டயலொக் றக்பி லீக்கில் CR&FC, கண்டி, ஹெவ்லொக் கழகங்களுக்கு 2ஆவது தொடர் வெற்றி

179

முதற்தர கழக ரக்பி அணிகளுக்கு இடையிலான டயலொக் கழக றக்பி லீக் தொடரின் முதல் சுற்றின் இரண்டாவது வாரத்துக்கான போட்டிகள் கடந்த வெள்ளிக்கிழமை (16) ஆரம்பமாகியது. இதில் CR&FC மற்றும் நடப்புச் சம்பியனான கண்டி விளையாட்டுக் கழகங்கள் தொடர்ச்சியான இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தன.   

ஹெவ்லொக் விளையாட்டுக் கழகம் எதிர் CH&FC

ஹெவ்லொக் பார்க் மைதானத்தில் இடம்பெற்ற ஹெவ்லொக் மற்றும் CH&FC கழக அணிகளுக்கு இடையிலான போட்டியில் ஆரம்பம் முதலே இரு அணிகளும் அபாரமாக விளையாடியிருந்ததுடன், போட்டியின் முதல் பகுதியை 16-13 என்ற புள்ளிகள் கணக்கில் CH&FC அணி கைப்பற்றியது.

டயலொக் ரக்பி லீக் தொடரின் முதல் வார போட்டி முடிவுகள்

கழக ரக்பி அணிகளுக்கு இடையிலான டயலொக் ரக்பி லீக் (DRL) தொடரின்…

எனினும், இரண்டாம் பாதியில் திறமையை வெளிப்படுத்திய ஹெவ்லொக் அணி வீரர்கள், ஒரு கட்டத்தில் 23-26 என எதிரணிக்கு சவால் விடுத்தனர். இறுதியில் ஹெவ்லொக் கழகத்தின் முன்கள வீரர்களான துஷ்மன்த ப்ரியதர்ஷன மற்றும் ரீஸா முபாரக்கின் அபார ஆட்டத்தின் உதவியுடன் கடைசி செக்கன்களில் பெறப்பட்ட 7 புள்ளிகள் மூலம் 30-29 என்ற புள்ளிகள் கணக்கில் ஹெவ்லொக் கழக அணி வெற்றியீட்டியது.

ஹெவ்லொக் சார்பாக துஷ்மன்த ப்ரியதர்ஷன, அஸ்மிர் பாஜுதீன், ரஹால் தெல்பத்சித்ர, ஷௌக்கத் லாஹிர் ஆகியோர் தலா ஒரு ட்ரை வைத்ததுடன், ரீஸா முபாரக் 2 கன்வேர்ஷன்கள், 2 பெனல்டி புள்ளிகளைப் பெற்றுக்கொடுத்தார்.

CH&FC அணி சார்பாக அனுராத ஹேரத் (2 ட்ரைகள்), செமுவல் மதுவன்த (2 கன்வேர்ஷன்கள், 4 பெனல்டிகள், ஒரு ட்ரொப் கோல்) ஆகியோர் புள்ளிகளைப் பெற்றுக்கொடுத்தனர்.

முழு நேரம்: ஹெவ்லொக் விளையாட்டுக் கழகம் 30 – 29 CH&FC

கடற்படை விளையாட்டுக் கழகம் எதிர் CR&FC

கடந்த சனிக்கிழமை (17) வெலிசறை கடற்படை விளையாட்டு மைதானத்தில் நடைபெற்ற மற்றுமொரு போட்டியில் கடற்படை மற்றும் CR&FC அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இப்போட்டியில் கடற்படைக் கழகம் 3 ட்ரைகளை வைத்த போதிலும், CR&FC கழகத்திற்கு ஒரு ட்ரையை மாத்திரமே பெற்றுக்கொள்ள முடிந்தது. ஆனால் நட்சத்திர வீரர் தரிந்த ரத்வத்தவினால் இலக்கு தவறாமல் பெற்றுக்கொண்ட 7 பெனல்டிகளின் உதவியுடன் CR&FC கழகம் 28-22 என்ற புள்ளிகள் கணக்கில் முன்னிலை பெற்று இம்முறை போட்டிகளில் இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது.

