டயலொக் ஜனாதிபதி தங்கக் கிண்ண சம்பியனாகிய தெபேகம ரன்தரு

Dialog President’s Gold Cup Volleyball Championship 2021

132

டயலொக் ஜனாதிபதி தங்கக் கிண்ணம் 2021 கரப்பந்தாட்ட தொடரில் ஆண்களுக்கான இறுதிப் போட்டியில், நாத்தாண்டியா யுனைடட் அணியை வீழ்த்திய தெபேகம ரன்தரு அணி சம்பியனாக முடிசூடியது.

தொடரின் அரையிறுதிப் போட்டியில் பொரலஸ்கமுவ பலரஸ் அணியை வீழ்த்தி தெபேகம ரன்தரு அணியும், ஹொரண வாஸனா அணியை வீழ்த்தி நாத்தாண்டிய யுனைடட் அணியும் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற்றிருந்தன.

>>ஆசிய இளையோர் பாராவில் சப்ரானுக்கு இரட்டைப் பதக்கம்

மஹரகம இளைஞர் சேவைகள் கரப்பந்தாட்ட அரங்கில் நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியில் தெபேகம ரன்தரு அணி 3-1 என்ற செட்கள் கணக்கில் நாத்தாண்டிய யுனைடட் அணியை வீழ்த்தி வெற்றியினை பெற்றுக்கொண்டது.

போட்டியின் முதல் செட்டில் தங்களுடைய ஆதிக்கத்தை நாத்தாண்டிய யுனைடட் அணி செலுத்தியிருந்தது. குறிப்பாக, 25-14 என்ற மிகச்சிறந்த புள்ளிகள் கணக்கில் முதல் செட்டை நாத்தாண்டிய அணி கைப்பற்றி வெற்றியுடன் போட்டியை ஆரம்பித்தது.

ஆனாலும், தோல்வியிலிருந்து மீண்டு இரண்டாவது செட்டில் பலமான போட்டியை கொடுத்த தெபேகம ரன்தரு அணி, இறுதி நேரத்தில் 25-23 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்று, இரண்டாவது செட்டை கைப்பற்றியது. தொடர்ந்து, மூன்றாவது செட்டை 25-16 என இலகுவாக தெபேகம ரன்தரு அணி கைப்பற்ற, முக்கியமான நான்காவது செட் விறுவிறுப்பாக நடைபெற்றது.

ஒரு கட்டத்தில் தெபேகம ரன்தரு அணி 23-19 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றியை நோக்கிய போதும், நாத்தாண்டிய யுனைடட் அணி கடுமையான போட்டியை கொடுத்தது. இதில், இறுதிக் கட்டத்தில் தெபேகம ரன்தரு அணி 28-26 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிபெற்று சம்பியன் கிண்ணத்தை தமதாக்கியது.

இதேவேளை, பெண்களுக்கான இறுதிப் போட்டியில், கலிகமுவ ஹைட்ராமணி அணியை எதிர்கொண்டு விளையாடிய கொஸ்வாடிய விஜய அணி 3-1 என்ற செட்கள் கணக்கில் வெற்றிபெற்று சம்பியனாகியது.

போட்டியின், முதல் செட்டை கலிகமுவ ஹைட்ராமனி அணி, 25-18 என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றிக்கொண்டாலும், அடுத்த மூன்று செட்களையும் 25-13, 26–24 மற்றும் 25-20 என்ற புள்ளிகள் கணக்கில் கைப்பற்றிய கொஸ்வாடிய விஜய அணி பெண்கள் சம்பியனாக முடிசூடியது.

>>மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க<<