இந்தியாவிடம் படுதோல்வியடைந்த இலங்கை மகளிர்

57
India Women vs Sri Lanka Women,

ஐ.சி.சி மகளிர் டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை அணியுடன் நடைபெற்ற போட்டியில் 7 விக்கெட்டுக்களினால் அபார வெற்றி பெற்ற இந்திய அணி குழு A இல் முதலிடத்தை தக்கவைத்து அரையிறுதி வாய்ப்பை முழுமையாக உறுதி செய்துள்ளது.

அவுஸ்திரேலியாவில் கடந்த 21ஆம் திகதி ஆரம்பமான ஐ.சி.சி மகளிர் டி20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் தற்சமயம் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. அந்த வகையில் குழுநிலை ரீதியிலான 14ஆவது போட்டி இன்று (29) இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் மெல்பேர்னில் ஆரம்பமானது.

இலங்கை அணி ஏற்கனவே நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய மகளிர் அணிகளிடம் தோல்வியை தழுவிய நிலையிலும், இந்திய அணி ஏற்கனவே அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றிருந்த நிலையிலும் இன்றைய போட்டியில் களமிறங்கின. போட்டியில் நாயண சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது. 

இலங்கை அணியின் முதல் விக்கெட் மூன்றாவது ஓவரில் வீழ்த்தப்பட்டது. ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனை உமேஷா திமாஷினி வெறும் 2 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இந்நிலையில் இலங்கை அணி முதல் பவர்-பிளே (power play) 6 ஓவர்கள் நிறைவில் 1 விக்கெட் இழப்பிற்கு 35 ஓட்டங்களை குவித்தது. பின்னர் 8ஆவது ஓவரில் ஹர்ஷிதா மாதவி 12 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். 

தொடர்ந்து அடுத்த ஓவரில் கடந்த போட்டியில் அரைச்சதம் கடந்த அணித்தலைவி சமரி அட்டபத்து 1 சிக்ஸர், 5 பௌண்டரிகளுடன் 33 ஓட்டங்களை குவித்து ஆட்டமிழந்தார். பின்னர் ஹசினி பெரேரா 7 ஓட்டங்களுடனும், ஹன்சிமா கருணாரத்ன 7 ஓட்டங்களுடனும், சசிகலா சிறிவர்தன 13 ஓட்டங்களுடனும், அனுஷ்க சஞ்சீவனி 1 ஓட்டத்துடனும், நிலக்ஷி டி சில்வா 8 ஓட்டங்களுடனும், டி20 சர்வதேச அறிமுகம் பெற்ற சத்யா சந்தீபனி ஓட்டமின்றியும் ஆட்டமிழக்க, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் இலங்கை மகளிர் அணி 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 113 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. 

இந்திய அணியின் பந்துவீச்சில் ராதா யாதவ் 23 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுக்களையும், ராஜேஷ்வரி கயக்வட் 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுக்களையும், தீப்தி ஷர்மா, பூணம் யாதவ் மற்றும் ஷீகா பாண்டே ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டையும் வீழ்த்தினர். இந்திய அணியின் வெற்றியிலக்காக 114 ஓட்டங்கள் நிர்ணயிக்கப்பட்டது. 

114 என்ற இலகு வெற்றியிலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய மகளிர் அணிக்கு ஆரம்பம் சிறப்பாக அமைந்தது. ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனை ஸ்மிரித்தி மந்தனா 17 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தாலும், முதல் பவர்-பிளே 6 ஓவர்கள் நிறைவில் இந்திய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 49 ஓட்டங்களை குவித்தது. 

இரண்டாவது விக்கெட் இணைப்பாட்டமாக ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனை ஷபாலி வர்மா மற்றும் அணித்தலைவி ஹர்மன்பிரீட் கௌர் ஆகியோருக்கிடையில் 47 ஓட்டங்கள் பகிரப்பட்ட வேளையில் ஹர்மன்பிரீட் கௌர் 15 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். பின்னர் தொடர்ந்து அடுத்த ஓவரில் அதிரடியாக துடுப்பெடுத்தாடிவந்த 16 வயதுடைய இளம் ஆரம்ப துடுப்பாட்ட வீராங்கனை ஷபாலி வர்மா 1 சிக்ஸர், 7 பௌண்டரிகளுடன் 47 ஓட்டங்களை குவித்து ஆட்டமிழந்தார். 

இருந்தாலும் அடுத்து களமிறங்கிய ஜெமிமா ரோட்ரிகஸ் மற்றும் தீப்தி ஷர்மா ஆகியோர் ஆட்டமிழக்காது இந்திய அணியின் வெற்றியை 32 பந்துகள் மீதமிருக்க 7 விக்கெட்டுக்களினால் உறுதி செய்தனர். இலங்கை அணியின் பந்துவீச்சில் உதேஷிகா பிரபோதனி மற்றும் சசிகலா சிறிவர்த்தன ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டை கைப்பற்றினர்.  

போட்டியின் ஆட்ட நாயகியாக பந்துவீச்சில் இலங்கை அணியின் 4 விக்கெட்டுக்களை பதம்பார்த்த ராதா யாதவ் தெரிவு செய்யப்பட்டார். இந்திய மகளிர் அணியின் இவ்வெற்றியின் மூலம் குழு A புள்ளிப்பட்டியலில் தொடர்ச்சியான 4 வெற்றிகளுடன் 8 புள்ளிகளை பெற்று முதலிடம் பிடித்துள்ளது. அதேவேளை இலங்கை அணி அடைந்த படுதோல்வியின் மூலம் டி20 உலகக்கிண்ண தொடரிலிருந்து விலக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் இலங்கை அணி ஆறுதல் வெற்றிபெறும் நோக்கில் தங்களது இறுதி குழுநிலை போட்டியில் நாளை மறுதினம் (2) பங்களாதேஷ் மகளிர் அணியுடன் பலப்பரீட்சை நடாத்தடவுள்ளது. 

போட்டியின் சுருக்கம்

இலங்கை மகளிர் அணி – 113/9 (20) – சமரி அத்தப்பத்து 33 (24), கவிஷா டில்ஹாரி 25 (16), ராதா யாதவ் 4/23 (4), ராஜேஷ்வரி கயக்வட் 2/18 (4)

இந்திய மகளிர் அணி – 116/3 (14.4) – ஷபாலி வர்மா 47 (34), ஸ்மிரித்தி மந்தனா 17 (12), உதேஷிகா பிரபோதனி 1/13 (4), சசிகலா சிறிவர்தன 1/42 (4)

முடிவு – இந்திய மகளிர் அணி 7 விக்கெட்டுக்களினால் வெற்றி