பாகிஸ்தானுடன் இறுதிப் போட்டியில் மோதவுள்ள இந்தியா

172

ஏற்கனவே பாகிஸ்தான் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான சம்பியன்ஸ் கிண்ணத்துக்கான முதலாவது அரை இறுதிப் போட்டியில், இங்கிலாந்து அணியை சொந்த மண்ணிலேயே வெற்றியீட்டி பாகிஸ்தான் அணி இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற நிலையில், பாகிஸ்தான் அணியுடனான இறுதிப் போட்டிக்குத் தெரிவாகும் மற்றைய அணியை தீர்மானிக்கும் இரண்டாவது அரை இறுதிப் போட்டியில் முதல் தடவையாக உலக கிண்ணப் போட்டியொன்றில் அரை இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற பங்களாதேஷ் அணியும் 6ஆவது தடவையாகவும் அரை இறுதிப் போட்டிக்கு முன்னேறிய இந்திய அணியும் மோதிக்கொண்டன.

பர்மிங்ஹம் ஏஜ்பாஸ்டனில் நடைபெற்ற சம்பியன்ஸ் கிண்ணத்துக்கான இரண்டாவது அரை இறுதிப் போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்திய அணித் தலைவர் விராத் கோஹ்லி, தீர்மானம் மிக்க இந்தப் போட்டியில் முதலில் பங்களாதேஷ் அணியை துடுப்பாடுமாறு பணித்தார்.

சிறந்த துடுப்பாட்டத்தை இன்றைய தினம் வெளிப்படுத்திய பங்களாதேஷ் அணி தலைசிறந்த அணிகளுக்கு மத்தியில் நாம் சளைத்தவர்கள் அல்ல என்று நிரூபித்தது. அந்த வகையில், எவ்வாறெனினும் இறுதிப் போட்டிக்கு தகுதிபெற வேண்டும் என்ற நோக்குடன் ஆரம்பம் முதலே ஆக்ரோஷ ஆட்டத்தை வெளிப்படுத்த எத்தனித்த பங்களாதேஷ் அணி முதல் விக்கெட்டினை புவனேஷ் குமாரிடம் பலி கொடுத்தது. அதிரடியாக துடுப்பாட முயன்ற சௌம்யா சர்க்கார் முதல் ஓவரிலேயே நேரடியாக போல்ட் முறையில் ஆட்டமிழந்து ஆடுகளத்திலிருந்து வெளியேறினார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய சபிர் ரஹ்மான் நான்கு பவுண்டரிகள் உள்ளடங்கலாக 19 ஓட்டங்களை பதிவு செய்திருந்த நிலையில், மீண்டும் புவனேஷ் குமாரின் பந்து வீச்சில் ஜடேஜாவிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.

நான் பழைய மாலிங்க அல்ல : வெளிப்படையாகக் கதைத்த லசித் மாலிங்க

அதனையடுத்து, ஆரம்பத் துடுப்பாட்ட வீரர் தமீம் இக்பாலுடன் இணைந்து கொண்ட முஷ்பிகுர் ரஹிம் மூன்றாம் விக்கெட்டுக்காக 19.1 ஓவர்கள் தொடர்ச்சியாக துடுப்பாடியதோடு 111 ஓட்டங்களை இணைப்பாட்டமாகப் பெற்று அணியை வலுப்படுத்தினர். அத்துடன் ஹர்திக் பாண்டியா வீசிய முதல் மூன்று ஓவர்களுக்கு 28 ஓட்டங்களை விளாசி பாண்டியாவை துவம்சம் செய்தனர்.

