புதிய வீரர்கள் மற்றும் புதிய பயிற்றுவிப்பாளர்களுடன் இவ்வருட பாடசாலைகளுக்கு இடையிலான ரக்பி லீக் தொடருக்குள் பிரவேசிக்கின்ற நடப்புச் சம்பியன் இசிபதன கல்லூரி, இம்முறையும் சம்பியன் பட்டத்தை வெல்லக் கூடிய அணியாகக் காணப்படுகின்றது.

புதிய வீரர்கள் மற்றும் புதிய பயிற்றுவிப்பாளர்களுடன் இவ்வருட பாடசாலைகளுக்கு இடையிலான ரக்பி லீக் தொடருக்குள் பிரவேசிக்கின்ற நடப்புச் சம்பியன் இசிபதன கல்லூரி, இம்முறையும் சம்பியன் பட்டத்தை வெல்லக் கூடிய அணியாகக் காணப்படுகின்றது.

VISIT THE SCHOOLS RUGBY LEAGUE HUB

கல்லூரியின் ரக்பி வரலாறு

ஏனைய அணிகளைப் போலல்லாது வெறும் 54 ஆண்டுகளாகவே இசிபதன கல்லூரி ரக்பி விளையாட்டில் ஈடுபட்டு வருகின்றது. எனினும், இக்குறுகிய காலப்பகுதியில் இலங்கையில் ரக்பி விளையாட்டில் மிகவும் வெற்றிகரமான அணியாக உருவெடுத்துள்ளது. 1963ஆம் ஆண்டு முதல் ரக்பி விளையாட்டில் ஈடுபட்டு வருகின்ற இக்கல்லூரி அணி, 20 வயதிற்குட்பட்ட பிரிவில் மாத்திரம் ஏறத்தாழ 66 சம்பியன்ஷிப் கிண்ணங்களை வென்றுள்ளது. இலங்கையில் பாடசாலை ஒன்றினால் ரக்பி விளையாட்டில் பெறப்பட்டுள்ள அதிகபடியான கிண்ணங்களின் எண்ணிக்கை இதுவேயாகும்.

அத்துடன் இலங்கை தேசிய ரக்பி அணிக்கு அதிகபடியான வீரர்களை உருவாக்கித் தந்துள்ள பாடசாலையாகவும் இசிபதன கல்லூரி திகழ்கின்றது. இசிபதன கல்லூரி சார்பில் ரக்பி விளையாட்டில் பிரகாசித்த ஏறத்தாழ 60 வீரர்கள் பிற்காலத்தில் இலங்கை தேசிய அணியை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளனர்.

இவ்வருடம் இசிபதன கல்லூரி பங்குபெறும் போட்டிகளில் மிக முக்கிய போட்டிகளாக தர்ஸ்டன் கல்லூரி அணியுடன் இடம்பெறும் அப்துல் ஜப்பார் கிண்ணப் போட்டியும், றோயல் கல்லூரியுடன் நடைபெறும் மேஜர் மில்ரோய் பெர்னாண்டோ கிண்ணப் போட்டியும் காணப்படுகின்றன.

கடந்த பருவகாலம்

கடந்த 2015ஆம் ஆண்டிற்கான அணியிலிருந்த 11 வீரர்களை இழந்திருந்த காரணத்தினால் கடந்த வருடத்தின் போது இசிபதன கல்லூரியானது வலுவிழந்த நிலையில் காணப்படும் என பலராலும் கருதப்பட்டது.

எவ்வாறாயினும் குஷான் இந்துனிலின் தலைமையின் கீழ், அபார ஆட்டத்தின் வெளிப்பாடாக அனைவருக்கும் அதிர்ச்சியளித்து, லீக் சம்பியனாகவும் ஜனாதிபதிக் கிண்ண சம்பியனாகவும் அவ்வணி முடிசூடிக் கொண்டது. அத்துடன் சுமுது ரன்கொத்கேவின் தலைமையின் கீழ் ஸாஹிரா கல்லூரியினால் நடாத்தப்பட்ட அணிக்கு எழுவர் கொண்ட சுற்றுத் தொடரிலும் டயலொக் சுப்பர் செவன்ஸ் தொடரிலும் சம்பியன்ஷிப் பட்டத்தை வென்று தனது ஆதிக்கத்தை நிலை நிறுத்தியது.

அவை தவிர குஷான் இந்துனில், கயான் விக்ரமரத்ன, வாகீஷ வீரசிங்க, அதீஷ வீரதுங்க, லஹிரு விஷ்வஜித், இசுரு உதயகுமார மற்றும் ஹரித பண்டார ஆகிய வீரர்கள் 20 வயதிற்குட்பட்ட இலங்கை கனிஷ்ட ரக்பி அணிக்கும் சுமுது ரன்கொத்கே, சமோத் பெர்னாண்டோ மற்றும் ஹரித பண்டார ஆகியோர் 18 வயதிற்குட்பட்ட எழுவரை கொண்ட இலங்கை அணிக்கும் தெரிவாகி தமது கல்லூரிக்கு பெருமை சேர்த்திருந்தனர்.

