இங்கிலாந்து கிரிக்கெட் அணிக்கு எதிராக நடைபெறவுள்ள மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரில் பங்கெடுக்கும், 16 பேர் கொண்ட பலமான இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
>>பவன் ரத்நாயக்கவின் சதம் வீண்; ஒருநாள் தொடரினை இழந்த இலங்கை
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி வெற்றிகரமாக 2-1 என ஒருநாள் தொடரினை கைப்பற்றியதனை அடுத்து, மூன்று போட்டிகள் கொண்ட T20 தொடரில் ஆடுகின்றது. இந்தத் தொடர் ஜனவரி 30, பெப்ரவரி 1 மற்றும் 3 ஆகிய திகதிகளில் கண்டி பல்லேகல சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறவுள்ள நிலையில், இலங்கை T20 குழாம் முக்கிய மாற்றங்களுடன் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி T20 உலகக் கிண்ணத் தொடருக்கு ஆயத்தமாக அமையும் இந்த தொடரில் இலங்கை அணியின் இளம் சகலதுறை வீரரான கமிந்து மெண்டிஸ் நீக்கப்பட்டிருக்க, பாகிஸ்தான் T20 தொடர் மூலம் இலங்கை அணிக்குள் மீண்டிருந்த தனஞ்சய டி சில்வா எதிர்பார்த்த ஆட்டத்தினை வெளிப்படுத்தாத போதும் நீடிக்கின்றார்.
தசுன் ஷானக தலைமையிலான இலங்கை குழாத்தில் பாகிஸ்தான் தொடரின் பின்னர் மீண்டும் குசல் ஜனித் பெரேரா இணைக்கப்பட, ஒருநாள் தொடரின் இறுதிப் போட்டியில் சதம் விளாசிய பவன் ரத்நாயக்கவிற்கும் வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கின்றது.
அதேநேரம் பந்துவீச்சினைப் பொறுத்தவரை நுவான் துஷாரவிற்கு ஓய்வு வழங்கப்பட்டிருக்க, மதீஷ பதிரண முன்னணி வேகப்பந்துவீச்சாளராக நீடிக்கின்றார்.
இலங்கை T20 குழாம்:
தசுன் ஷானக (தலைவர்), பெதும் நிஸ்ஸங்க, கமில் மிஷார, குசல் மெண்டிஸ், குசல் ஜனித் பெரேரா, தனஞ்சய டி சில்வா, சரித் அசலங்க, ஜனித் லியனகே, பவன் ரத்நாயக்க, வனிந்து ஹசரங்க, துனித் வெல்லாலகே, மஹீஷ் தீக்ஷன, துஷ்மந்த சமீர, பிரமோத் மதுஷன், மதீஷ பதிரண, எஷான் மலிங்க






















