ஆஸி. கழகத்தில் கௌஷால் சில்வாவுக்கு முக்கிய பதவி 

Dandenong Cricket Club

9
Dandenong Cricket Club

அவுஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள டண்டெனாங் கிரிக்கெட் கழகத்தின் (Dandenong Cricket Club) மகளிர் கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் விக்கெட் காப்பு துடுப்பாட்ட வீரர் கௌஷல் சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

மெல்போர்னில் உள்ள முதல்தர கழகங்களில் ஒன்றான டண்டெனாங் கிரிக்கெட் கழகத்தின் இணையத்தளம் அவரது நியமனத்தை உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.

அவுஸ்திரேலியாவில் நடைபெறுகின்ற விக்டோரியா பிரீமியர் கிரிக்கெட் தொடரை மனதில் கொண்டு இந்த நியமனம் செய்யப்பட்டதாக டண்டெனாங் கிரிக்கெட் கழகத்தின் இணையத்தளம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, இப்புதிய நியமனம் தொடர்பில் கௌஷால் சில்வா கருத்து தெரிவிக்கையில், ‘டண்டெனாங் கிரிக்கெட் கழகத்தின் மகளிர் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்பதில் நான் உண்மையிலேயே மகிழ்ச்சியடைகிறேன். முன்னதாக டண்டெனாங் ஆண்கள் அணிக்காக விளையாடியிருந்த நான், இங்கு இருந்த காலத்தில் நான் மிகவும் மதித்த இந்த கழகத்திற்கும் சூழலுக்கும் நன்றி செலுத்த இது ஒரு அர்த்தமுள்ள வாய்ப்பாக தெரிகிறது. பெண்களுக்கு பயிற்சி அளிப்பதில் என்னை கவர்வது அவர்களின் கற்பதற்கான ஆர்வம், முன்னேற உள்ள உந்துதல், மற்றும் தங்களின் சிறந்த வடிவமாக இருக்க வேண்டும் என்ற நிலையான விருப்பமே. இத்தகைய ஆர்வம் ஒரு பயிற்சியாளராக எனக்கு அசாத்தியமான ஊக்கத்தை அளிக்கிறது என தெரிவித்தார்.

அத்துடன், ஒவ்வொரு வீராங்கனையின் தனிப்பட்ட வளர்ச்சியை உறுதிசெய்யும் அதேவேளை, வளர்ச்சி, பொறுப்புணர்வு மற்றும் சிறப்பை ஊக்குவிக்கும் அணி சூழலை உருவாக்கி, ஒரு முழுமையான, உயர்-செயல்திறன் கொண்ட திட்டத்தை உருவாக்குவதே எனது நோக்கம். இறுதியில், எங்கள் வீராங்கனைகள் பிரீமியர் நிலையில் மட்டுமல்லாது சிறப்பாக செயல்பட்டு, மாநில மற்றும் தேசிய அளவில் பிரதிநிதித்துவம் செய்யும் அளவுக்கு முன்னேறுவதை நான் காண விரும்புகிறேன்’ என அவர் மேலும் குறிப்பிட்டார்.

கௌஷல் சில்வாவும் இதற்கு முன்பு இந்த விளையாட்டுக் கழகத்திற்காக விளையாடியுள்ளார். அதேபோல, அவுஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்த பின்னர், அவர் கிரீன்வெல் கங்காரூஸ் கிரிக்கெட் கழகத்தின் ஆண்கள் அணிக்கு பயிற்சியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இலங்கைக்காக 39 டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள 38 வயதான கௌஷல் சில்வா, 3 சதங்கள் மற்றும் 12 அரைச் சதங்களுடன் 2099 ஓட்டங்களை எடுத்துள்ளார். இவர் கடந்த ஆம் ஆண்டு 2018இல் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<