2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 24ஆவது பொதுநலவாய விளையாட்டு விழாவை நடத்துவதற்கான விருப்பத்தை ஸ்கொட்லாந்து அரசு பொதுநலவாய விளையாட்டுகள் சம்மேளனத்திற்கு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
பொதுநலவாய விளையாட்டு விழா 1930ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை இந்த போட்டி நடைபெற்று வருகிறது. இறுதியாக 2022ஆம் ஆண்டு இங்கிலாந்தின் பர்மிங்ஹாம் நகரில் பொதுநலவாய விளையாட்டு விழா நடைபெற்றது.
இந்த நிலையில், 24ஆவது பொதுநலவாய விளையாட்டு விழா 2026ஆம் ஆண்டு மார்ச் 17ஆம் திகதி முதல் 29ஆம் திகதி வரை அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் உள்ள 5 நகரங்களில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது.
எவ்வாறாயினும், அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலம் கடந்த ஆண்டு (2023) ஜூலை மாதம் செலவுகளைக் காரணம் காட்டி பொதுநலவாய விளையாட்டு விழாவை ஏற்று நடத்துவதிலிருந்து விலகியது. இதனால் அவுஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலம் பொதுநலவாய விளையாட்டுகள் சம்மேளனத்திற்கு 256 மில்லியன் அமெரிக்க டொலர்களை இழப்பீடாக வழங்கியது. அதைத் தொடர்ந்து பொதுநலவாய விளையாட்டுகள் சம்மேளனம் போட்டியை எடுத்து நடத்த நாட்டைத் தேடியது.
இந்த நிலையில், 2026 பொதுநலவாய விளையாட்டு விழாவை ஏற்று நடத்த மலேசியாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது’ என்று மலேசியாவின் ஒலிம்பிக் மன்றம் குறிப்பிட்டது. மலேசியாவில் கடைசியாக பொதுநலவாய விளையாட்டுப் போட்டி 1998ஆம் ஆண்டு நடைபெற்றது. வாழ்வில் ஒரு முறை வரும் வாய்ப்பு இது என்று மலேசியாவின் பொதுநலவாய விளையாட்டுகள் சங்கம் குறிப்பிட்டது.
அதனைத் தொடர்ந்து பொதுநலவாய விளையாட்டு விழாவை ஏற்று நடத்த பொதுநலவாய விளையாட்டுகள் சம்மேளனம் மலேசியாவுக்கு 100 மில்லியன் பவுண்ட் (170 மில்லியன் வெள்ளி) நிதி உதவி வழங்க முன்வந்தது.
எனினும், பெரிய அளவிலான விளையாட்டு விழாவை ஏற்று நடத்தும் ஒட்டுமொத்தச் செலவுக்கு அந்தத் தொகை போதாது என்று மலேசிய விளையாட்டு, இளையர் துறை அமைச்சு அறிக்கை ஒன்றில் தெரிவித்தது.அத்தோடு, இந்தக் குறுகிய காலத்தில் பொருளாதார ரீதியில் ஏற்படக்கூடிய பாதிப்பைக் கணிக்க முடியவில்லை என்றும் அமைச்சு குறிப்பிட்டது.
இதனையடுத்து மலேசியா 2026 பொதுநலவாய விளையாட்டு விழாவை ஏற்று நடத்தப்போவதில்லை என்று அறிவித்துள்ளது. செலவின் காரணமாக அந்த முடிவு எடுக்கப்பட்டதாக மலேசிய அரசாங்கம் கூறியது. பிரதமர் அன்வார் இப்ராஹிம் தலைமையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் அந்த முடிவு எடுக்கப்பட்டது.
2026 பொதுநலவாய விளையாட்டு விழாவை ஏற்று நடத்தும் பொறுப்பிலிருந்து அவுஸ்திரேலியாவை அடுத்து மலேசியாவும் விலகிக்கொண்டதையடுத்து இந்த விளையாட்டுகளின் எதிர்காலம் கேள்விக்குறியாக மாறியது.
இந்த நிலையில், 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள பொதுநலவாய விளையாட்டு விழாவை நடத்துவதற்கு ஸ்கொட்லாந்து அரசு விருப்பம் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி, ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் 2026 ஏப்ரல் மாதம் குறித்த விளையாட்டு விழாவை நடத்துவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பில் பொதுநலவாய விளையாட்டுகள் சம்மேளனத்தின் தலைவர் கிறிஸ் ஜென்கின்ஸ் கூறுகையில், ‘நாங்கள் ஸ்கொட்லாந்தின் பொதுநலவாய விளையாட்டு விழா ஏற்பாட்டுக் குழு (CGS) மற்றும் ஸ்கொட்லாந்து அரசாங்கத்துடன் பல மாதங்களாக பேச்சுவார்த்தை நடாத்தி வருகிறோம், மேலும் 2026 இல் பொதுநலவாய விளையாட்டு விழாவை நடத்துவதற்கான தங்களது முன்மொழிவை முன்னெடுக்க அரசாங்கத்திடமிருந்து ஆதரவு கிடைத்துள்ளதாக ஸ்கொட்லாந்தின் பொதுநலவாய விளையாட்டு விழா ஏற்பாட்டுக் குழு உறுதிப்படுத்தியுள்ளதை அறிந்து மகிழ்ச்சியடைகிறோம் என தெரிவித்தார்.
எவ்வாறாயினும், 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள கிளொஸ்கோ பொதுநலவாய விளையாட்டு விழா எந்தக் காலப்பகுதியில் நடைபெறும் என்ற உத்தியோகபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.
முன்னதாக 2014ஆம் ஆண்டு பொதுநலவாய விளையாட்டு விழா ஸ்கொட்லாந்தின் கிளாஸ்கோ நகரில் நடைபெற்றது. எனினும், ஸ்கொட்லாந்தில் பொதுநலவாய விளையாட்டு விழா நடைபெறுவது 4ஆவது தடவை என்பது குறிப்பிடத்தக்கது.
>> மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க <<