சீரற்ற காலநிலையால் கைவிடப்பட்ட இன்றைய போட்டிகள்!

Dialog-SLC Invitational T20 League 2021

186

டயலொக் SLC அழைப்பு T20 லீக் தொடரில் இன்று நடைபெற்ற SLC கிரீன்ஸ் மற்றும் SLC புளூஸ் அணிகளுக்கு இடையிலான முதல் போட்டியில்,  மழைக்குறுக்கிட்ட நிலையில் கைவிடப்பட்டதுடன், SLC கிரேய்ஸ் மற்றும் SLC ரெட்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியும் கைவிடப்பட்டது.

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற கிரீன்ஸ் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது. அதன்படி, களமிறங்கிய புளூஸ் அணி, 7 ஓவர்கள் நிறைவில் ஒரு விக்கெட்டை இழந்து 48 ஓட்டங்களை பெற்றிருந்தது. இதில், தனன்ஜய லக்ஷான் 31 ஓட்டங்களை பெற்று, ரமேஷ் மெண்டிஸின் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, சதீர சமரவிக்ரம 12 ஓட்டங்களுடன் களத்திலிருந்தார். 

இதன்போது, போட்டியில் மழை குறுக்கிட்டது. எனவே, போட்டி இடைநிறுத்தப்பட்டது. தொடர்ந்து போட்டி ஆரம்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட போதும், மழை குறுக்கிட்டு வந்ததால் போட்டி கைவிடப்பட்டது.

போட்டி கைவிடப்பட்ட நிலையில், அணிகளுக்கு தலா ஒவ்வொரு புள்ளிகள் வழங்கப்பட்டன. இதில், கிரீன்ஸ் அணி இதுவரையில் ஒரு புள்ளியை மாத்திரமே பெற்றுள்ள நிலையில், இறுதிப் போட்டிக்கான வாய்ப்பை இழந்தது. மறுமுனையில் புளூஸ் அணி 5 புள்ளிகளுடன்  இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.

அத்துடன், இன்று இரவு நடைபெறவிருந்த SLC கிரேய்ஸ் மற்றும் SLC ரெட்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டியில், நாணய சுழற்சி இடம்பெறுவதற்கு முன்னரிலிருந்து மழை குறுக்கிட்டதால், ஆட்டம் நிறுத்தப்பட்டது. எனவே, இந்தப் போட்டிக்கான புள்ளிகளும் பகிரப்பட்டன.

அதன்படி, இதுவரை நடைபெற்றுள்ள போட்டிகளின் அடிப்படையில், 9 புள்ளிகளுடன் கிரேய்ஸ் அணி முதலிடத்தை பிடித்துள்ளதுடன், ரெட்ஸ் அணி 5 புள்ளிகளுடன், புள்ளிப்பட்டியலில் 3வது இடத்தை பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க…