முத்தரப்பு T20I தொடர்: நியூசிலாந்து அதிரடி ஆட்டக்காரர் விலகல்

Zimbabwe T20I Tri Series 2025

129
Zimbabwe T20I Tri Series 2025

 நியூசிலாந்து அணியின் அதிரடி ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஃபின் ஆலன் காயம் காரணமாக ஜிம்பாப்வேயில் நடைபெறவுள்ள முத்தரப்பு T20I தொடரில் இருந்து விலகியுள்ளார்.

ஜிம்பாபவே, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா அணிகள் பங்கேற்கும் முத்தரப்பு T20I தொடர் ஜிம்பாப்ப்வேயில் ஜுலை 14 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இந்த முத்தரப்பு T20I தொடரில் பங்குபற்றும் மிட்செல் சான்ட்னர் தலைமையிலான நியூசிலாந்து அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த அணியில் பென் சீயர்ஸ், லொக்கி ஃபெர்குசன், கைல் ஜேமிசன் உள்ளிட்டோர் காயம் காரணமாக இடம்பெறவில்லை. மேற்கொண்டு நட்சத்திர வீரர் கேன் வில்லியம்சனுக்கும் ஓய்வளிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பெவன் ஜேக்கப்ஸ் மற்றும் ஆடம் மில்னே ஆகியோருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. மேலும் இந்த அணியில் டிம் செஃபெர்ட், ஃபின் ஆலன், டெரில் மிட்செல், மார்க் சாப்மேன் உள்ளிட்ட நட்சத்திர வீரர்களும் இடம்பிடித்திருந்தனர்.

இந்த நிலையில், அந்த அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் ஃபின் ஆலன் காயம் காரணமாக ஜிம்பாப்வே முத்தரப்பு T20I தொடரில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவில் தற்போது நடைபெற்று வரும் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் சான் ஃபிரான்சிஸ்கோ யூனிகோர்ன்ஸ் அணிக்காக விளையாடிய போது ஃபின் ஆலன் காயத்தை சந்தித்ததாக கூறப்படுகிறது. மேலும் அவரது காயம் தீவிரமடைந்துள்ளதால் முத்தரப்பு டி T20I தொடரில் இருந்து விலகியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நியூசிலாந்து அணிக்காக இதுவரை 52 T20I போட்டிகளில் விளையாடியுள்ள ஃபின் ஆலன் 2 சதங்கள், 5 அரைச் சதங்கள் என மொத்தமாக 1285 ஓட்டங்களைக் குவித்துள்ளார். மேலும் நடைபெற்று வரும் மேஜர் லீக் கிரிக்கெட் தொடரிலும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அவர் 9 போட்டிகளில் 333 ஓட்டங்;களையும் குவித்திருந்தார். இவ்வாறு திறமைகளை வெளிப்படுத்தியுள்ள ஃபின் ஆலன் முத்தரப்பு T20I தொடரில் இருந்து விலகி இருப்பது நியூசிலாந்து அணிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

அதேசமயம் ஃபின் ஆலனுக்கு பதிலான மாற்று வீரரையும் நியூசிலாந்து கிரிக்கெட் சபை விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இந்த தொடருக்கான நியூசிலாந்து அணியில் இடம்பிடித்துள்ள அறிமுக வீரர் பெவான் ஜேக்கப்ஸ் ஆரம்ப துடுப்பாட்ட வீரராக களமிறங்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

நியூசிலாந்து T20I அணி விபரம்: மிட்செல் சாண்ட்னர் (தலைவர்), மைக்கல் பிரேஸ்வெல், மார்க் சாப்மேன், ஜேக்கப் டஃபி, ஜக் ஃபோல்க்ஸ், மெட் ஹென்றி, பெவன் ஜேக்கப்ஸ், ஆடம் மில்னே, டெரில் மிட்செல், வில் ஓ’ரூர்க், க்ளென் பிலிப்ஸ், ரச்சின் ரவீந்திரா, டிம் செஃபெர்ட், இஷ் சோதி

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<