முக்கிய வீரர்கள்

Sumudu Rankothge

சுமுது ரன்கொத்கே: இப்பருவகாலத்திற்கான அணித்தலைவராக சுமுது ரன்கொத்கே நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த ஆண்டு சென்டர் நிலையில் அசத்தலான ஆட்டத்தினை வெளிப்படுத்தி பலரது கவனத்தையும் ஈர்த்திருந்தார். இத்தசாப்தத்தின் மிகச்சிறந்த சென்டர் நிலை கூட்டணியாக சுமுது ரன்கொத்கே மற்றும் அப்போதைய அணித்தலைவர் குஷான் இந்துனில் கருதப்பட்டனர்.

இத்தகைய சிறப்பாட்டத்தின் காரணமாக அணிக்கு எழுவரை கொண்ட இலங்கை 18 வயதிற்குட்பட்டோரின் அணிக்கு இவர் தெரிவு செய்யப்பட்டதுடன், அணியின் உபதலைவராகவும் நியமிக்கப்பட்டார். நான்காவது வருடமாக இசிபதன கல்லூரியை பிரதிநிதித்துவப்படுத்தவுள்ள இவர் இம்முறையும் தனது சிறப்பாட்டத்தை தொடர்வாரா என பொறுத்திருந்து பார்க்கலாம்.

Chamod Fernando

சமோத் பெர்னாண்டோ: அணித் தலைவர் சுமுது ரன்கொத்கேவை போன்றே இவரும் கடந்த வருடம் அசத்தியிருந்ததுடன், தனது அணி சார்பாக பல ட்ரை வாய்ப்புக்களையும் உருவாக்கித் தந்திருந்தார். விங் நிலை வீரரான சமோத், நான்காவது வருடமாக விளையாடவுள்ளதுடன் அணியின் உபதலைவர் பொறுப்பினையும் ஏற்றுள்ளார். எதிரணியின் தடுப்பாட்ட வீரர்களை சிறப்பாக எதிர்கொண்டு ட்ரைகளை பெற்றுக் கொடுப்பதில் இவரது வகிபாகம் முக்கியமானதாக அமையும்.

Devin Gunarathna

டெவின்  குணரத்ன: தனது மூத்த சகோதரரான ஓமல்க குணரத்ன போன்று பலமிக்க உடல்வாகுவினை கொண்டிராத போதிலும், வேகத்தினையும் துரித நகர்வுகளையும் பலமாக கொண்டுள்ள டெவின் குணரத்ன அணியின் மற்றுமொரு முக்கிய வீரராவார். முக்கியமான நிலையான 8 ஆம் இலக்க நிலையில் இவர் விளையாடவுள்ளதுடன், கடந்த வருடம் அந்நிலையில் விளையாடி அசத்திய வாகீஷ வீரசிங்கவினை போன்றே ஒப்பீட்டளவில் சிறிய உடற்கட்டினை கொண்டுள்ள போதிலும் விவேகமான நகர்வுகள் மூலமாக அணியை வலுப்படுத்தக் கூடிய வீரர் என எதிர்பார்க்கப்படுகின்றார்.

Harith Bandara

ஹரித பண்டார: மூன்றாவது வருடமாக ஹரித பண்டார ஸ்க்ரம் ஹாப் நிலையில் இசிபதன கல்லூரி சார்பாக விளையாடவிருக்கின்றார். ஜனாதிபதிக் கிண்ணம் மற்றும் அணிக்கு எழுவரை கொண்ட 18 வயதிற்குட்பட்ட ஆசிய ரக்பி தொடர் ஆகிய இரண்டிலும் தொடரின் பெறுமதிமிக்க வீரராக தெரிவாகிய ஹரித, இசிபதன கல்லூரியின் சம்பியன்ஷிப் பட்டத்தினை தக்கவைத்துக் கொள்ளும் கனவை நனவாக்குவதில் முக்கிய பங்கினை வகிக்கக் கூடிய வீரராவார்.

பயிற்றுவிப்பாளர்கள்

இசிபதன கல்லூரியின் முன்னாள் வீரரான லசிந்த டி கொஸ்டா இவ்வருடத்திற்கான அணியின் பிரதான பயிற்றுவிப்பளராக நியமிக்கப்பட்டுள்ளார். CR&FC மற்றும் இலங்கை தேசிய அணி சார்பில் விளையாடியுள்ள லசிந்த டி கொஸ்டா, 2014ஆம் ஆண்டு முதல் இசிபதன கல்லூரியின் இளையோர் அணிகளை பயிற்றுவித்தவராவார். இதன் காரணமாக தனது அணியின் வீரர்கள் தொடர்பாக நன்கு பரீட்சயம் மிக்கவராக இவர் உள்ளார்.   

இதேவேளை, இசிபதன கல்லூரியின் முன்கள வீரர்களுக்கான பயிற்சியாளராக பிலால் ஹசன் செயற்படவுள்ளதுடன், வீரர்களின் உடற்கட்டு மற்றும் வலிமை தொடர்பிலான பொறுப்பாளராக பெனடிக்ட் பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். இவர்களுக்கு மேலதிகமாக உதைக்கும் வீரர்களை நெறிப்படுத்தும் முகமாக ரீஸா முபாரக் இணை பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ளார்.

இவ்வருடத்திற்கான குழாம்

[a-team-showcase-vc ats_team_id=”2162433″]