அபராதத்தை எதிர்கொள்ளும் தசுன் சானக்க

1327

நாக்பூரில் நடைபெற்று வரும் இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியில் பந்தின் தன்மையை மாற்றிய குற்றச்சாட்டுக்காக இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் தசுன் சானக்கவுக்கு ஐ.சி.சி (ICC) அவருடைய போட்டிச் சம்பளத்தில் 75 சதவீதத்தை அபராதமாக செலுத்த கட்டளையிட்டுள்ளது.

ஐ.சி.சி இன் சட்ட விதிமுறை மீறல்களில் ஒன்றான பந்தின் தன்மையை மாற்றுதல்  என்னும் குற்றத்தை தசுன் சானக்க மேற்கொண்ட காரணத்துக்காகவே தற்போது அபராதம் செலுத்த நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளார்.

இந்திய அணியின் முதல் இன்னிங்சில் 50 ஆவது ஓவர் வீசப்பட்டிருந்த போது, சானக்க பந்தின் நூல் அமைந்துள்ள பகுதிக்கு அப்பால் உள்ள ஒரு பிரதேசத்தில் மாற்றங்கள் மேற்கொண்டிருந்தது தொலைக்காட்சியில் பதிவாகியிருந்தது.

விஜய், புஜாரா ஆகியோரின் சதங்களோடு இந்தியா இரண்டாம் நாளிலும் ஆதிக்கம்

தசுன் சானக்க மேற்கொண்டிருந்த இந்த குற்றத்தை போட்டி நடுவர்கள் நால்வரும் இரண்டாம் நாள் ஆட்ட முடிவின் பின்னர் (ஐ.சி.சி. இன்) போட்டி மத்தியஸ்தருக்கு அறிவித்திருந்தனர்.

ஐ.சி.சி இன் போட்டி மத்தியஸ்தர் டேவிட் பூனிடம் தசுன் சானக்க குற்றத்தை ஒப்புக் கொண்டிருந்த காரணத்தினால் மேலதிக விசாரணைகள் எதற்கும் அவசியம் இருந்திருக்கவில்லை.

தசுன் சானக்கவுக்கு, இந்தக் குற்றத்தை மேற்கொண்டமைக்காக மூன்று நன்னடத்தை விதிமுறை மீறல் புள்ளிகளும் கிடைத்துள்ளன. எதிர்வரும் 24 மாத காலப்பகுதிக்குள் தற்போது பெற்றிருக்கும் இந்த நன்னடத்தை விதிமீறல் புள்ளிகள் தசுனுக்கு நான்கு அல்லது அதனை விட அதிகமாகும் பட்சத்தில் அவை போட்டித்தடைக்குரிய புள்ளிகளாக மாற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தக் குற்றம் பற்றி கருத்து தெரிவித்த டேவிட் பூன், இது தசுனின் கிரிக்கெட் வாழ்க்கையின் ஆரம்ப நாட்களாக இருக்கின்றது. தற்போது குற்றம் ஊர்ஜிதம் செய்யப்பட்டிருக்கும் காரணத்தால் எதிர்காலத்தில் அவர் பந்தை மிகக் கவனமாக கையாள்வார் என்பதில் நான் உறுதியோடு இருக்கின்றேன்எனக் கூறினார்.

தசுன் சானக்கவின் இந்தக் குற்றம் ஐ.சி.சி இன் இரண்டாம் வகை விதி மீறலை சார்ந்ததாகும். இரண்டாம் வகை விதிமுறை மீறலை செய்யும் ஒரு வீரர் 50 தொடக்கம் 100 சதவீதம் வரையிலான போட்டிக் கட்டணத்தை அபராதமாக செலுத்த வேண்டி இருப்பதோடு, இரண்டுக்கு மேற்பட்ட நன்னடத்தை விதி மீறல் புள்ளிகளையும் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.