பொதுநலவாய விளையாட்டு விழாவில் மகளிர் டி-20யை இணைக்க கோரிக்கை

87

இங்கிலாந்தின் பேர்மிங்ஹம் நகரில் 2022ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 22ஆவது பொதுநலவாய விளையாட்டு விழாவில் மகளிருக்கான டி-20 கிரிக்கெட்டை இணைத்துக் கொள்ள வேண்டும் என சர்வதேச கிரிக்கெட் பேரவை (ICC) கோரிக்கை விடுத்துள்ளது.

மகளிருக்கான 6ஆவது டி-20 உலகக் கிண்ணப் போட்டிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கிந்திய தீவுகளில் நிறைவுக்கு வந்தது. இதில் இங்கிலாந்து அணியை 8 விக்கெட்டுக்களால் வீழ்த்தி அவுஸ்திரேலிய மகளிர் அணி 4ஆவது தடவையாகவும் மகளிர் டி-20 சம்பியன் பட்டத்தை வென்றது.

நான்காவது தடவையாக மகளிர் T20I உலகக் கிண்ணம் அவுஸ்திரேலியா வசம்

மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வந்த….

இந்த நிலையில், குறித்த போட்டித் தொடர் நிறைவுக்கு வந்த மறுநாளான நேற்று (26), 2022ஆம் ஆண்டு இங்கிலாந்தின் பேர்மிங்ஹமில் நடைபெறவுள்ள அடுத்த பொதுநலவாய விளையாட்டு விழாவில் மகளிருக்கான டி-20 கிரிக்கெட்டை இணைப்பதற்கான மனுவை சர்வதேச கிரிக்கெட் பேரவை சமர்ப்பித்துள்ளது.

இந்த முயற்சியானது கிரிக்கெட்டை உலகம் முழுவதும் பிரபல்யப்படுத்தவும், கிரிக்கெட்டில் பெண்களை ஈடுபடுவதற்கான ஊக்குவிப்பை அதிகரிப்பதற்காகவும் அமையும் என சர்வதேச கிரிக்கெட் பேரவையின் பிரதம நிறைவேற்று அதிகாரி டேவிட் றிச்சர்ட்சன் தெரிவித்துள்ளார்.

”மகளிர் கிரிக்கெட் பொதுநலவாய விளையாட்டு விழாவில் இணைத்துக் கொள்ளப்படுவது கிரிக்கெட் மீது பெண்களின் ஆர்வம் அதிகரிக்கப்படுவதற்கு முக்கிய காரணமாக அமையும். அதிகளவான இளம் வீராங்கனைகளுக்கு மிகப் பெரிய அனுபத்தையும் இது பெற்றுக் கொடுக்கும். அதேபோல பால் சமத்துவம், நேர்மை, வாய்ப்பு ஆகியன பொதுநலவாய விளையாட்டு விழாவில் முக்கிய பங்கு வகிக்கும்.

அதிலும் குறிப்பாக பேர்மிங்ஹமில் இப்போட்டிகளை நடத்துவதென்பது உள்ளூர் இரசிகர்களின் பலத்த வரவேற்பு அனைத்து அணிகளுக்கும் கிடைக்கும் என்பதில் சந்தேகம் கிடையாது. அத்துடன், கிரிக்கெட் விளையாடும் நாடுகளைப் போல, ஏனைய நாடுகளுக்கும் அதன் தாக்கத்தை விஸ்தரிக்க முடியும்” என டேவிட் றிச்சர்ட்சன் கூறினார்.

இதேநேரம், .சி.சியின் தரப்படுத்தலில் முன்னிலை உள்ள 8 அணிகள் பங்கேற்கும் வகையில் இந்தப் போட்டியை நடத்தலாம் எனவும் .சி.சி ஆலோசனை வழங்கியுள்ளது.

அத்துடன், குறித்த விளையாட்டு விழாவில் கிரிக்கெட் இணைத்துக் கொள்வது தொடர்பில் ஆராய்வதற்காக இங்கிலாந்து கிரிக்கெட் சபையுடன் இணைந்து விசேட குழுவொன்றை நியமிக்கவும் .சி.சி நடவடிக்கை எடுத்துள்ளது.

இந்த மனு 2022 பொதுநலவாய விளையாட்டு விழாவின் ஏற்பாட்டுக் குழுவினால் ஏற்றுக்கொள்ளும் பட்சத்தில் பொதுநலவாய விளையாட்டு விழா வரலாற்றில் இரண்டாவது தடவையாக கிரிக்கெட் விளையாட்டு இடம்பெறும்.

இதுஇவ்வாறிருக்க, 2022ஆம் ஆண்டு நடைபெறவுள்ள குறித்த போட்டித் தொடரில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதற்கு முன்னதாக தீர்மானிக்கப்பட்டிருந்தது. அதுதொடர்பில் சர்வதேச கிரிக்கெட் பேரவைக்கும் அறிவிக்கப்பட்டது.

எனினும், குறித்த போட்டிகள் இடம்பெறவுள்ள ஜுலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான போட்டித் தொடர் மற்றும் நெட்வெஸ்ட் மற்றும் கரீபியன் பிரீமியர் லீக் டி20 தொடர்கள் இடம்பெறவுள்ளதால், சர்வதேச கிரிக்கெட் பேரவை போட்டி அட்டவணையை மாற்றுவதற்கு மறுப்பு தெரிவித்துள்ளது.   

உலகக் கிண்ணத்திற்கு முன் ஸ்கொட்லாந்தை எதிர்கொள்ளும் இலங்கை அணி

இங்கிலாந்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் …

இதனையடுத்து, 2022 பொதுநலவாய நாடுகளின் விளையாட்டு விழாவிலிருந்து கிரிக்கெட் போட்டிகளை இணைத்துக் கொள்ளும் திட்டத்தை அவ்அமைப்பு கைவிடுவதற்கு நடவடிக்கை எடுத்திருந்தது.

முன்னதாக பெண்களுக்கான டி-20 போட்டிகளை நடத்துவதற்கு சர்வதேச கிரிக்கெட் பேரவை அனுமதி அளித்திருந்த போதிலும், ஆண்களுக்கான போட்டிகளை நடத்துவதற்கு எந்தவொரு இணக்கப்பாட்டுக்கும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனாலும் பொதுநலவாய நாடுகளின் அமைப்பின் கொள்கைக்கு அமைய விளையாட்டில் பாலின சமத்துவக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டுள்ள காரணத்தால் பெரும்பாலும் கிரிக்கெட் விளையாட்டு இடம்பெறுவது ஆரம்பத்திலிருந்து சந்தேகத்தை ஏற்படுத்தியிருந்தது.

முன்னதாக 1998ஆம் ஆண்டு மலேஷியாவில் நடைபெற்ற பொதுநலவாய நாடுகளின் விளையாட்டு விழாவில் முதற்தடவையாக கிரிக்கெட் போட்டிகள் இடம்பெற்றது. அதில் இங்கிலாந்தைத் தவிர டெஸ்ட் அந்தஸ்த்து பெற்ற அனைத்து நாடுகளும் கலந்துகொண்டன. 50 ஓவர்களைக் கொண்ட போட்டித் தொடராக அது இடம்பெற்றதுடன், அதன் இறுதிப் போட்டியில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி தென்னாபிரிக்க அணி தங்கப் பதக்கம் வென்றிருந்ததுடன், இலங்கை வீழ்த்திய நியூசிலாந்து அணி வெண்கலப் பதக்கத்தை வென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<