அவுஸ்திரேலியாவின் இந்தியா, ஆப்கான் போட்டித் திகதிகள் அறிவிப்பு

3

அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி இந்த ஆண்டின் இறுதிப் பகுதியில் தாம் இந்தியா, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளுடன் விளையாடவுள்ள டெஸ்ட் தொடர்களுக்கான திகதிகளை அறிவித்திருக்கின்றது. 

அவுஸ்திரேலிய அணி ஆப்கானிஸ்தான், இந்தியா ஆகிய நாடுகளுடன் விளையாடவுள்ள டெஸ்ட் தொடர்கள் அவர்களது சொந்த மண்ணில் நடைபெறவிருக்கின்றன. 

T20 உலகக் கிண்ணம் தொடர்பில் ஐசிசி புதிய அறிவிப்பு!

இதில், ஆப்கானிஸ்தான் அணியுடன் அவுஸ்திரேலியா வரலாற்றில் முதல் தடவையாக டெஸ்ட் தொடரொன்றில் விளையாடவிருக்கின்றது. ஒரு போட்டியினை மாத்திரம் கொண்டிருக்கும் இந்த டெஸ்ட் தொடர் எதிர்வரும் நவம்பர் மாதம் 21ஆம் திகதி தொடக்கம் 25ஆம் திகதி வரை பேர்த் நகரில் இடம்பெறவிருக்கின்றது. இன்னும், இந்த டெஸ்ட் தொடரில் இடம்பெறவுள்ள குறித்த போட்டி பகலிரவு மோதலாக நடைபெறவிருக்கின்றமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

ஆப்கானிஸ்தான் அணியுடனான டெஸ்ட் தொடரினை அடுத்து, அவுஸ்திரேலியா, இந்திய அணியுடன் மோதவுள்ள டெஸ்ட் தொடர் நடைபெறவிருக்கின்றது. போடர்-கவாஸ்கர் கிண்ணத்திற்காக நடைபெறவுள்ள இந்த டெஸ்ட் தொடர் நான்கு போட்டிகள் கொண்டதாக காணப்படுகின்றது. 

இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி எதிர்வரும் டிசம்பர் மாதம் 03ஆம் திகதி பிரிஸ்பேன் நகரில் நடைபெறவிருப்பதுடன், அடுத்தடுத்த டெஸ்ட் போட்டிகள் அடிலைட், சிட்னி மற்றும் மெல்பர்ன் ஆகிய நகரங்களில் இடம்பெறவுள்ளன. இதில் அடிலைட் டெஸ்ட் போட்டி பகலிரவு மோதலாகும்.

இதேநேரம், உலகில் உருவாகிய கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் தடைப்பட்டு குறித்த வைரஸ் தாக்கம் குறைந்த நிலையில், நாடுகளின் கிரிக்கெட் அணிகள் தத்தமது பயிற்சிகளை மீள ஆரம்பிக்க தொடங்கியிருக்கின்றன.

போடர்-கவாஸ்கர் கிண்ணத்திற்காக நடைபெறும் டெஸ்ட் தொடரில் பங்கேற்கும் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்கள் இன்னும் உத்தியோகபூர்வமாக தங்களது பயிற்சிகளை மீள ஆரம்பிக்கவில்லை என்ற போதும் இந்திய கிரிக்கெட் அணியின் தலைவரான விராட் கோலி அவுஸ்திரேலிய அணியுடனான டெஸ்ட் தொடருக்காக தமது அணி எப்போதும் தயாராக இருக்கும் என தெரிவித்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.  

“அது காப்பா (பிரிஸ்பேன்) மைதானமோ அல்லது பேர்த் மைதானமோ அது எதுவாக இருந்தாலும் எங்களுக்கு கவலையில்லை.”

“எங்களிடம் ஒரு அணியாக உலகில் யாரையும், எந்த இடத்தில் வைத்தும் எதிர்த்து விளையாடக்கூடிய திறமை இருக்கின்றது. அது சிவப்பு பந்தோ, வெள்ளைப் பந்தோ, இளம்சிவப்பு பந்தோ எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. நாம் தயாராக இருக்கின்றோம்.” என கோலி தெரிவித்தார். 

மறுமுனையில் அவுஸ்திரேலிய டெஸ்ட் அணியின் தலைவரான டிம் பெய்ன், இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ள பிரிஸ்பேன் மைதானம் தமது அணிக்கு சாதகமான ஒரு இடமாக இருக்கும் எனக் குறிப்பிட்டிருக்கின்றார்.

“நாங்கள் காப்பா மைதானத்திற்கு செல்வதை தொடர்ந்து எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றோம். இங்கே அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணி சிறப்பாக விளையாடி பல டெஸ்ட் வெற்றிகளையும் பதிவு செய்திருக்கின்றது.” 

“காப்பாவில் (நாம்) ஒன்றிணையும் போதுதான் அவுஸ்திரேலியாவின் கோடைகால கிரிக்கெட் ஆரம்பமாகிறது என பாரம்பரியமாக உணர்கின்றோம். இது நாங்கள் கிரிக்கெட் விளையாட சிறப்பான ஒரு இடம். இந்த மைதானமும் அவுஸ்திரேலியத் தரப்பிற்கு சாதகமாக இருக்கின்றது. எனவே, இங்கே கிரிக்கெட் விளையாட எமது வீரர்களும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.”  

ஹோமாகமவில் கிரிக்கெட் மைதானம் நிர்மாணிக்கப்படும் – ஷம்மி சில்வா

இதேநேரம், அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வேகப் பந்துவீச்சாளரான மிச்செல் ஸ்டார்க்கும் இந்திய அணியுடனான டெஸ்ட் போட்டிகளை (குறிப்பாக பகலிரவு மோதலாக நடைபெறவுள்ள அடிலைட் டெஸ்ட் போட்டியை) எதிர்பார்த்து இருப்பதாக தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

டெஸ்ட் தொடர்கள் அட்டவணை

அவுஸ்திரேலியா எதிர் ஆப்கானிஸ்தான்

ஒரேயொரு டெஸ்ட் போட்டி – நவம்பர் 21-25 – பேர்த் (பகலிரவு மோதல்)

அவுஸ்திரேலியா எதிர் இந்தியா 

முதல் டெஸ்ட் போட்டி – டிசம்பர் 3-7 – பிரிஸ்பேன் (காப்பா)

இரண்டாவது டெஸ்ட் போட்டி – டிசம்பர் 11-15 – அடிலைட் (பகலிரவு மோதல்)

மூன்றாவது டெஸ்ட் போட்டி – டிசம்பர் 26-30 – மெல்பர்ன்

நான்காவது டெஸ்ட் போட்டி – ஜனவரி (2021) – 3-7 – சிட்னி

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<