ஆசியக்கிண்ணத் தொடரில் நேற்று (14) நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய வீரர்கள் பாகிஸ்தான் வீரர்களுடன் கைகுலுக்க மறுத்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
ஐக்கிய அரபு இராச்சியத்தின் டுபாயில் நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலகுவான வெற்றியை பெற்றது.
>>மகளிர் ஒருநாள் உலகக் கிண்ண நடுவர்கள் குழாத்தில் இரு இலங்கையர்கள்<<
இந்த போட்டி ஆரம்பித்து நாணய சுழற்சியில் ஈடுபட்ட போது இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணியின் தலைவர்கள் கைகுலுக்கவில்லை. இதற்கான காரணம் இந்திய கிரிக்கெட் சபை மற்றும் இந்திய அரசாங்கம் வீரர்களை கைகுலுக்க வேண்டாம் என அறிவுறுத்தியதாக இந்திய அணியின் தலைவர் சூர்யகுமார் யாதவ் குறிப்பிட்டார்.
கடந்த ஏப்ரல் மாதம் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையில் போர் பதட்டம் ஏற்பட்டிருந்தது. இதன்காரணமாக இந்தியா – பாகிஸ்தான் போட்டிகள் நடைபெறுவதில் சிக்கல்கள் இருந்தன.
எனினும் இருதரப்பு தொடர்களை தவிர்த்து ஐசிசி மற்றும் ஆசியக்கிண்ணம் போன்ற பொது தொடர்களில் விளையாட இந்திய அரசாங்கம் அனுமதித்திருந்தது.
இந்தநிலையில் நேற்று நடைபெற்ற போட்டி நிறைவடைந்த பின்னர் பாகிஸ்தான் வீரர்கள் கைகுலுக்க தயாராக இருந்த போதும், இந்திய வீரர்கள் கைகலுக்காமல் உடைமாற்றும் அறைக்கு சென்றனர். இதுதொடர்பில் பாகிஸ்தான் அணியின் பயிற்றுவிப்பாளர் மைக் ஹெஸன் தன்னுடைய கவலையை வெளியிட்டிருந்தார்.
அதேநேரம் இந்திய வீரர்கள் கைகுலுக்க மறத்த விடயம் தொடர்பில் பாகிஸ்தான் அணியின் முகாமையாளர் ஒரு முறைப்பாடொன்றையும் போட்டி மத்தியஸ்தரிடம் கையளித்துள்ளார்.
இதேவேளை இந்திய வீரர்கள் கைகலுக்க மறுத்ததன் காரணமாக பாகிஸ்தான் அணியின் தலைவர் சல்மான் அலி ஆகாஹ் போட்டி முடிவடைந்த பின்னர் ஊடக சந்திப்பில் கலந்துக்கொள்வதை தவிர்த்திருந்தார் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<




















