செம் கரனுக்கு மாற்று வீரரை அறிவித்தது சென்னை

Indian Premier League – 2021

214
CPL

நடப்பு IPL தொடரில் இருந்து காயம் காரணமாக விலகிய சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் செம் கரனுக்குப் பதிலாக மேற்கிந்திய தீவுகளின் இளம் சகலதுறை வீரர் டொமினிக் ட்ரேக்ஸ் மாற்று வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

IPL 14வது பருவத்தின் லீக் போட்டிகள் கடைசி கட்டத்தை எட்டியுள்ளன. இதில் கடந்த 2ஆம் திகதி நடைபெற்ற ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிக்கெதிரான போட்டியில் விளையாடிய செம் கரன் முதுகுவலி உபாதைக்குள்ளாகினார்.

இதையடுத்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட ஸ்கேன் பரிசோதனை முடிவில் அவரது காயம் தீவிரமடைந்துள்ளமை தெரியவந்துள்ளது. இதனால் அவர் IPL தொடரின் எஞ்சிய போட்டிகளில் இருந்து விலகி மேலதிக சிகிச்சைக்காக இங்கிலாந்து புறப்பட்டுச் செல்வதாக சென்னை அணி நிர்வாகம் அறிவித்தது.

எனவே, சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் இறுதி பதினொருவர் அணியில் தற்போது விளையாடி வரும் வீரர்களில் ஒரு சகலதுறை வீரருக்கு காயம் ஏற்பட்டாலும், அது பிளே-ஓப்பில் சென்னை அணிக்கு பெரிய பிரச்சினையை கொடுக்கும் என தெரிவிக்கப்பட்டது.

இதனால், IPL தொடரிலிருந்து விலகிய செம் கரனுக்குப் பதிலாக மாற்று வீரரை தேர்வு செய்து கொள்ள சென்னை சுப்பர் கிங்ஸ் அணி, பிசிசிஐயிடம் அனுமதி கோரியிருந்தது. எனவே, சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் கோரிக்கையை ஏற்ற பிசிசிஐ, மாற்று வீரரை தேர்வு செய்து கொள்ள அனுமதி கொடுத்திருந்தது.

இந்தநிலையில், செம் கரனுக்குப் பதிலாக மேற்கிந்திய தீவுகளைச் சேர்ந்த 23 வயதான இளம் வீரர் டொமினிக் ட்ரேக்ஸ் அணியில் சேர்க்கப்படுவதாக சென்னை சுப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் உத்தியோகப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இவர் மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் வாஸ்பேர்ட் ட்ராக்ஸின் மகன் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, டொமினிக் டிரேக்ஸ் இம்முறை IPL தொடரில் பங்குபற்றியுள்ள அணியொன்றில் வலைப்பந்துப் பந்துவீச்சாளராக செயல்பட்டு வருகின்றார்.

அண்மையில் நிறைவுக்கு வந்த கரீபியன் பிரீமியர் லீக் தொடரில் சிறப்பாக செயல்பட்டிருந்த அவர், சம்பியன் பட்டம் வென்ற டுவைன் பிராவோ தலைமையிலான செயின்ட் கிட்ஸ் மற்றும் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணிக்காக விளையாடியிருந்தார்.

அந்த அணிக்காக 11 இன்னிங்ஸ்களில் விளையாடி 16 விக்கெட்டுக்கள் கைப்பற்றி இம்முறை கரீபியன் பிரீமியர் லீக்கில் அதிக விக்கெட் எடுத்த நான்காவது வீரராகவும் இடம்பிடித்தார்.

இதேவேளை, இம்முறை IPL தொடரில் பிளே-ஓப் சுற்றுக்குத் தகுதிபெற்றுள்ள சென்னை சுப்பர் கிங்ஸ் அணி, இன்று நடைபெறவுள்ள தமது கடைசி லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியை எதிர்த்தாடவுள்ளது.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<