இலங்கையின் கால்பந்து வீழ்ச்சிக்கு FFSL தான் காரணம்: ஹசன் ரூமி

474

சிறந்த நிலையில் இருந்த கால்பந்து விளையாட்டு தற்பொழுது இலங்கையில் மோசமான நிலைக்கு செல்வதற்கு இலங்கை கால்பந்து சம்மேளனமும் முக்கிய காரணம் என்று முன்னாள் தேசிய அணி வீரரும், தற்போதைய முன்னணி பயிற்றுவிப்பாளருமான மொஹமட் ஹசன் ரூமி தெரிவித்துள்ளார்.    

கொழும்பு கால்பந்து கழகத்திற்கு தொடர்ச்சியாக 3 முறை டயலொக் சம்பியன்ஸ் லீக் வெற்றிக் கிண்ணத்தை பெற்றுக் கொடுத்த பெருமையைக் கொண்ட ஹசன் ரூமி UTV நிறுவனத்திற்கு வழங்கிய செவ்வி ஒன்றின் போதே இதனைத் தெரிவித்தார்.  

FIFA உலகக் கிண்ண தகுதிகாண் போட்டிகளின் திகதிகள் அறிவிப்பு

இலங்கை அணி தற்போது பிஃபாவின் அணிகளுக்கான தரவரிசையில் மிக மோசமான நிலையான 206ஆவது இடத்தில் உள்ளது. முன்னைய காலங்களில் மிகச் சிறந்த நிலையில் இருந்த இலங்கை கால்பந்து அணி, தற்போது பின்னடைந்துள்ளமைக்கான காரணத்தை குறிப்பிட்ட ரூமி,  

”நாம் விளையாடிய 80, 90 காலப்பகுதிகளில் இலங்கை அணி தரப்படுத்தலில் 123ஆவது இடத்தில் இருந்தது. 2000ஆம் ஆண்டாகும் போது நாம் 156, பின்னர் 2005, 2010ஆகும் போது நாம் தரப்படுத்தலில் பின்னோக்கி சென்று கொண்டிருந்தோம். ஏனைய நாடுகள் முன்னோக்கிச் சென்று கொண்டிருக்கும் போது இலங்கை பின்னோக்கிச் சென்று கொண்டிருந்தது.    

இதற்கு கால்பந்து சம்மேளனமும் பதில் கூற வேண்டும். ஏனென்றால் எமக்குச் சரியான கால்பந்து கட்டமைப்பு ஒன்று இல்லை. கால்பந்து திட்டமொன்று இல்லை, இலங்கையில் இளைஞர் அபிவிருத்தி திட்டம் இல்லை. ஏனைய நாடுகள் முன்னோக்கி செல்லும் போது நாங்கள் கடந்த 30 வருடங்களில் பின்னோக்கி செல்வதற்கு இவைதான் காரணம். 

கால்பந்து சம்மேளனம் ஒரு திட்டமிடலை செய்தால்தான் கழக மட்டம், பாடசாலை மட்டம், அகடமி மட்டம் மற்றும் இளைஞர் மட்டத்தில் கால்பந்து சரிசமமாக வரும். ஆனால் இன்றுவரை நாள் அவ்வாறான ஒரு திட்டத்தை காணவில்லை” என்றார். 

அதேபோன்று, தற்போது சிறந்த நிலையில் உள்ள மாலைத்தீவுகள் அணிக்கு கால்பந்து விளையாட்டை சொல்லிக் கொடுத்தது இலங்கைதான் என்றும் ரூமி குறிப்பிட்டார்.  

”மாலைத்தீவுகள் நாட்டிற்கு கால்பந்தை சொல்லிக் கொடுத்தது இலங்கைதான். நாம் அவர்களுக்கு எதிராக 8, 9, 10 கோல்களைப் பெற்றாலும் அவர்கள் தமது முயற்சியை விடவில்லை. அவர்கள் பல அணிகளுடனும் தோல்வியடைந்தனர். ஆனால், தொடர்ந்து அவர்கள் சர்வதேசப் போட்டிகளில் விளையாடினர்.  அதிலிருந்து நிறைய விடயங்களைக் கற்று தம்மை முன்னேற்றினர். அவர்களுக்கு நீண்ட கால இலக்கு இருந்தது. அதற்காகவே அவர்கள் செயற்பட்டனர்” என்றார்.  

