இலங்கைக்கு பதிலடி தரக் காத்திருக்கும் நியூசிலாந்து?

2969

T20 உலகக் கிண்ணத் தொடரின் குழு 1 அணிகளான இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதும் தீர்மானம் கொண்ட சுபர் 12 சுற்றுப் போட்டி நாளை (29) சிட்னி நகரில் ஆரம்பமாகின்றது.

கவனிக்க வேண்டிய விடயங்கள்

பதிலடி கொடுக்க காத்திருக்கும் நியூசிலாந்து?

கடைசியாக 2019ஆம் ஆண்டில் இலங்கைக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த நியூசிலாந்து கிரிக்கெட் அணி இங்கே மூன்று போட்டிகள் கொண்ட T20I தொடர் ஒன்றில் பங்கேற்றிருந்தது. அந்த தொடரினை நியூசிலாந்து 2-1 என முழு ஆதிக்கத்தை வெளிப்படுத்தி கைப்பற்றிய போதும் தொடரின் மூன்றாவது போட்டி நியூசிலாந்து கிரிக்கெட் அணிக்கு மறக்க முடியாத ஒன்றாக அமைந்தது. ஏனெனில் அந்தப் போட்டியில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சு ஜாம்பவான் லசித் மாலிங்க தொடர்ச்சியாக 4 பந்துகளில் 4 விக்கெட்டுக்களை சாய்த்து நியூசிலாந்தின் முன்னணி துடுப்பாட்ட வீரர்களை ஓய்வறை அனுப்பியதோடு மொத்தமாக 5 விக்கெட்டுக்களைக் கைப்பற்றி இலங்கை அணியின் வெற்றியினையும் உறுதி செய்திருந்தார். மிகவும் பலமான துடுப்பாட்ட வரிசையைக் கொண்ட நியூசிலாந்து தொடர்ச்சியாக நான்கு துடுப்பாட்டவீரர்களை இழந்தது ஒரு வடுவாக மாறியது.

>> “அரையிறுதிக்கான ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்த வேண்டும்” – நவீட் நவாஸ்

அதேநேரம் 2014ஆம் ஆண்டின் பின் T20 உலகக் கிண்ணப் போட்டியொன்றில் நாளையே இலங்கை மற்றும் நியூசிலாந்து அணிகள் முதல் முறையாக சந்திக்கின்றன. கடைசியாக இரண்டு அணிகளும் விளையாடிய T20 உலகக் கிண்ண மோதலில் இலங்கை அணி ரங்கன ஹேரத்தின் மாயஜால பந்துவீச்சின் மூலம் நியூசிலாந்து அணியின் T20 உலகக் கிண்ண கனவினையே கலைத்திருந்தது. இது இலங்கை அணி நியூசிலாந்துக்கு ஏற்படுத்திய மற்றைய வடுவாகும்.

இவ்வாறு இலங்கை கிரிக்கெட் அணி கடந்த காலங்களில் ஏற்படுத்திய வடுக்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் நியூசிலாந்தின் ஆட்டம் இருக்க எதிர்பார்க்கப்படுகின்றது.

நியூசிலாந்தின் நிலை

கடந்த T20 உலகக் கிண்ணத்தில் நியூசிலாந்து இரண்டாம் இடத்தினைப் பெற்றிருந்தது. ஆனால் அண்மைய T20 போட்டிகளில் அவர்களால் எதிர்பார்த்த ஆட்டத்தினை வெளிப்படுத்த முடியவில்லை. T20 உலகக் கிண்ணத்திற்கு முன்னர் நடைபெற்ற முக்கோண T20 தொடரை பாகிஸ்தானிடம் பறிகொடுத்த அவ்வணி உலகக் கிண்ண முதல் போட்டியில் அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியதோடு, தற்போது மிகவும் எதிர்பார்க்கப்படும் அணிகளில் ஒன்றாகவும் மாறியிருக்கின்றது. ஆனால் நியூசிலாந்து அடுத்ததாக ஆப்கானிஸ்தான் உடன் ஆடவிருந்த போட்டி மழையினால் கைவிடப்பட்டிருந்தது. இது அவ்வணிக்கு ஒரு சிறிய தடுப்பு (Break) என்ற போதும் அதனை வைத்து நியூசிலாந்து அணியின் ஆட்டத்தை குறைவாக மதிப்பிடக்கூடாது.

இலங்கை அணியின் நிலை

சுபர் 12 சுற்றில் அவுஸ்திரேலிய அணிக்கு எதிரான அதிர்ச்சி தோல்வி, ஆறாவது வீரராக வேகப்பந்துவீச்சாளரின் உபாதை என இலங்கை அணிக்கு ஏமாற்றங்களே இதுவரை இந்த T20 உலகக் கிண்ணத் தொடரில் கிடைத்திருக்கின்றன. அத்துடன் அரையிறுதி வாய்ப்பை தக்க வைக்க நியூசிலாந்து மோதலில் கட்டாய வெற்றி பெற வேண்டியதன் அழுத்தமும் இலங்கை வீரர்களுக்கு காணப்படுகின்றது.

அத்துடன் நியூசிலாந்து ஒப்பீட்டு அளவில் இலங்கை கிரிக்கெட் அணி எதிர்கொள்ளவிருக்கும் தொடரின் சிறந்த அணிகளில் ஒன்றாகவும் காணப்படுகின்றது. இது நாளைய போட்டியின் எதிர்பார்ப்பு நியூசிலாந்து என்பதனையும் வெளிப்படுத்துகின்றது. எனவே சரியான திட்டமிடலுடன், அதனை களத்தில் செயற்படுத்த வேண்டியதன் பொறுப்பு இலங்கை கிரிக்கெட் அணி வீரர்களுக்கு இருக்கின்றது.

