இலங்கைக்கு டேவிட் வோர்னர் விடுக்கும் எச்சரிக்கை

Australia Tour of Sri Lanka 2022

804

ஒருநாள் தொடரில் சுழல் பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக தயாரிக்கப்பட்ட ஆடுகளங்கள் டெஸ்ட் தொடரில் இலங்கைக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என அவுஸ்திரேலிய அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர் டேவிட் வோர்னர் தெரிவித்துள்ளார்.

அதேபோல, இந்திய ஆடுகளங்களைக் காட்டிலும் இலங்கையில் உள்ள ஆடுகளங்கள் மிகவும் அபாயகரமாக இருப்பதாகத் தெரிவித்த அவர், ஒருநாள் தொடரில் பயன்படுத்தப்படுகின்ற ஆடுகளங்கள் டெஸ்ட் தொடருக்கு தயாராகுவதற்கு தமக்கு சிறந்த பயிற்சியாக அமைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு எதிராக செவ்வாய்க்கிழமை (21) நடைபெற்ற நான்காவது ஒருநாள் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 4 ஓட்டங்களால் தோல்வியடைந்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இவ்வாறான ஆடுகளங்களில் விளையாடும் வாய்ப்பை அவுஸ்திரேலியா அணிக்கு வழங்கியமை டெஸ்ட் தொடருக்கு தயாராகுவதற்கு சிறந்த வாய்ப்பை வழங்கியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், இதுபோன்ற ஆடுகளங்கள் வலைப் பயிற்சிகளில் சுட ஒருபோதும் கிடைக்காது என்று அவர் தெரிவித்துள்ளார்.

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டியில் ஆறு சுழல் பந்துவீச்சாளர்களை இலங்கை அணி பயன்படுத்தியது. அதன்படி, இந்தப் போட்டியில் அஸ்திரேலிய அணி சுழல் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 40 ஓவர்களுக்கு மேல் விளையாட வேண்டியிருந்தது.

51 ஆண்டுகால ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அவுஸ்திரேலிய அணி இவ்வாறதொரு சவாலை சந்தித்த 5ஆவது சந்தர்ப்பம் இதுவாகும்.

இந்த நிலையில், காலியில் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரிலும் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்கள் கிடைக்கவுள்ளதால், ஒருநாள் தொடரில் இலங்கை பயன்படுத்துகின்ற தந்திரோபாயங்கள் தனது அணிக்கு சாதகமாக மாறியுள்ளதாகவும், அது இலங்கைக்கு மோசமான திருப்புமுனையை ஏற்படுத்தும் எனவும் வோர்னர் சுட்டிக்காட்டியுள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘நாங்கள் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்களை எதிர்பார்க்கிறோம். டெஸ்ட் தொடருக்கு தயாராவதற்கு இது ஒரு சிறந்த வாய்ப்பு. டெஸ்ட் தொடருக்கு செல்ல இது நல்ல பயிற்சியாக இருக்கும்.

அவர்கள் மீண்டும் மீண்டும் ஒரே ஆடுகளத்தில் விளையாட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். அதைத்தான் நாமும் விரும்புகிறோம். வலைப் பயிற்சியின் போது அவ்வாறான பயிற்சியை எங்களால் எடுக்க முடியாது.

இங்குள்ள ஆடுகளங்கள் சுழல் பந்துவீச்சுக்கு மிகவும் சாதகமானதாக இருக்கும்.   இவ்வாறான ஆடுகளத்தை நீங்கள் அதிகம் பார்க்க முடியாது. அவற்றை இங்கே காணலாம். இந்திய ஆடுகளங்களைக் காட்டிலும் முற்றிலும் வேறுபட்டது. உண்மையில் இலங்கையில் நல்ல ஆடுகளங்கள் உள்ளன. டெஸ்ட் போட்டிகளை எடுத்துக் கொண்டால் மூன்றாவது மற்றும் நான்காவது நாளிலும் ஆடுகளங்கள் சுழல் பந்துவீச்சுக்கு சாதகமாகத் தான் காணப்படும்.

டாக்காவில் விளையாடியது எனக்கு நினைவிருக்கிறது. அது நான் விளையாடிய மிக மோசமான ஆடுகளங்களில் ஒன்றாகும். ஆனால் நான் சதம் அடித்தேன். எனவே இவ்வாறான ஆடுகளங்களில் விளையாகின்ற போது உறுதியாக இருப்பதும், கவனம் செலுத்துவதும், துடுப்பாட்டத்தில் அதிக நேரம் செலவிடுவதும் முக்கியம்.

குறிப்பாக இந்திய துணைக்கண்டத்தில் விளையாடுகின்ற போது துடுப்பட்டத்தில் ஒரு சிறிய தவறு இழைத்தால் அது வீரர்களை கடுமையாக பாதிக்கிறது. குறிப்பாக அதிக வெப்பநிலையுடன் துடுப்பெடுத்தாடுவது என்பது மிகவும் கடினம். ஆனால் நாங்கள் அதற்கு தயாராக இருக்கிறோம்’ என அவர் தெரிவித்தார்.

இந்தப் போட்டியில் அவுஸ்திரேலிய அணிக்காக தனியொருவராகப் போராடிய டேவிட் வோர்னர் 99 ஓட்டங்களை குவித்த நிலையில், தனன்ஜய டி சில்வா வீசிய பந்தில் துரதிர்ஷ்டவசமாக ஸ்டம்பிங் முறையில் ஆட்டமிழந்தார்.

இதன்மூலம் தனது 19ஆவது ஒருநாள் சதத்தை ஒரு ஓட்டத்தினால் தவறவிட்ட வோர்னர், ஒருநாள் கிரிக்கெட்டில் 99 ஓட்டங்களுடன் ஸ்டம்பிங் முறையில் ஆட்டமிழந்த 2ஆவது வீரராகவும், முதல் அவுஸ்திரேலிய வீரர் என்ற பரிதாப சாதனையையும் படைத்தார்.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<