பயிற்சிப் போட்டியில் பிரகாசித்த பானுக, தனுஷ்க, சமீர மற்றும் பெதும்

Sri Lanka tour of West Indies 2021

1072

மேற்கிந்திய தீவுகள் தொடருக்கான இறுதிக்கட்ட குழாத்தை தெரிவுசெய்யும் முகமாக நடத்தப்பட்ட T20 பயிற்சிப் போட்டியில், இலங்கை அணியின் பல வீரர்கள் தங்களுடைய திறமைகளை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளனர்.

தசுன் ஷானக மற்றும் இசுரு உதான ஆகியோரின் தலைமையின் கீழ் அணிகள் களமிறங்கியதுடன், போட்டியானது கொழும்பு எஸ்.எஸ்.சி. மைதானத்தில் நடைபெற்றது.

யாழ்ப்பாணத்தில் களமிறங்கும் 96 உலக சம்பியன்கள்

குறித்த போட்டியில் இசுரு உதான பதினொருவர் அணி முதலில் துடுப்பெடுத்தாடிய நிலையில், நிரோஷன் டிக்வெல்ல மற்றும் ஓசத பெர்னாண்டோ ஆகியோர் தலா 15 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தனர்.

இதனையடுத்து களமிறங்கிய பானுக ராஜபக்ஷ அவ்வணிக்காக அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையாக 28 பந்துகளில் 50 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். இவர், அதிரடியாக 4 சிக்ஸர்கள் மற்றும் 5 பௌண்டரிகள் அடங்கலாக இந்த ஓட்ட எண்ணிக்கையை பெற்றார். இவருக்கு உதவியாக இருந்த அஞ்செலோ மெதிவ்ஸ் 30 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.

பானுக மற்றும் மெதிவ்ஸின் ஆட்டமிழப்பின் பின்னர், ஷானக பதினொருவர் அணி ஆதிக்கத்தை செலுத்தியது. வேகப் பந்துவீச்சாளர் துஷ்மந்த சமீர 3 விக்கெட்டுகளை வீழ்த்த, அகில தனன்ஜய, நுவான் பிரதீப் மற்றும் வனிந்து ஹசரங்க ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதன் காரணமாக உதான பதினொருவர் அணி, 11 ஓவர்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து 90 ஓட்டங்களை பெற்றிருந்தும், இன்னிங்ஸின் இறுதி ஓவரில் 143 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் இழந்தது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய ஷானக பதினொருவர் அணி சார்பாக, புதுமுக வீரரான பெதும் நிஸ்ஸங்க மற்றும் தனுஷ்க குணதிலக்க ஆகியோர் சிறந்த ஆரம்பத்தை பெற்றனர். இவர்கள், இருவரும் அபாரமாக ஆட, 17 ஓவர்களில் ஷானக பதினொருவர் அணி வெற்றிபெற்றது.

பெதும் நிசங்க 38 பந்துகளில் 40 ஓட்டங்களை பெற்றுக்கொடுக்க, தனுஷ்க குணதிலகக் இறுதிவரை ஆட்டமிழக்காமல் 55 பந்துகளில் 82 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார். இதில், குணதிலக்க 2 சிக்ஸர்கள் மற்றும் 5 பௌண்டரிகளையும் பெற்றுக்கொடுத்திருந்தார்.

இலங்கை கிரிக்கெட் அணி நடத்திய இந்த பயிற்சிப் போட்டியில், கடந்தவாரம் நடைபெற்ற உடற்தகுதி பரிசோதனையில் சித்திப்பெற்ற வீரர்கள் மாத்திரமே பங்குப்பற்றினர். அத்துடன், புதிய தேர்வுக்குழுவானது எதிர்வரும் இரண்டு நாட்களில், முதற்கட்ட குழாத்தை தெரிவுசெய்து விளையாட்டுத்துறை அமைச்சரிடம் கையளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக மூன்று ஒருநாள், மூன்று T20I மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ள இலங்கை அணி எதிர்வரும் 23ஆம் திகதி புறப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளை படிக்க<<