இந்திய அணிக்கு அச்சுறுத்தலாக இருந்த இந்த இணைப்பாட்டம் கேதர் ஜாதவ்வின் பந்து வீச்சினால் வீழ்த்தப்பட்டது. தமிம் இக்பால் 82 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் அடங்கலாக 70 ஓட்டங்களை பெற்ற நிலையில் நேரடியாக போல்ட் செய்யப்பட்டு ஆட்டமிழந்தார். அதனைத் தொடர்ந்து துடுப்பாடிய முஷ்பிகுர் ரஹிம் அரைச் சதம் கடந்தார். இறுதிவரை ஆட்டமிழக்காமல் துடுப்பாடிய பங்களாதேஷ் அணித் தலைவர் மஷ்ரஃபி மோர்டாசா மற்றும் தஸ்கின் அஹ்மத் ஆகியோர் ஆட்டமிழக்காமல் முறையே 30 மற்றும் 10 ஓட்டங்களைப் பதிவு செய்தனர். இறுதியில் பங்களாதேஷ் அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 264 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது.

[rev_slider ct17-dsccricket]

இந்திய அணி சார்பாக பந்து வீச்சில் ஜஸ்பிரிட் பும்ரா, புவனேஷ் குமார் மற்றும் கேதர் ஜாதவ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

அந்த வகையில், 265 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு துடுப்பாடக் களமிறங்கிய இந்திய அணியின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களான ரோஹித் சர்மா மற்றும் சிக்கர் தவான் ஆகியோர் முதல் விக்கெட்டுக்காக 87 ஓட்டங்களைப் பகிர்ந்து கொண்டனர். முதல் விக்கெட்டாக சிக்கர் தவான் 34 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் 1 சிக்ஸர் அடங்கலாக 46 ஓட்டங்களைப் பெற்று மஷ்ரஃபி மொர்டசாவின் பந்து வீச்சில் மொசாடெக் ஹொசைனிடம் பிடி கொடுத்து ஆட்டமிழந்தார்.

அவரைத் தொடர்ந்து ரோஹித் சர்மாவுடன் இணைந்து கொண்ட, துடுப்பாட்டத்தில் உலக தர வரிசையில் முதலிடத்திலுள்ள விராத் கோஹ்லி ஆகியோர் இறுதி வரை ஆட்டமிழக்காமல் அணியை வெற்றிப் பாதைக்கு வழி நடத்தினர். அதிரடியாக துடுப்பாடிய ரோஹித் சர்மா 129 பந்துகளில் 15 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உள்ளடங்கலாக 123 ஓட்டங்களைப் பதிவு செய்தார். அதேநேரம் மறுமுனையில் துடுப்பாடிய விராத் கோஹ்லி 78 பந்துகளில் 96 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஆட்டம் நிறைவுற்றதால் ஒருநாள் போட்டிகளில் தனது 28ஆவது சதத்தினை தவறவிட்டார்.

இந்த கிரிக்கெட் வீரர்களுக்கு என்ன நடந்தது

இறுதியில் இந்திய அணி 40.1 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்து சம்பியன்ஸ் கிண்ணத்துக்கான இறுதிப் போட்டிக்குத் தகுதி அடைந்தது.

சம்பியன்ஸ் கிண்ணத்துக்கான இறுதிப் போட்டி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையே ஜூன் மாதம் 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இலங்கை நேரப்படி பிற்பகல் 3 மணிக்கு நடைபெறவுள்ளது.

போட்டியின் சுருக்கம்

பங்களாதேஷ் – 264/7 (50 ) – தமீம் இக்பால் 70, முஷ்பிகுர் ரஹிம் 61, மஷ்ரஃபி மோர்டாசா 30*, சபிர் ரஹ்மான் 19, ஹமதுதுல்லா 21, மொஸெடெக் ஹொசைன் 15, தஸ்கின் அஹ்மத் 10*, புவனேஷ் குமார் 53/2, ஜஸ்பிரிட் பும்ரா 39/2, கேதர் ஜாதவ் 22/2

இந்தியா – 265/1 (40.1) – ரோஹித் ஷர்மா 123*, விராத் கோஹ்லி 96*, சிக்கர் தவான் 46, மஷ்ரஃபி மோர்டாசா 29/1

முடிவு – இந்திய அணி 9 விக்கெட்டுகளால் வெற்றி