இத்தாலி அணியில் இணையும் இங்கிலாந்து வேகப் பந்துவீச்சாளர்

835
jade dernbach
@Getty Images

இங்கிலாந்து அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஜேட் டெர்ன்பாக் இத்தாலி கிரிக்கெட் அணிக்காக விளையாடவுள்ளார்.

இலங்கைக்கு எதிராக 2011இல் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான 35 வயதான டெர்ன்பாக், கடைசியாக 2014இல் தென்னாபிரிக்காவுக்கு எதிராக விளையாடியிருந்தார்.

அத்துடன், 2011 முதல் 2014 வரை இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்காக 24 ஒருநாள் போட்டிகளில் 31 விக்கெட்டுக்களையும், 34 T20 போட்டிகளில் 39 விக்கெட்டுக்களையும் வீழ்த்தி நட்சத்திர வீரராக வலம் வந்தார்.

அத்துடன், இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட்டில் சர்ரே அணிக்காக விளையாடி வந்த இவர், தற்போது இங்கிலாந்தில் அனைத்துவித கிரிக்கெட்டிலிருந்தும் ஓய்வை அறிவித்துவிட்டு இத்தாலி கிரிக்கெட் அணியுடன் இணைந்துகொண்டுள்ளார்.

>> அமெரிக்கா அணிக்காக விளையாடத் தயாராகும் இங்கிலாந்து வீரர்

இந்த நிலையில், அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஐசிசியின் 2022 T20 உலகக் கிண்ண தொடருக்கான தகுதிகாண் போட்டிக்கான இத்தாலி கிரிக்கெட் அணியில் ஜேட் டெர்ன்பாக் இடம்பிடித்துள்ளார்.

தென்னாபிரிக்காவில் பிறந்த டெர்ன்பாக்கின் தாய்க்கு இத்தாலியுடன் பிணைப்பு உள்ளதால் அதன் அடிப்படையில் அவர் இத்தாலி கிரிக்கெட் அணியில் விளையாடத் தகுதிபெற்றுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

இதுஇவ்வாறிருக்க, நோர்தம்டன்ஷெயார் கவுண்டி அணிக்காக விளையாடிய கரேத் பெர்க்கும், இத்தாலி கிரிக்கெட் அணியில் இணைந்துள்ளார் இவருக்கு தலைவர் மற்றும் தலைமைப் பயிற்சியாளர் பதவி கிடைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

அத்துடன், இங்கிலாந்து அணியின் மற்றுமொரு முன்னாள் வீரரான ஓவைஸ் ஷாஹ் இத்தாலி அணியின் உதவி பயிற்சியாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

>> மஹேலவின் கழகத்தில் இணைகிறார் குசல் மெண்டிஸ்

2022 T20 உலகக் கிண்ணத்துக்கான ஐரோப்பிய வலய நாடுகளுக்கான தகுதிகாண் போட்டிகள் ஒக்டோபர் 15ஆம் திகதி முதல் 21ஆம் திகதி வரை ஸ்பெயினில் நடைபெறவுள்ளது.

இதில் இத்தாலி அணி ஜெர்சி, ஜேர்மனி, டென்மார்க் ஆகிய அணிகளுடன் மோதவுள்ளமை என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே, இந்தப் போட்டியில் முதல் இரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் T20 உலகக் கிண்ணத்துக்கான உலக அளவிலான தகுதிச்சுற்றுப் போட்டியில் விளையாட தகுதிபெறும்.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<