2022 T20 உலகக் கிண்ண போட்டி அட்டவணை வெளியீடு

4063
Fixtures for 2022 T20 World Cup Revealed

அவுஸ்திரேலியாவில் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள ஐசிசி இன் ஆடவருக்கான T20 உலகக் கிண்ணத் தொடருக்கான போட்டி அட்டவணை இன்று (21) வெளியிடப்பட்டுள்ளது.

இதில் சுப்பர்-12 சுற்றுக்கு நேரடி தகுதிபெறாத இலங்கை அணி, முதல் சுற்றில் நமீபியா, ஸ்கொட்லாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் ஆகிய அணிகளுடன் மோதவுள்ளதுடன், ஒக்டோபர் 16ஆம் திகதி நடைபெறவுள்ள முதல் போட்டியில் நமீபியாவை எதிர்கொள்கிறது.

அவுஸ்திரேலியாவில் ஒக்டோபர் 16ஆம் திகதி முதல் நவம்பர் 13ஆம் திகதிவரை 8ஆவது T20 உலகக் கிண்ணத் தொடரின் போட்டிகள் நடைபெறவுள்ளன.

மொத்தமாக 29 நாட்கள் நடைபெறும் இந்தத் தொடரில் 45 போட்டிகள் நடைபெறவுள்ளன. அத்துடன், அவுஸ்திரேலியாவில் உள்ள 7 நகரங்களில் இம்முறை உலகக் கிண்ணப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

இதற்காக அடிலெய்ட், பிரிஸ்பேன், ஜீலாங், ஹோர்பார்ட், மெல்போர்ன், பெர்த், சிட்னி, ஆகிய நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இறுதிப்போட்டி நவம்பர் 13ஆம் திகதி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்திலும், அரை இறுதிப்போட்டிகள் சிட்னி, அடிலெய்ட் மைதானங்களில் முறையே நவம்பர் 9ஆம், 10ஆம் திகதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன.

16 நாடுகள் பங்கேற்கும் இத்தொடரில் இந்தியா உட்பட 12 அணிகள் நேரடியாக குழு நிலைப் போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளன. எஞ்சிய 4 அணிகள் தகுதிச்சுற்றுகளில் வெற்றிபெற்று குழு நிலை போட்டிகளுக்கு நுழைய உள்ளன.

இதன்படி, A மற்றும் B என இரு குழுக்களாக நடைபெறவுள்ள முதல் சுற்றின் B பிரிவில் இலங்கை, நமீபியா மற்றும் தகுதிகாண் போட்டிகளின் மூலம் தெரிவாகின்ற 2 அணிகள் இடம்பெறவுள்ளதுடன், B பிரிவில் மேற்கிந்திய தீவுகள் ஸ்கொட்லாந்து மற்றும் தகுதிகாண் போட்டிகளின் மூலம் தெரிவாகின்ற 2 அணிகள் இடம்பெறவுள்ளன.

இந்த நிலையில், முதல் சுற்றுப் போட்டியின் முதல் போட்டியில் இலங்கை அணி, நமீபியாவை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி ஒக்டோபர் 16ஆம் திகதி ஜீலாங்கில் உள்ள கர்தினியா பார்க் மைதானத்தில் நடைபெறும்.

இதனையடுத்து 18ஆம் திகதி இரண்டாவது போட்டியிலும், 20ஆம் திகதி 3ஆவது போட்டியிலும் இலங்கை விளையாடவுள்ளது. இந்தப் போட்டிகள் அனைத்தும் ஜீலாங்கில் நடைபெறும்.

இதனிடையே, இம்முறை T20 உலகக் கிண்ண சுபர்-12 சுற்றின் குழு 1 இல் அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், A குழுவில் முதலிடம் பெறும் அணி, B குழுவில் 2-வது இடம்பெறும் அணியும் இடம்பெற்றுள்ளன.

சுபர்-12 சுற்றின் குழு 2 இல் இந்தியா, பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, பங்களாதேஷ், B குழுவில் முதலிடம் பெறும் அணி, B குழுவில் 2-வது இடம்பெறும் அணியும் இடம்பெற்றுள்ளன.

சுபர்-12 சுற்றின் முதல் போட்டி ஒக்டோபர் 22ஆம் திகதி சிட்னியில் ஆரம்பமாகவுள்ளதுடன், இந்தப் போட்டியில் நடப்புச் சம்பியன் அவுஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்து அணிகள் மோதவுள்ளன.

அதேநேரம், இந்தியா தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர்த்து விளையாடுகிறது. ஒக்டோபர் 23ஆம் திகதி மெல்போர்ன் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெறுகிறது. அத்துடன், இந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை அடுத்த மாதம் 7ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<