டயலொக்-SLC தேசிய சுப்பர் லீக்கின் முதல் வெற்றியை சுவைத்த ஜப்னா, காலி

Dialog-SLC National Super League 2022

1157

இலங்கையில் இன்று (24) ஆரம்பித்த டயலொக்-SLC தேசிய சுப்பர் லீக் ஒருநாள் தொடரில், இன்றைய தினம் (24) இரண்டு போட்டிகள் நடைபெற்று முடிந்தன.

கொழும்பு அணியை எதிர்கொண்ட காலி அணி 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற, தம்புள்ள அணியை எதிர்கொண்ட ஜப்னா அணி 176 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பதிவுசெய்தது.

>>பொதுநலவாய விளையாட்டு விழாவிற்கு தகுதி பெற்ற இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி

காலி எதிர் கொழும்பு

கொழும்பு எஸ்.எஸ்.சி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற சம்மு அஷான் தலைமையிலான கொழும்பு அணி முதலில் துடுப்பெடுத்தாடுவதற்கு தீர்மானித்தது.

கொழும்பு அணிக்காக குசல் மெண்டிஸ் மற்றும் கிரிஷான் சஞ்சுலா ஆகியோர் சிறந்த ஆரம்பத்துடன் முதல் விக்கெட்டுக்காக 56 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர். எனினும், வேகமாக துடுப்பெடுத்தாடிய குசல் மெண்டிஸ் 27 பந்துகளில் 37 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து ஆட்டமிழக்க, கிரிஷான் சஞ்சுல 46 ஓட்டங்களை பெற்று அரைச்சதத்தை தவறவிட்டு ஆட்டமிழந்தார்.

அதனைத்தொடர்ந்து நுவனிந்து பெர்னாண்டோ 30 ஓட்டங்களையும், அஷேன் பண்டார 34 ஓட்டங்களையும் சிறிய இணைப்பாட்டங்களுடன் பெற்றுக்கொடுத்து ஆட்டமிழக்க, கொழும்பு அணி 165 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து சற்று பலமான நிலையிலிருந்தது.

எனினும், அதன்பின்னர் அணித்தலைவர் சம்மு அஷான் ஆட்டமிழக்க, பிரவீன் ஜயவிக்ரம, மஹீஷ் தீக்ஷன மற்றும் தனன்ஜய லக்ஷானின் ஓவர்களில் தொடர்ச்சியாக விக்கெட்டுகளை விட்டுக்கொடுத்த கொழும்பு அணி 47.3 ஓவர்கள் நிறைவில் 213 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாட களமிறங்கிய காலி அணிசார்பாக தனன்ஜய லக்ஷான் 29 ஓட்டங்களையும், ஹிமாஷ லியனகே 18 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்திருந்தாலும், தினேஷ் சந்திமால், ஹஷான் ரந்திக மற்றும் முதித லக்ஷான் ஆகியோர் குறைந்த ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர்.  அதன்படி, 93 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை காலி அணி இழந்திருந்தது.

எனினும், இதன்பின்னர் ஜோடி சேர்ந்த பிரியமல் பெரேரா மற்றும் ரமேஷ் மெண்டிஸ் ஆகியோர் 6வது விக்கெட்டுக்காக மிகச்சிறந்த இணைப்பாட்டத்தை பகிர்ந்தனர். இருவரும் நிதானமாக ஓட்டங்களை குவிக்க பிரியமல் பெரேரா தன்னுடைய அரைச்சதத்தை கடந்தார். இவர்கள் இருவரும் வெற்றிக்கு அருகில் அணியை அழைத்துச்சென்றனர். இவர்கள் 110 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற, ரமேஷ் மெண்டிஸ் 37 ஓட்டங்களை பெற்று ஆட்டமிழந்தார்.

எவ்வாறாயினும், பிரியல் பெரேரா இறுதிவரை ஆட்டமிழக்காமல் 98 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து அணியின் வெற்றியை உறுதிசெய்தார். இதன்மூலம் 42.4 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து காலி அணி வெற்றியிலக்கை அடைந்தது. கொழும்பு அணிசார்பாக பிரபாத் ஜயசூரிய மற்றும் கவிந்து நதீஷான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.