மிச்சல் சான்ட்னர் எதிர் வனிந்து ஹஸரங்க

இலங்கை அணியின் முன்னணி சுழல் பந்துவீச்சாளரான வனிந்து ஹஸரங்கவிற்கு அவுஸ்திரேலிய அணியுடனான போட்டி சிறப்பாக அமையவில்லை. ஆனால் நியூசிலாந்தின் சுழல்வீரர் மிச்சல் சான்ட்னர் அவுஸ்திரேலிய அணியுடன் நடைபெற்ற போட்டியில் திறமையினை வெளிப்படுத்தி 3 விக்கெட்டுக்களைக் கைப்பற்றியிருந்தார். மிச்சல் சான்ட்னரின் பந்துவீச்சுக்கு காரணம் என மைதானம் கூறப்பட்ட நிலையில், நாளைய போட்டி சுழலுக்கு சாதகமான அதே சிட்னி ஆடுகளத்தில் நடைபெறப் போகின்றது. எனவே இந்தப் போட்டியில் இரு அணிகளினதும் முன்னணி சுழல் வீரர்கள் இருவரும் தங்களது போராட்டத்தை வெளிப்படுத்த மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைத்திருக்கின்றது. இதில் எந்த சுழல் வீரர் நாளைய ஆடுகளத்தினை சரியாகப் பயன்படுத்திக் கொள்கின்றார் என பொறுத்திருந்து பார்ப்போம்.

அணி மாற்றம் மற்றும் எதிர்பார்ப்புக்கள்

நியூசிலாந்து

நியூசிலாந்து அணியில் மாற்றங்கள் இடம்பெறுவதற்கான வாய்ப்புக்கள் இல்லை. ஆனால் சகலதுறைவீரரான டரைல் மிச்சல் தனது உபாதையில் இருந்து மீண்டிருப்பதனால் இலங்கை அணியுடனான போட்டியில் நியூசிலாந்து அணியுடன் இணைந்து கொள்ள எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால் அவுஸ்திரேலியாவை வென்ற நியூசிலாந்து அணி தமது குழாத்தில் மாற்றங்கள் செய்யாமலும் நாளைய மோதலில் பங்கெடுக்க முடியும்.

எதிர்பார்ப்பு XI – பி(f)ன் அலன், டெவோன் கொன்வெய், கேன் வில்லியம்சன் (தலைவர்), கிளன் பிலிப்ஸ், ஜேம்ஸ் நீஷம், மார்க் சாப்மன், மிச்சல் சான்ட்னர், இஷ் சோதி, டிம் சௌத்தி, லோக்கி பெர்குஸன், ட்ரென்ட் போல்ட்

 >> WATCH – வனிந்து ஹஸரங்கவின் மோசமான பந்துவீச்சு தொடர்பில் கூறும் கிரிஸ் சில்வர்வூட்! 

இலங்கை அணி

முன்னர் குறிப்பிட்டது போன்று உபாதை காரணமாக பினுர பெர்னாண்டோ இலங்கை அணியில் இருந்து வெளியேறிய ஆறாவது வீரராக மாறியிருக்கின்றார். இவருக்குப் பதிலாக நாளைய போட்டியில் உபாதையில் இருந்து தேறிய ப்ரமோத் மதுசான் விளையாடுவார் என எதிர்பார்க்கப்பட்ட போதும் அவர் இன்று சிட்னியில் பயிற்சிகளில் கலந்து கொள்ளவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது. இதனால் நாளைய போட்டியில் பினுர பெர்னாண்டோவின் இடத்தினை கசுன் ராஜித அல்லது அசித பெர்னாண்டோ ஆகிய இருவரில் ஒருவர் நிரப்ப முடியும்.

இலங்கை அணியினைப் பொறுத்தவரை இலங்கை அணியின் நம்பிக்கைக்குரிய மத்திய வரிசை வீரர்களான பானுக்க ராஜபக்ஷ, அணித்தலைவர் தசுன் ஷானக்க, சாமிக்க கருணாரட்ன மற்றும் வனிந்து ஹஸரங்க ஆகியோர் துடுப்பாட்டவீரர்களாக இதுவரை ஜொலிக்கவில்லை. எனவே அவர்களிடம் இருந்து சிறந்ததொரு ஆட்டத்தை நாளைய போட்டியில் இலங்கை எதிர்பார்க்கின்றது. அத்துடன் இலங்கையின் களத்தடுப்பு பிரச்சினைகளும் நாளைய போட்டியில் கவனிக்கப்பட வேண்டும்.

எதிர்பார்ப்பு XI – தசுன் ஷானக்க (தலைவர்), பெதும் நிஸ்ஸங்க, குசல் மெண்டிஸ், தனன்ஞய டி சில்வா, பானுக்க ராஜபக்ஷ, வனிந்து ஹஸரங்க, சரித் அசலன்க, சாமிக்க கருணாரட்ன, மகீஷ் தீக்ஷன, லஹிரு குமார, கசுன் ராஜித

மழையின் தாக்கம் மற்றும் நாணய சுழற்சி?

இலங்கை – நியூசிலாந்து போட்டி நடைபெறவுள்ள சிட்னி நகரில் நாளை பெய்வதற்கு சாத்தியப்பாடுகள் இல்லை என வானிலைத் தரவுகள் தெரிவிக்கின்றன. அதேநேரம் இந்த மைதானத்தில் ஏற்கனவே நடைபெற்ற T20 உலகக் கிண்ணப் போட்டிகளில் போட்டிகளில் முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்த அணிகளே வெற்றி பெற்றிருப்பதால், நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பாடும் அணிக்கு வெற்றிக்கான வாய்ப்புக்கள் ஒப்பீட்டளவில் அதிகம் காணப்படுகின்றன.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<