புதிய தலைவரினைப் பெறும் இங்கிலாந்து ஒருநாள் கிரிக்கெட் அணி

44
Harry Brook

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு எதிராக நடைபெறவிருக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து அணியின் தலைவராக அதிரடி துடுப்பாட்டவீரரான ஹர்ரி புரூக் நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார்.

>> நியூசிலாந்து – இலங்கை முதல் டெஸ்ட்டை பார்வையிட அனுமதி இலவசம்

இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள அவுஸ்திரேலிய அணி அங்கே 3 போட்டிகள் கொண்ட T20 தொடரில் பங்கேற்று வருகின்றது. இந்த T20 தொடரின் பின்னர் எதிர்வரும் வியாழன் (19) 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ஆரம்பமாகுகின்றது.

அதன்படி இந்த ஒருநாள் தொடருக்கான இங்கிலாந்து குழாமே தற்போது அறிவிக்கப்பட்டிருப்பதோடு இதன் தலைவராகவே ஹர்ரி புரூக் நியமனம் செய்யப்பட்டிருக்கின்றார்.

இங்கிலாந்து ஒருநாள் அணியின் தலைவராக காணப்பட்ட ஜோஸ் பட்லர் T20 உலகக் கிண்ணத்தில் ஏற்பட்ட தசை உபாதை காரணமாக அவுஸ்திரேலிய தொடரில் இருந்து வெளியேறியிருக்கும் நிலையிலையே அணித்தலைவர் பொறுப்பு ஹர்ரி புரூக்கிற்கு வழங்கப்பட்டிருக்கின்றது. இதன் மூலம் 25 வயது நிரம்பிய ஹர்ரி புரூக் இங்கிலாந்து அணியினை வழிநடாத்தும் வாய்ப்பினை முதன் முறையாக பெற்றிருப்பது சுட்டிக்காட்டத்தக்கது.

அதேவேளை இங்கிலாந்து ஒருநாள் அணியில் ஜோஸ் பட்லரின் பிரதியீடாக லியாம் லிவிங்ஸ்டோன் உள்வாங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. ஜோஸ் பட்லர் இங்கிலாந்து அணியின் மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்தின் போது தனது தரப்புடன் இணைந்து கொள்வார் எனக் கூறப்பட்டிருக்கின்றது.

மறுமுனையில் இளம் வேகப்பந்துவீச்சாளரான ஜோஷ் ஹல் உபாதை காரணமாக அவுஸ்திரேலிய ஒருநாள் தொடரில் இருந்து விலகியிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீரர்கள் தவிர இங்கிலாந்து அணி முக்கிய மாற்றங்களின்றி அவுஸ்திரேலியாவினை எதிர்கொள்ளவிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து குழாம்

ஹர்ரி புரூக் (தலைவர்), ஜொப்ரா ஆர்ச்சர், ஜகோப் பெத்தேல், பிரைடன் கார்ஸ், ஜோர்டன் கொக்ஸ், பென் டக்கட், வில் ஜாக்ஸ், லியாம் லிவிங்ஸ்டோன், மெதிவ் பொட்ஸ், ஆதில் ரஷீட், பில் ஷோல்ட், ஜேமி ஸ்மித், ஒல்லி ஸ்டோன், ரீஸ் டொப்லி, ஜோன் டர்னர்

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<