முழு நேரம்: CR&FC 28 – 22 கடற்படை விளையாட்டுக் கழகம்

கண்டி விளையாட்டுக் கழகம் எதிர் பொலிஸ் விளையாட்டுக் கழகம்

நித்தவெல மைதானத்தில் நேற்று நடைபெற்ற இப்போட்டியில் ஆரம்பம் முதலே நடப்புச் சம்பியனான கண்டி வீரர்கள் ஆற்றலை வெளிப்படுத்தியிருந்தனர். இதன்படி, போட்டியின் முதற்பாதியை அவ்வணி 17-10 என கைப்பற்றியது.  

இதேநேரம், இரண்டாம் பாதியிலும் தமது அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கண்டி வீரர்கள், தனுஷ்க ரன்ஜன் பெற்றுக்கொண்ட ஹெட்ரிக் ட்ரைகளின் உதவியுடன் 29-23 என புள்ளிகளைப் பதிவு செய்து வெற்றியினைப் பதிவு செய்தனர். இம்முறை போட்டிகளில் அந்த அணி தொடர்ச்சியாகப் பெற்றுக்கொண்ட 2ஆவது வெற்றி இதுவாகும்.

முழு நேரம்: கண்டி விளையாட்டுக் கழகம் 29 – 23 பொலிஸ் விளையாட்டுக் கழகம்

விமானப்படை விளையாட்டுக் கழகம் எதிர் இராணுவப்படை விளையாட்டுக் கழகம்

இந்த தொடரில் மற்றுமொரு போட்டியில் விமானப்படை மற்றும் இராணுவப்படை அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இரத்மலானையில் நேற்று (18) நடைபெற்ற இந்தப் போட்டியில் இரு அணி வீரர்களும் ஆரம்பம் முதலே தமது ஆற்றலை வெளிப்படுத்தியிருந்தனர்.

எனினும், ஆட்டத்தின் முதல் பாதியில் விமானப்படை அணி 14 புள்ளிகளை பெற்றுக்கொள்ள இராணவப்படை அணி 19 புள்ளிகளைப் பெற்று முதல் பாதியில் முன்னிலை பெற்றது.

போட்டியின் இரண்டாம் பாதியில் தொடர்ந்து தமது ஆதிக்கத்தை வெளிப்படுத்திய இராணுவப்படை அணி மேலும் 10 புள்ளிகளை எடுத்தது. மறுமுனையில் இரண்டாம் பாதியில் 7 புள்ளிகளை மாத்திரமே விமானப்படை அணியால் பெற்றுக்கொள்ள முடிந்தது. இறுதியில் 29-21 என்ற புள்ளிகள் கணக்கில் இராணுவப்படை அணி வெற்றி வாகை சூடியது.

முழு நேரம்: இராணுவப்படை விளையாட்டுக் கழகம் 29 – 21 விமானப்படை விளையாட்டுக் கழகம்

டயலொக் றக்பி லீக் – 2018/19 புள்ளிகள் பட்டியல் (இரண்டாம் வார முடிவில்)

அணிகள் போட்டிகள் வெற்றி தோல்வி புள்ளிகள்
கண்டி விளையாட்டுக் கழகம் 2 2 12
ஹெவ்லொக் விளையாட்டுக் கழகம் 2 2 11
CR&FC 2 2 10
இராணுவப்படை விளையாட்டுக் கழகம் 2 1 1 6
கடற்படை கழகம் 2 1 1 6
CH&FC 2 0 2 2
பொலிஸ் விளையாட்டுக் கழகம் 2 0 2 1
விமானப்படை விளையாட்டுக் கழகம் 2 0 2 0

 

 மேலும் பல சுவையான செய்திகளைப் படிக்க