இங்கிலாந்தை வீழ்த்தியும் அரையிறுதி வாய்ப்பை இழந்த தென்னாபிரிக்கா

ICC Men’s T20 World Cup 2021

125

இங்கிலாந்து அணிக்கு எதிரான தங்களுடைய முக்கிய சுபர் 12 போட்டியில், தென்னாபிரிக்க அணி 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றும், அவுஸ்திரேலியாவை விட குறைந்த ஓட்ட விகிதத்தை கொண்டிருந்ததால் (NRR), அரையிறுதிக்கான வாய்ப்பை இழந்துள்ளது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இங்கிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானிக்க, முதலில் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி ரஸ்ஸி வென் டர் டஸன் மற்றும் எய்டன் மர்க்ரம் ஆகியோரின் அபார துடுப்பாட்டத்தின் உதவியுடன் 20 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகளை இழந்து 189 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

>>ஸ்கொட்லாந்தை வீழ்த்தி, ஆப்கானிஸ்தானை பின்தள்ளிய இந்தியா!

இறுதிவரை ஆட்டமிழக்காமல் அபாரமாக துடுப்பெடுத்தாடிய ரஸ்ஸி வென் டர் டஸன் 60 பந்துகளில் 6 சிக்ஸர்கள் மற்றும் 5 பௌண்டரிகள் அடங்கலாக 94 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, எய்டன் மர்க்ரம் 25 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 2 பௌண்டரிகள் அடங்கலாக 52 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.

இங்கிலாந்து அணியின் பந்துவீச்சை பொருத்தவரை, ஆதில் ரஷீட் மற்றும் மொயீன் அலி ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணிக்கு துடுப்பாட்ட வீரர்கள் ஆரம்பங்களை பெற்றுக்கொடுத்திருந்தாலும், இறுதி ஓவரில் காகிஸோ ரபாடா பெற்றுக்கொண்ட ஹெட்ரிக்கின் காரணமாக, 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 179 ஓட்டங்களை இங்கிலாந்து அணி பெற்றுக்கொண்டது.

இங்கிலாந்து அணிசார்பாக அதிகபட்சமாக மொயீன் அலி 37 ஓட்டங்கள், டேவிட் மலான் 33 ஓட்டங்கள், லியம் லிவிங்ஸ்டன் 28 ஓட்டங்கள் மற்றும் ஜோஸ் பட்லர் 26 ஓட்டங்கள் என சிறந்த பங்களிப்பை வழங்கியிருந்தனர். எனினும், இந்த ஓட்டக்குவிப்புகள் இங்கிலாந்து அணியின் வெற்றிக்கு போதுமானதாக இருக்கவில்லை.

தென்னாபிரிக்க அணியின் பந்துவீச்சை பொருத்தவரை, முதல் மூன்று ஓவர்களில் 45 ஓட்டங்களை விட்டுக்கொடுத்திருந்த காகிஸோ ரபாடா, இறுதி ஓவருக்கு 14 ஓட்டங்கள் என்ற நிலையில், ஹெட்ரிக் விக்கெட்டுகளை வீழ்த்தி அபாரம் காட்டியிருந்தார்.

இவர், கிரிஸ் வோக்ஸ், இயன் மோர்கன் மற்றும் கிரிஸ் ஜோர்டன் ஆகியோரை, இறுதி ஓவரின் முதல் மூன்று பந்துகளில் ஆட்டமிழக்கச்செய்து, ஹெட்ரிக்கினை கைப்பற்றினார். அதுமாத்திரமின்றி, இந்த ஓவரில் வெறும் 3 ஓட்டங்களை மாத்திரம் வழங்கி அணிக்கு வெற்றியை பெற்றுக்கொடுத்திருந்தார். இவருக்கு அடுத்தப்படியாக, டெப்ரைஷ் ஷம்ஷி மற்றும் டுவைன் பிரிட்டோரியர்ஸ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்த வெற்றியின் படி, குழு ஒன்றில் இங்கிலாந்து, அவுஸ்திரேலியா மற்றும் தென்னாபிரிக்க அணிகள் தலா 8 புள்ளிகளை பெற்றிருந்தாலும், ஓட்டவிகிதத்தின் அடிப்படையில், இங்கிலாந்து மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் அரையிறுதிக்கு தகுதிபெற்றன. துரதிஷ்டவசமாக வெற்றிபெற்றும், தென்னாபிரிக்க அணியால், இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை பெறமுடியவில்லை.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<