துடுப்பு மட்டைக்கு குத்திய டெவோன் இறுதிப் போட்டியை தவறவிடுகிறார்

ICC T20 World Cup – 2021

313

கையில் ஏற்பட்ட எலும்புமுறிவு காரணமாக T20 உலகக் கிண்ண இறுதிப்போட்டி மற்றும் இந்திய சுற்றுப்பயணத்திலிருந்து நியூசிலாந்து வீரர் டெவோன் கொன்வே விலகியுள்ளார்.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றுவரும் T20 உலகக் கிண்ணத் தொடர் இறுதிக்கட்டத்தை நெருங்கிவிட்டது. இதில் நாளை மறுதினம் (14) நடைபெறவுள்ள இறுதிப்போட்டியில் நியூசிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

இந்த நிலையில், கடந்த 10ஆம் திகதி நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கு எதிரான முதலாவது அரை இறுதிப்போட்டியில் வெற்றியீட்டிய நியூசிலாந்து அணிக்காக டெவோன் கொன்வே துடுப்பாட்டத்தில் பிரகாசித்திருந்தார். குறித்த போட்டியில் 38 பந்துகளில் 46 ஓட்டங்கள் எடுத்து அணியின் வெற்றிக்கு உதவினார்.

இதனிடையே, குறித்த போட்டியில் டெவோன் கொன்வே, 46 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்த போது ஏற்பட்ட ஆத்திரத்தால் தனது கையில் இருந்த துடுப்பு மட்டையை ஓங்கிக் குத்தினார்.

இதனால் துரதிஷ்டவசமாக அவரது வலதுகையில் எலும்புமுறிவு ஏற்பட மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். அங்கு மேற்கொள்ளபட்ட ஸ்கேன் பரிசோதனையில் கைமுறிவு ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இதையடுத்து அவுஸ்திரேலிய அணியுடன் நாளை மறுதினம் (14) நடைபெறவுள்ள இறுதிப்போட்டி மற்றும் 17ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள இந்திய சுற்றுப்பயணம் ஆகியவற்றில் இருந்தும் டெவோன் கொன்வே விலகுவதாக நியூசிலாந்து கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

ஏவ்வாறாயினும், டெவோன் கொன்வேவுக்குப் பதிலாக டிம் சீபெர்ட் அவுஸ்திரேலிய அணியுடனான இறுதிப்போட்டியில் விளையாடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

>> மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<