T20 உலகக் கிண்ணத்திற்கான சிறந்த அணி அறிவிப்பு

1988

நடைபெற்று முடிந்திருக்கும் T20 கிரிக்கெட் உலகக் கிண்ணதொடரில் திறமையினை வெளிப்படுத்திய வீரர்கள் கொண்ட T20 உலகக் கிண்ணத்திற்கான பெறுமதிமிக்க (T20 World Cup UpStox Most Valuable Team) அணி அறிவிக்கப்பட்டிருக்கின்றது.

அதன்படி இந்த அணியில் T20 உலகக் கிண்ணத்தில் விளையாடிய  ஆறு நாடுகளின் வீரர்கள் உள்வாங்கப்பட்டிருக்கின்றனர்.

அதன்படி இந்த அணியில் இலங்கை, T20 உலகக் கிண்ணத்தின் புதிய சம்பியன் அவுஸ்திரேலியா, இரண்டாம் இடம் பெற்ற நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாபிரிக்கா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளின் வீரர்கள் உள்வாங்கப்பட்டிருக்கின்றனர்.

இந்த அணியில் உள்வாங்கப்பட்டுள்ள இலங்கை சார்பில் உள்வாங்கப்பட்ட வீரர்களாக வனிந்து ஹஸரங்க மற்றும் சரித் அசலன்க ஆகிய வீரர்கள் காணப்படுகின்றனர்.

இந்த வீரர்களில் வனிந்து ஹஸரங்க நடைபெற்று முடிந்த T20 உலகக் கிண்ணத்தொடரில் அதிக விக்கெட்டுக்களை (16) கைப்பற்றிய வீரராக சாதனை புரிந்திருந்ததோடு, சரித் அசலன்க இந்த தொடரில் அதிக ஓட்டங்கள் (231) குவித்த துடுப்பாட்டவீரர்கள் வரிசையில் இடம்பெற்றிருந்தார்.

>>T20 உலகக்கிண்ண சம்பியனாக மகுடம் சூடியது அவுஸ்திரேலியா

அதேநேரம் இந்த அணியில் அவுஸ்திரேலிய அணியில் இருந்து மூன்று வீரர்கள் இணைக்கப்பட்டிருக்கின்றனர். அந்தவகையில் அவுஸ்திரேலிய அணி T20 உலகக் கிண்ணம் வெல்வதற்கு காரணமாக இருந்த ஆரம்பத்துடுப்பாட்டவீரரும், தொடர் நாயகனுமான டேவிட் வோர்னர், சுழல்பந்துவீச்சாளர் அடம் ஷம்பா மற்றும் ஜோஸ் ஹேசல்வூட் ஆகியோர் இந்த அணியில் இடம்பெற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

அதேநேரம் இந்த அணியின் தலைவராக பாகிஸ்தானின் பாபர் அசாம் நியமனம் செய்யப்பட்டிருப்பதோடு, இங்கிலாந்தினைச் சேர்ந்த ஜோஸ் பட்லர் அணியின் விக்கெட்காப்பாளராக பெயரிடப்பட்டிருக்கின்றார்.

ஜோஸ் பட்லர் தவிர இங்கிலாந்தினைச் சேர்ந்த மொயின் அலியும் இந்த அணியில் சகலதுறைவீரராக இடம்பெற்றிருக்கின்றார். 131.42 என்கிற Strike Rate உடன் இந்த T20 உலகக் கிண்ணத்தில் 92 ஓட்டங்களை மொத்தமாகப் பெற்றிருந்த மொயின் அலி 11 என்கிற சராசரியுடன், 7 விக்கெட்டுக்களையும் சாய்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

நியூசிலாந்தின் ட்ரென்ட் போல்ட், தென்னாபிரிக்காவின் என்ட்ரிஜ் நோர்கியே ஆகிய வேகப்பந்துவீச்சாளர்களும் இந்த T20 உலகக் கிண்ண அணியில் காணப்படுகின்றனர். இதில் ட்ரென்ட் போல்ட் நடைபெற்று முடிந்த T20 உலகக் கிண்ணத்தொடரில் 13 விக்கெட்டுக்களை சாய்த்திருக்க, அன்ட்ரிஜ் நோர்கியே 09 விக்கெட்டுக்களை சுருட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

>>மஹேலவிற்கு முரளிதரன் எழுதிய மடல்

அதேவேளை பாகிஸ்தானின் வேகப்பந்துவீச்சாளரான சஹீன் அப்ரிடி இந்த T20 உலகக் கிண்ண அணியில் 12ஆவது வீரராக இடம்பிடித்திருக்கின்றார். சஹீன் அப்ரிடி இந்த T20 உலகக் கிண்ணத்தில் 24.14 என்கிற சராசரியுடன் 7 விக்கெட்டுக்களை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

T20 உலகக் கிண்ணத்திற்கான பெறுமதிமிக்க அணி

டேவிட் வோர்னர் (அவுஸ்திரேலியா) – 289 ஓட்டங்கள்

ஜோஸ் பட்லர் (இங்கிலாந்து – விக்கெட்காப்பாளர்) – 269 ஓட்டங்கள்

பாபர் அசாம் (பாகிஸ்தான் – தலைவர்) – 303 ஓட்டங்கள்

சரித் அசலன்க (இலங்கை) – 231 ஓட்டங்கள்

எய்டன் மார்க்ரம் (தென்னாபிரிக்கா) – 162 ஓட்டங்கள்

மொயின் அலி (இங்கிலாந்து) – 92 ஓட்டங்கள், 7 விக்கெட்டுக்கள்

வனிந்து ஹஸரங்க (இலங்கை) – 16 விக்கெட்டுக்கள்

அடம் ஷம்பா (அவுஸ்திரேலியா) – 13 விக்கெட்டுக்கள்

ஜோஸ் ஹேசல்வூட் (அவுஸ்திரேலியா) – 11 விக்கெட்டுக்கள்

ட்ரென்ட் போல்ட் (நியூசிலாந்து) – 13 விக்கெட்டுக்கள்

என்ட்ரிச் நோர்கியே (தென்னாபிரிக்கா) – 9 விக்கெட்டுக்கள்

சஹீன் அப்ரிடி (பாகிஸ்தான் – 12ஆவது வீரர்) – 7 விக்கெட்டுக்கள்

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<