப் போட்டிகளுக்கு திரும்ப வாய்ப்பு கிடைக்காது என்பதனால் சர்வதேசப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
தனது ஓய்வு குறித்துப் பேசிய அமித் மிஸ்ரா, “கிரிக்கெட்டில் எனது இந்த 25 ஆண்டு கால வாழ்க்கை மறக்க முடியாதது. இந்த நீண்ட பயணத்தில் எனக்கு ஆதரவளித்த பிசிசிஐ, ஹரியானா கிரிக்கெட் சங்கம், சக வீரர்கள், பயிற்சிக் குழுவினர், எனது குடும்பத்தினர் மற்றும் ரசிகர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். நான் களத்தில் இருந்த ஒவ்வொரு தருணமும் என் வாழ்நாள் முழுவதும் பொக்கிஷமாகப் போற்றப்படும் நினைவுகள்,” என்று கூறியுள்ளார்.
“சில நேரங்களில் அணியில் இடம்பெற்று இருப்பேன், சில நேரங்களில் இடம்பெறாமல் இருப்பேன். சில நேரங்களில் இறுதிப் பதினொருவர் அணியில் வாய்ப்பு கிடைக்கும், சில நேரங்களில் அந்த வாய்ப்பு இருக்காது. இப்படி அணிக்கு உள்ளேயும் வெளியேயும் இருந்தது நிச்சயம் ஒரு வீரராக எனக்கு விரக்தி அளித்தது. அதில் சந்தேகம் இல்லை. சில வீரர்கள் அணித்தலைவரின் விருப்பமான வீரராக இருக்கலாம். ஆனால், அது ஒரு விடயம் அல்ல. வாய்ப்பு கிடைக்கும் போது உங்கள் திறனை நீங்கள் நிரூபிக்க வேண்டும்” என அமித் மிஸ்ரா கூறியுள்ளார்.
எது எவ்வாறாயினும், கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றாலும், அதிலிருந்து முழுவதுமாக விலகப் போவதில்லை என்று தெரிவித்துள்ள அமித் மிஸ்ரா, பயிற்சி, வர்ணனை மற்றும் இளம் வீரர்களுக்கு வழிகாட்டுதல் போன்றவற்றில் ஈடுபட விரும்புவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<