இம்மாத இறுதியில் தென் கொரியா பயணமாகும் இலங்கை கால்பந்து அணி

156

இலங்கை கால்பந்து அணியானது, நீண்ட ஒரு இடைவேளையின் பின்னர் தமது சர்வதேச போட்டிகளுக்காக இம்மாத இறுதியில் (31ஆம் திகதி) தென்கொரிய மண்ணினை நோக்கி பயணிக்கவுள்ளது. 

உலகக் கிண்ணத் தொடருக்கான ஆசியப் பிராந்திய அணிகளை தெரிவு செய்யும் பூர்வாங்க தகுதிகாண் சுற்றுத்தொடர் மற்றும் 2023ஆம் ஆண்டுக்கான ஆசிய கால்பந்து சம்பியன்ஷிப் தொடர் என்பவற்றில் பங்குபெறும் நோக்கிலேயே இலங்கை கால்பந்து அணி தென்கொரிய மண்ணுக்கு பயணமாகவிருக்கின்றது. 

மாற்றங்களுடன் மீண்டும் பயிற்சிகளை ஆரம்பித்த இலங்கை கால்பந்து அணி

அந்தவகையில், தென்கொரிய மண்ணுக்கு செல்லும் இலங்கை கால்பந்து அணி மேற்குறிப்பிட்ட தொடர்களுக்காக தமது குழு அணிகளான லெபனான் மற்றும் தென்கொரிய ஆகிய நாடுகளுடன் பலப்பரீட்சை நடாத்தவிருக்கின்றது. 

இதில் முதல் ஆட்டத்தில் இலங்கை அணி ஜுன் மாதம் 5ஆம் திகதி லெபனான் அணியையும் 9ஆம் திகதி தென்கொரிய அணியையும் சந்திக்கவுள்ளது. இந்த இரண்டு போட்டிகளும் தென்கொரியாவின் கோயங் அரங்கில் இடம்பெறவுள்ளன.

மொத்தம் 22 பேர் கொண்ட வீரர்கள் குழாத்துடன் தென்கொரிய மண்ணுக்கு பயணமாகும் இலங்கை கால்பந்து அணிக்கு தலைவராக கோல்காப்பாளர் சுஜான் பெரேரா நியமனம் செய்யப்பட்டிருப்பதோடு, முன்கள வீரர்களான வசீம் ராசிக் மற்றும் கவிந்து இஷான் ஆகியோர் உப தலைவர்களாக பெயரிடப்பட்டிருக்கின்றனர்.

இதேநேரம், முன்னர் தேசிய கால்பந்து அணியின் பயிற்சிகளுக்காக அறிவிக்கப்பட்டிருந்த சர்வான் ஜோஹர் மற்றும் ரீப் பிரிஸ் ஆகியோர் இந்த கால்பந்து குழாமில் இருந்து நீக்கப்பட்டு, ரிப்கான் மொஹமட்டிற்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. 

இலங்கை தேசிய அணியில் இரண்டு மாற்றங்கள்

அதேநேரம், தென்கொரியா செல்கின்ற இலங்கை கால்பந்து அணியுடன் 11 பேர் கொண்ட அதிகாரிகள் குழாமும் பயணிக்கின்றது. இந்த குழாத்தில் இலங்கை கால்பந்து அணியின் பயிற்சியாளர் அமீர் அலாஜிக், அணி முகாமையாளர் ஆசிப் அன்ஸார், உதவிப் பயிற்சியாளர் அமீர் டொக்சனால்டிக் போன்றோர் முக்கியமானவர்களாக காணப்படுகின்றனர். 

இலங்கை கால்பந்து குழாம் 

சுஜான் பெரோ (அப் கண்ட்ரி லயன்ஸ்) – அணித்தலைவர், பிரபாத் ருவன் அனுரசிறி (ப்ளூ ஈகிள்ஸ்), தனுஷ்க ராஜபக்ஷ (நியூ யங்ஸ்), ஹர்ஷ பெர்னான்டோ (ப்ளூ ஈகிள்ஸ்), ரொஷான் அப்புஹாமி (டிபெண்டர்ஸ்), ரிப்கான் மொஹமட் (டிபெண்டர்ஸ்), ஷமோத் டில்ஷான் (கொழும்பு), ஷரித்த ரத்நாயக்க (கொழும்பு), டக்சன் பியுஸ்லஸ் (நியூ யங்ஸ்), சதுரங்க மதுஷான் (அப் கண்ட்ரி லயன்ஸ்), மேர்வின் ஹமில்டன், ஷலன சமீர (கொழும்பு), ஜூட் சுபன் (ரினௌன்), மொஹமட் முஸ்தாக் (அப் கண்ட்ரி லயன்ஸ்), மொஹமட் பசால் (ப்ளூ ஸ்டார்), கவிந்து இஷான் (அப் கண்ட்ரி லயன்ஸ்) – உப அணித்தலைவர்

டில்லோன் டி சில்வா (குயின் பார்க் ரேஞ்சர்ஸ்), அஹ்மட் வசீம் ராசிக் (அப் கண்ட்ரி லயன்ஸ்) – உப அணித்தலைவர், மொஹமட் ஆகிப் (கொழும்பு), அசிகுர் ரகுமான் (டிபெண்டர்ஸ்), மொஹமட் ஹஸ்மீர் (சீ ஹோக்ஸ்), சுபுன் தனன்ஞய (ரெட் ஸ்டார்ஸ்)

அதிகாரிகள் குழாம் 

அமீர் அலாஜிக் (தலைமைப் பயிற்சியாளர்), ஆசிப் அன்ஸார் (முகாமையாளர்), அமீர் டொக்சனால்டிக் (உதவிப் பயிற்சியாளர்),  Dr. MRF. ஜயசூரிய (அணி வைத்தியர்), மதுவந்த பண்டார (ஊடக அதிகாரி), ஈஸா ரதீ இப்ராஹிம் (தொழில்நுட்ப அதிகாரி/Technical Officer), அஷான் சத்துரங்க (உடற்தகுதிப் பயிற்சியாளர்), சன்க ஜயமின (Performance Analyst), முஹ்சின் அப்துல் பார்ஷித் (Physiotherapist), பிரித்தீக்க ஜீவன (Masseur), ரொஷான் ப்ரதீப் (Kitman) 

>>மேலும் கால்பந்து செய்திகளுக்கு<<