நியூசிலாந்தை வீழ்த்தி பல சாதனைகளை முறியடித்த பங்களாதேஷ்

188
Bangladesh Cricket Twitter

நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்று பங்களாதேஷ் அணி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பதிவு செய்துள்ளது.

நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள பங்களாதேஷ் அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது.

இரு அணிகளுக்கும் இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி கடந்த முதலாம் திகதி மவுன்ட் மவுன்கானுவில் (Mount Maunganui) ஆரம்பமாகியது. இதில் நாணய சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் பந்துவீச்சை தெரிவு செய்தது.

முதலில் துடுப்பாடிய நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் 328 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது. அதிகபட்சமாக டெவோன் கொன்வே சதம் விளாசி 122 ஓட்டங்களையும், ஹென்றி நிகோல்ஸ் 75 ஓட்டங்களையும் எடுத்தனர்.

டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து திடீர் ஓய்வை அறிவித்த குயிண்டன் டி கொக்

பங்களாதேஷ் அணி சார்பில் அதிகபட்சமாக சொரிபுல் இஸ்லாம் மற்றும் மெஹெடி ஹஸன் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பின்னர் தமது முதல் இன்னிங்ஸை ஆரம்பித்த பங்களாதேஷ் அணி 458 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் ஹஸன் ஜோய் (78), நஜ்முல் ஹொசைன் சாண்டோ (64), மொமினுல் ஹக் (88) மற்றும் லிட்டன் தாஸ் (86) ஆகியோர் அரைச்சதம் அடித்து கைகொடுத்தனர்.

நியூசிலாந்து அணியின் பந்துவீச்சு சார்பில் ட்ரெண்ட் போல்ட் 4 விக்கெட்டுகளையும், நீல் வோக்னர் 3 விக்கெட்டுகளையும் அதிகபட்சமாக வீழ்த்தினர்.

எனவே, 130 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் தமது 2ஆவது இன்னிங்ஸை ஆரம்பித்த நியூசிலாந்து அணி 169 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. துடுப்பாட்டத்தில் அதிகபட்சமாக வில் யங் 69 ஓட்டங்களையுளும், ரொஸ் டெய்லர் 40 ஓட்டங்களையும் எடுத்தனர்.

பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில் எபோடட் ஹொசைன் 6 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனையடுத்து 40 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் தமது 2ஆவது இன்னிங்ஸில் களமிறங்கிய பங்களாதேஷ் அணி 16.5 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை எட்டி வரலாற்று வெற்றியை ருசித்தது.

WATCH – இலங்கை கிரிக்கெட்டில் Mahela, Rumesh க்கு முக்கிய பொறுப்பு! |Sports RoundUp – Epi 189

கடந்த 10 ஆண்டுகளாக எந்தவொரு ஆசிய அணிகளும் நியூசிலாந்து அணியை அதன் மண்ணில் வைத்தே ஒரு டெஸ்ட் வெற்றியை கூட பெற்றதில்லை. ஆனால் 10 ஆண்டுகால காத்திருப்பை முறியடித்து பங்களாதேஷ் அணி இன்று வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது.

இந்த வெற்றியின் மூலம் நடப்பு உலக டெஸ்ட் சம்பியனான நியூசிலாந்தை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி பல வரலாற்று சாதனைகளை பங்களாதேஷ் அணி படைத்துள்ளது.

  1. நியூசிலாந்துக்கு எதிராக நியூசிலாந்து மண்ணில் டெஸ்ட், ஒருநாள் மற்றும் T20 என 3 வகையான கிரிக்கெட்டிலும் சேர்த்து முதல் முறையாக பங்களாதேஷ் அணி ஒரு வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது.

இந்த போட்டிக்கு முன்னதாக நியூசிலாந்து மண்ணில் 32 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய பங்களாதேஷ் அணி எந்த ஒரு கிரிக்கெட் போட்டியிலும் வெற்றி பெற்றதே கிடையாது.

  1. ஒட்டுமொத்த டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் நியூசிலாந்துக்கு எதிராக முதல் முறையாக பங்களாதேஷ் அணி வெற்றியீட்டி வரலாற்று சாதனை படைத்துள்ளது.

இந்தப் போட்டிக்கு முன்னதாக நியூசிலாந்துக்கு எதிராக 9 போட்டிகளில் பங்கேற்ற பங்களாதேஷ் அணி, அந்த 9 போட்டிகளிலும் தொடர்ந்து தோல்வியைத் தழுவியது. தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

  1. டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் முதல் டெஸ்ட் சம்பியனாக இருக்கும் நியூசிலாந்து 17 டெஸ்ட் போட்டிகளுக்கு பின் முதல் முறையாக தனது சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியில் தோற்றுள்ளது.
  2. இந்தப் போட்டியில் வென்றதன் வாயிலாக குறைந்தபட்சம் 2 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் நியூசிலாந்து வெற்றி பெறும் வாய்ப்பை இழந்தது.

இதன் வாயிலாக 8 டெஸ்ட் தொடர்களுக்கு பின்னர் முதல் முறையாக நியூசிலாந்து அணி தனது சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் தொடரை வெற்றி பெறும் வாய்ப்பை இழந்துள்ளது.

  1. இப்போட்டியின் முதல் இன்னிங்ஸில் 458 ஓட்டங்கள் எடுத்த பங்களாதேஷ் அணி, கடந்த 2010 ஆம் ஆண்டுக்குப் பின் நியூசிலாந்து மண்ணில் அதிகபட்ச டெஸ்ட் ஓட்டங்களைப் பதிவுசெய்த ஆசிய அணி என்ற சாதனை படைத்துள்ளது.
  2. கடந்த 10 ஆண்டுகளில் நியூசிலாந்தை அதன் சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியில் வீழ்த்திய முதல் ஆசிய அணி என்ற பெருமையையும் பங்களாதேஷ் அணி பெற்றுக்கொண்டது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<