ஜப்னா எதிர் தம்புள்ள

கொழும்பு பி.சரா ஓவல் மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், அணித்தலைவர் தனன்ஜய டி சில்வாவின் சகலதுறை பிரகாசிப்பின் ஊடாக, ஜப்னா அணி 176 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இலகுவான வெற்றியை பெற்றுக்கொண்டது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தம்புள்ள அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்ததுடன், இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொண்ட ஜப்னா அணி தனன்ஜய டி சில்வாவின் அரைச்சதம், இசான் ஜயர்த்ன மற்றும் சதீர சமரவிக்ரம ஆகியோரின் பங்களிப்புடன் 47.1 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 255 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

ஆரம்பத்தில் சதீர சமரவிக்ரம 40 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, மத்தியவரிசையை பலப்படுத்திய தனன்ஜய டி சில்வா வேகமாக ஓட்டங்களை குவித்தார். இவர், 64 பந்துகளில் 10 பௌண்டரிகள் அடங்கலாக 69 ஓட்டங்களை குவித்தார். ஒரு கட்டத்தில் 202 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய ஜப்னா அணிக்கு, இறுதிநேரத்தில் இசான் ஜயரத்ன 44 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்து அணியின் ஓட்ட எண்ணிக்கைக்கு வலுசேர்த்தார். பந்துவீச்சில் லக்ஷான் சந்தகன் மற்றும் விஷ்வ பெர்னாண்டோ ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய தம்புள்ள அணியை பொருத்தவரை அணித்தலைவர் அஷான் பிரியன்ஜனை தவிர, எந்தவொரு துடுப்பாட்ட வீரரும் ஓட்டக்குவிப்புக்கான ஆரம்பத்தை பெற்றுக்கொடுக்கவில்லை. முதல் இரண்டு விக்கெட்டுகளும் ஓட்டங்களின்றி வீழ்த்தப்பட்ட நிலையில், ஆரம்பத்திலிருந்து தம்புள்ள அணி நெருக்கடியை உணர்ந்தது.

இதனைத்தொடர்ந்து ஜப்னா அணியின் தலைவர் தனன்ஜய டி சில்வா  ரொன் சந்ரகுப்த, தம்புள்ள அணியின் தலைவர் அஷான் பிரியன்ஜன் மற்றும் சொனால் தினுஷ ஆகியோரின் விக்கெட்டுகளை வீழ்த்த போட்டியின் வெற்றி முழுமையாக ஜப்னா அணி பக்கம் திரும்பியது.

தம்புள்ள அணிசார்பாக அதிபட்சமாக அஷான் பிரியன்ஜன் 32 ஓட்டங்களையும், ரொன் சந்ரகுப்த 12 ஓட்டங்கள் மற்றும் லக்ஷான் சந்தகன் 10 ஓட்டங்களை பெற்றுக்கொள்ள, ஏனைய துடுப்பாட்ட வீரர்கள் அனைவரும் ஒற்றையிலக்க ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தனர். இதன்காரணமாக 25.5 ஓவர்கள் நிறைவில் வெறும் 79 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்து தம்புள்ள அணி தோல்வியை தழுவியது. ஜப்னா அணிசார்பாக, தனன்ஜய டி சில்வா 3 விக்கெட்டுகளையும், திலும் சுதீர, ஜெப்ரி வெண்டர்சே மற்றும் இசான் ஜயரத்ன ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

எனவே, இன்று ஆரம்பித்த டயலொக்-SLC தேசிய சுப்பர் லீக் தொடரின் முதல் நாள் போட்டிகளில் காலி மற்றும் ஜப்னா அணிகள் வெற்றிகளை பெற்று, தொடரை வெற்றியுடன் ஆரம்பித்துள்ளன. தொடரின் அடுத்த இரண்டு போட்டிகளில் நாளை மறுதினம் (26)  ஜப்னா அணியை கண்டி அணி எதிர்கொள்ளவுள்ளதுடன், கொழும்பு அணி தம்புள்ள அணியை எதிர்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<