தேசிய பாராலிம்பிக் சங்கத்துக்கு டயலொக் தொடர்ந்து அனுசரணை

112

இலங்கையின் முன்னணி தொலைத்தொடர்பு நிறுவனமான டயலொக் ஆசியாட்டா நிறுவனம் (Dialog Axiata (Pvt) Ltd) இலங்கையின் பாரா விளையாட்டுக்கான அனுசரணையை எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்க நடவடிக்கை எடுத்துள்ளது.

டயலொக் நிறுவனம் 2000ஆம் ஆண்டு முதல் முறையாக தேசிய பாராலிம்பிக் சங்கத்துக்கு அனுசரணை வழங்கியிருந்தது. இதில் கடந்த 22 ஆண்டுகளாக இராணுவ பாரா விளையாட்டுப் போட்டிகள், தேசிய பாரா சம்பியன்ஷிப் தொடர் மற்றும் பாராலிம்பிக் விளையாட்டு விழா ஆகியவற்றில் பங்குபற்றுகின்ற இலங்கையின் பாரா வீரர்களுக்கு டயலொக் நிறுவனம் அனுசரணை வழங்கி வருகின்றது.

இதன்காரணமாக இலங்கையின் பாரா வீரர்கள் சர்வதேச மட்டத்தில் தொடர்ந்து திறமைகளை வெளிப்படுத்தி வந்ததுடன், கடந்த ஆண்டு நடைபெற்ற டோக்கியோ பாராலிம்பிக் விளையாட்டு விழாவில் தினேஷ் பிரியந்த ஹேரத், ஆண்களுக்கான F46 பிரிவு ஈட்டி எறிதல் போட்டியில் 67.79 மீட்டர் தூரத்தை எறிந்து உலக சாதனையை முறியடித்து இலங்கைக்கு முதல் பாராலிம்பிக் தங்கப் பதக்கத்தை பெற்றுக் கொடுத்தார்.

அதேபோல, சமித்த துலான் கொடித்துவக்கு ஈட்டி எறிதல் போட்டியில் F64 பிரிவில் பங்கேற்று, 65.61 மீட்டர் தூரத்தை எறிந்து வெண்கலப் பதக்கத்தை வென்றார்.

முன்னதாக, 2012 லண்டன் பாராலிம்பிக் விளையாட்டு விழாவில் ஆண்களுக்கான 400 மீட்டர் ஓட்டப்போட்டியில் பங்குகொண்ட பிரதீப் சஞ்சய வெண்கலப் பதக்கத்தை சுவீகரித்து, பராலிம்பிக் பதக்கம் வென்ற முதல் இலங்கையராக வரலாற்றில் இடம்பிடித்தார்.

இந்த நிலையில், தேசிய பாராலிம்பிக் சங்கத்துக்கும், டயலொக் ஆசியாட்டா நிறுவனத்துக்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம்

அண்மையில் கொழும்பில் இடம்பெற்றது. இதில் கலந்துகொண்ட தேசிய பாராலிம்பிக் சங்கத்தின் தலைவர் கர்னல் தீபால் ஹேரத் கருத்து தெரிவிக்கையில்,

”இலங்கையின் பாரா வீரர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்துவதில் நீண்ட தூரம் வந்துள்ளனர். நீண்ட காலமாக எமக்கு ஆதரவளித்து, எமது பாராலிம்பிக் விளையாட்டு வீரர்களை நம்பி, சர்வதேச மட்டத்தில் வெற்றியீட்டுவதற்கு அவர்களுக்கு உதவிய டயலொக் ஆசியாட்ட நிறுவனத்திற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்” என தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் டயலொக் ஆசியாட்டா நிறுவனத்தின் பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி அமலி நாணயக்கார, குறியீடு மற்றும் ஊடகப் பிரிவு சிரேஷ்ட முகாமையாளார் ஹர்ஷ சமரநாயக்க மற்றும் தேசிய பாராலிம்பிக் சங்கத்தின் அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

>>மேலும் பல விளையாட்டு செய்திகளைப் படிக்க<<