பாக். கிரிக்கெட் சபைக்கு புதிய பிரதம நிறைவேற்று அதிகாரி

104
PCB

பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் புதிய பிரதம நிறைவேற்று அதிகாரியாக (CEO) சர்வதேச கிரிக்கெட் பேரவையின் நிதிப் பிரிவின் முன்னாள் பிரதம அதிகாரியான பைஸால் ஹஸ்னைன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதன்படி, அடுத்த ஆண்டு ஜனவரி முதல் அவர் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக பணிகளை ஆரம்பிப்பார் என அந்நாட்டு கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது;

இதற்கு முன்னர் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் நிதிப் பிரிவின் பிரதம அதிகாரியாகவும், ஜிம்பாப்வே கிரிக்கட் சபையின் பணிப்பாளராகவும் பணியாற்றியுள்ள இவர், உலகின் பல முன்னணி நிறுவனங்களில் பணியாற்றிய அனுபவத்தைக் கொண்டவராவார்.

பாக்.கிரிக்கெட்டின் பிரதம நிறைவேற்று அதிகாரி வசீம் கான் இராஜினாமா

இதனிடையே, பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் புதிய பிரதம நிறைவேற்று அதிகாரியாக பைஸால் ஹஸ்னைன் நியமிக்கப்பட்டமை தொடர்பில் அந்நாட்டு கிரிக்கெட் சபையின் தலைவர் ரமீஸ் ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“பைஸால் ஹஸ்னைன் உலக கிரிக்கெட்டில் அனைவராலும் நன்கு அறியப்பட்ட மிகவும் உயர்ந்த வரவேற்பை கொண்டுள்ள நபர். அதேபோல, நிறுவன மற்றும் நிதி மேலாண்மை குறித்து அவரிடம் உள்ள அறிவு பாராட்டத்தக்கதாகவும், நம்பிக்கைக்குரியதாகவும் காணப்படுகின்றது.

பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கான எனது எதிர்கால திட்டங்களின்படி, பைஸாலிடம் காணப்படுகின்ற அறிவு மற்றும் பெரிய அளவிலான அனுபவத்தைப் பயன்படுத்தி பாகிஸ்தான் கிரிக்கெட்டை பலப்படுத்துவதற்கும், வலுவான மற்றும் நிதி நோக்கங்களைப் பெற்றுக்கொள்வதற்கு எதிர்பார்த்துள்ளேன்” என குறிப்பிட்டுள்ளார்.

இதுஇவ்வாறிருக்க, பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக நியமிக்கப்பட்டமை தொடர்பில் பைஸால் ஹஸ்னைன் கருத்து தெரிவிக்கையில்,

“பாகிஸ்தான் கிரிக்கெட் சபை தலைவரின் நோக்கங்களை அடைவதற்கு என்னுடைய பங்களிப்பினை சிறந்த முறையில் லழங்குவதற்கு அர்ப்பணிப்புடன் செயல்படுவேன்” என தெரிவித்தார்.

இதற்குமுன் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக வசீம் கான் பணியாற்றியிருந்ததுடன், இந்த ஆண்டு T20 உலகக் கிண்ணத்துக்கு முன் அவர் பதவியை இராஜினாமா செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<