தற்போதைய இலங்கை அணி வீரர்களின் நிலைமை குறித்து தான் மிகவும் கவலை கொள்வதாகவும் ரூமி குறிப்பிட்டார்.  

“இலங்கை தேசிய அணியின் ஜேர்சியை அணிந்து விளையாடிய வீரர் என்ற வகையில் இலங்கை அணி பற்றி நிச்சயம் எமக்கு கவலை உள்ளது. கவலைக்கான காரணம் தற்போது இருக்கின்ற வீரர்களின் ஒழுக்கம் பிரச்சினையாக உள்ளமையாகும். 

அப்போதெல்லாம் நாம் கால்பந்து ஆடும் காலத்தில் நேரத்திற்கு உறங்குவோம். நல்ல உணவுகளை உண்போம், நேரத்திற்கு பயிற்சிக்குச் செல்வோம். இவையெல்லாம் ஒழுக்கத்திற்குள் அடங்கும்.  

இப்போதிருக்கும் வீரர்களின் ஒழுக்கம் மற்றும் பயிற்சி மற்றும் முன்னேற்பாடுகள் மோசமாக உள்ளன. அதுவும் கால்பந்து பின்தங்குவதற்கு காரணம். கால்பந்து வீரர் ஒருவர் கால்பந்து ஆடுவதாகக் கூறி, ஜெர்சியையும் சாப்பத்தையும் அணிந்தமைக்காக அவர் கால்பந்து வீரராக மாட்டார்.

அவர் தமது பின்புலத்தை சரியாக செய்து கொள்ள வேண்டும். அதனை இப்போதுள்ள வீரர் செய்வதில்லை. இது கவலைக்குரிய ஒன்றாக உள்ளது” என்று அவர் தெரிவித்தார். 

PSG ஐ விட்டு வெளியேறும் கவானி, தியாகோ சில்வா

இலங்கை தேசிய கால்பந்து அணி அண்மைக் காலத்தில் போட்டிகளில் சோபிக்கத் தவறி வரும் நிலையில் பிஃபா உலகத் தரவரிசையிலும் வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளது. தற்போது 206ஆவது இடத்தில் இருக்கும் இலங்கை அணி கடைசி இடத்தை விடவும் வெறுமனே ஐந்து இடங்களே முன்னிலையில் உள்ளது.  

எனவே, இவ்வாறான மோசமான நிலையில் இருந்து இலங்கை கால்பந்தை மீட்க இலங்கையில் கால்பந்து கல்லூரி ஒன்றை எதிர்காலத்தில் அமைப்பதற்கு தாம் திட்டமிடுவதாக கொழும்பு றோயல் கல்லூரியின் தலைமைப் பயிற்சியாளராக செயற்படும் ரூமி தெரிவித்தார்.  

“சிறு வயதிலேயே வீரர்களுக்கு விளையாட்டின் பெறுமதி மற்றும் வாழ்வின் பெறுமதியை கற்றுக்கொடுக்க வேண்டும். அவ்வாறு கற்றுக்கொடுத்தால் அவர்கள் தவறான வழிக்குச் செல்வது குறையும். இலங்கையில் கால்பந்து தொழில் முறையாக இல்லாத போதும் சர்வதேச அளவில் கால்பந்து என்பது தொழில் முறையான விளையாட்டு.

உலகளவில் கால்பந்து வீரர்களை எடுத்துப்பார்த்தால் எல்லோருமே செல்வச்செழிப்புடன் உள்ளனர். அந்த நிலைமைக்கு கொண்டுவர வீரர்களை நாம் சிறுவயதில் இருந்தே ஊக்குவிக்க வேண்டும்.

