விளையாட்டுத்துறை அமைச்சு மற்றும் விளையாட்டுத்துறை அபிவிருத்தி திணைக்களம் என்பன இணைந்து நடத்தும் 49ஆவது தேசிய விளையாட்டு விழாவின் ஓர் அங்கமாக நடைபெற்ற கடற்கரை கபடிப் போட்டியில் கிழக்கு மாகாணம் சார்பாக கலந்து கொண்ட நிந்தவூர் மதீனா விளையாட்டுக் கழகம் சம்பியன் பட்டம் வென்றது
இதன் மூலம் ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு அதாவது 2016ஆம் ஆண்டுக்குப் பிறகு தேசிய விளையாட்டு விழா கடற்கரை கபடி போட்டியில் கிழக்கு மாகாணம் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.
அதேபோல, பெண்களுக்கான கடற்கரை கபடியில் கிழக்கு மாகாண அணி வெள்ளிப் பதக்கத்தை வென்று அசத்தியது.
இந்த ஆண்டுக்கான தேசிய விளையாட்டு விழா போட்டி நிகழ்ச்சிகள் காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் தற்போது நடைபெற்று வருகின்றது. அந்த வகையில், கடற்கரை கபடி போட்டிகள் காலி தடல்ல கடற்கரையில் 15ஆம், 16ஆம் ஆகிய திகதிகளில் நடைபெற்றதுடன், இதில் 9 மாகாணங்களையும் சேர்ந்த அணிகளும் நூற்றுக்கும் அதிகமான வீரர்களும் கலந்துகொண்டனர்.
- தேசிய கபடி சம்பியன்ஷிப்பில் நிந்தவூர் மதீனா அணி இரண்டாம் இடம்/
- தேசிய கபடியில் அம்பாறை, கிளிநொச்சி அணிகள் சம்பியன்
இந்த நிலையில், ஆண்களுக்கான கடற்கரை கபடி இறுதிப்போட்டியில் வடமத்திய மாகாண அணிக்கு எதிராக 48:40 என்ற புள்ளி அடிப்படையில் வெற்றி பெற்று கிழக்கு மாகாணம் சம்பியனாக மகுடம் சூடியது.
முன்னதாக நடைபெற்ற ஆரம்பப் போட்டியில் வடமேல் மாகாண அணியை 52:30 என்ற புள்ளி அடிப்படையில் வீழ்த்திய கிழக்கு மாகாண அணி, முதலாவது அரையிறுதிப் போட்டியில் சப்ரகமுவ மாகாணத்தை 45:24 என்ற புள்ளி அடிப்படையில் வீழ்த்தி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றது.
இதனிடையே, சம்பியன் பட்டம் வென்ற கிழக்கு மாகாண அணியில் ஆர்.எம் நப்ரீஸ், ஏ.ஆர்.ஏ ஹமாஸ், எம்.எஸ்.எம் அன்சாப், ஏ.ஆர் ஆதீப் ஜுமான், எம்.எப்.எம் அஸ்காச் மற்றும் எஸ்.எம் சபிஹான் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
மேலும் இம்முறை தேசிய விளையாட்டு விழா கபடியில் சிறந்த வீரராக நிந்தவூர் மதீனா விளையாட்டுக் கழகத்தின் கபடி வீரரும், தேசிய கபடி அணி வீரருமாகிய எஸ்.எம்.சபிஹான் தெரிவு செய்யப்பட்டார்.
எனவே, அண்மைக்காலமாக தேசிய ரீதியிலான கபடி போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றிகளை பெற்று வருகின்ற நிந்தவூர் மதீனா விளையாட்டுக் கழகத்தின் பயிற்சியாளராக அக்கழகத்தின் செயலாளரும் சர்வேதேச கபடி நடுவருமான எஸ்.எம்.இஸ்மத் மற்றும் கிழக்கு மாகண விளையாட்டு திணைக்களம், நிந்தவூர் பிரதேச விளையாட்டு உத்தியோத்தர் சபூர்தீன் மொஹமட் இர்ஷாட்டும் செயல்பட்டனர்.
இதேவேளை, இம்முறை தேசிய விளையாட்டு விழா ஆண்களுக்கான கடற்கரை கபடியில் 2ஆவது இடத்தை வடமத்திய மாகாணமும், 3ஆவது இடத்தை தென் மாகாணமும் பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இது இவ்வாறிருக்க, இம்முறை தேசிய விளையாட்டு விழா பெண்களுக்கான கடற்கரை கபடி இறுதிப்போட்டியில் கிழக்கு மாகாணத்தை 39:37 என்ற புள்ளி அடிப்படையில் வீழ்த்தி ஊவா மாகாண பெண்கள் அணி சம்பியனாகத் தெரிவாகியது.
ஆரம்பப் போட்டியில் வட மாகாண அணியை (46:39 புள்ளிகள்) வீழ்த்திய கிழக்கு மாகாண அணி, அரையிறுதிப் போட்டியில் மேல் மாகாணத்தை (52:40 புள்ளிகள்) வீழ்த்தி இறுதிப்போட்டிக்குத் தெரிவாகியமை குறிப்பிடத்தக்கது.
எனவே, இம்முறை தேசிய விளையாட்டு விழா பெண்களுக்கான கடற்கரை கபடியில் 2ஆவது இடத்தைப் பிடித்த கிழக்கு மாகாண அணியில் ஆர். கஜேந்தினி, எஸ். கோகுலவானி, எஸ். சிந்துஜா, ஏ.பிஎம் ஹன்சமாலி, டி. பேமஜானு மற்றும் ஜே லோகிகா ஆகியோர் இடம்பெற்றனர். அதேபோல, வெள்ளிப் பதக்கம் வென்ற கிழக்கு மாகாண பெண்கள் கபடி அணியின் பயிற்சியாளராக லக்மமோஹன் சஜீவன் செயல்பட்டார்.
>>மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க<<