இலங்கையில் தற்போது கால்பந்து அகடமிகளே இருக்கின்றன. எதிர்காலத்தில் கால்பந்து கல்லூரி ஒன்றை ஆரம்பிக்க எனக்கு திட்டம் உள்ளது. அந்த கல்லூரி ஊடாக வீரர்களை வளர்த்து வெளிநாட்டுடன் இணைத்து வீரர்களை வெளிநாடுகளுக்கு அனுப்பி அங்குள்ள அகடமிகள் ஊடாக அவர்களுக்கு பெறுமதி சேர்க்க எதிர்காத்தில் திட்டம் ஒன்றை கொண்டுவர எதிர்பார்த்துள்ளோம்” என்று அவர் கூறினார். 

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகெங்கும் விளையாட்டுகள் அனைத்தும் முடங்கி இருந்த நிலையில் தற்போது படிப்படியாக வழமைக்கு திரும்பி வருகின்றன. இலங்கை கால்பந்து போட்டிகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான அறிவிப்புகள் வெளியான வண்ணம் உள்ளது. எனினும் வீட்டில் முடங்கிக் கிடந்த கால்பந்து வீரர்களுக்கு ரூமி சில ஆலோசனைகளையும் வழங்கி இருந்தார். 

“வீட்டில் இருக்கும் காலத்தில் எமது உடல் கட்டமைப்பு விலகிவிடும். எமது உடல் வலிமையும் இழந்து விடும். நெகிழ்வுத் தன்மையும் இல்லாமல் போய்விடும். உள ரீதியாகவும் நாம் பலமிழந்து விடுவோம். 

குறிப்பாக, விளையாட்டு வீரர்கள் வீட்டில் இருக்கும் போது அவர்களின் உளநிலை வீழ்ச்சி அடைந்து விடும். ஏனென்றால் மைதானத்தில் இருந்த வீரர்கள் வீட்டில் அடைந்து கிடக்க விரும்புவதில்லை. எனவே, வீரர்கள் சிறிய இடத்திலேனும் முடியுமானவரை கார்டியோ உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள். சும்மா இருக்க வேண்டாம். குறைந்தது கிழமைக்கு மூன்று நாளேனும் 40 நிமிடங்கள் உடற்பயிற்சியை செய்தால் தமது உடற்தகைமையைப் பேண முடியும். 

வெறுனே எதுவும் செய்யாமல் இருந்து வீரர்களின் எடை கூடிய பின் அந்த எடையை குறைப்பதற்கு குறைந்தது ஆறு அல்லது ஏழு மாதங்கள் செல்லும். அது கால்பந்து வீரர் ஒருவருக்கு கடினமான ஒன்றாகும்” என்று அறிவுறுத்தினார். 

கொரோனாவின் பின் கால்பந்து போட்டிகள் இப்படித்தான் இருக்கும்

மொஹமட் ரூமி ஆசிய கால்பந்து சம்மேளனத்தில் முன்னிலை கால்பந்து பயிற்சியாளருக்கான தரத்தை அண்மையில் பெற்றுக் கொண்டார். இதன்படி ரினோன் பயிற்சியாளர் அமானுல்லாவுடன் இணைந்து ரூமி AFC இன் A உரிம பயிற்சியாளர் தேர்வில் வெற்றிகரமாக சித்தி பெற்றுள்ளார். இலங்கையில் A உரிமம் பெற்ற பயிற்சியாளர்கள் ஒரு சிலரே உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் எதிர்காலத்தில் தேசிய அணி ஒன்றுக்கு பயிற்சியாளராக செயற்பட எதிர்பார்ப்பதாக ரூமி தெரிவித்தார். 

“தேசிய அணி ஒன்றுக்கு பயிற்சியாளராவதில் உரிமம் பற்றிய பிரச்சினை ஒன்று இருந்தது. இது பற்றி என்னிடம் பேசியிருந்தனர். ஆனால் தேசிய அணியின் பயிற்சியாளர் ஒருவருக்கு A உரிமம் ஒன்று இருக்க வேண்டும். அந்த A உரிமத்தை பெறுவதில் ஏதோ காரணத்தால் தாமதம் ஏற்பட்டது. அதனால் எனக்கு அந்த வாய்ப்பு இல்லாமல் போனது. எதிர்காலத்தில் தேசிய அணி ஒன்றுக்கு பயிற்சி அளிக்க எதிர்பார்க்கிறேன்”என்றார்.          

>>மேலும் பல கால்பந்து செய்திகளைப் படிக்க <<