இங்கிலாந்தின் சசெக்ஸ் அணியில் இணையும் புஜாரா

103

இங்கிலாந்தின் சஸ்செக்ஸ் கவுண்டி அணியில் விளையாட இந்திய வீரரான செட்டேஷ்வர் புஜாரா ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்திய டெஸ்ட் அணியில் 2012ஆம் ஆண்டு முதல் நிரந்தர இடம்பிடித்து வந்த புஜாரா, அண்மைக்காலமாகவே சிறந்த திறமையை நிரூபிக்க முடியாமல் இருந்து வருகிறார். குறிப்பாக, 2021ஆம் ஆண்டுக்குப் பிறகு 14 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அவர் 702 ஓட்டங்களை மட்டுமே குவித்துள்ளார்.

இந்திய அணியின் தென்னாபிரிக்கா சுற்றுப்பயணத்தின் போது தனது சிறப்பான ஆட்டத்தை வெளிபடுத்த தவறிய பிறகு அவர் இந்திய டெஸ்ட் அணியிலிருந்தும் நீக்கப்பட்டார்.

இதனால் கிட்டதட்ட 10 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் நடைபெறுகின்ற டெஸ்ட் தொடரில் புஜாரா இல்லாமல், இலங்கைக்கு எதிராக இந்தியா களமிறங்கியது.

இவர் தற்போது தனது திறமையை நிரூபிக்க ரஞ்சி கிண்ணத்தில் விளையாடி வருகிறார். இறுதியாக, நடைபெற்ற போட்டிகளில் 90, 60 என ஓட்டங்களைக் குவித்து வருவதால் மீண்டும் இந்திய டெஸ்ட் அணியில் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே, இவர் கடந்த ஆண்டு IPL தொடரில் சென்னை சுபர் கிங்ஸ் அணியில் இடம்பெற்றிருந்தார். இந்த நிலையில், கடந்த மாதம் இடம்பெற்ற IPL மெகா ஏலத்தில் எந்த அணியும் புஜாராவை எடுக்காத நிலையில், புஜாரா இங்கிலாந்தின் கவுண்டி கிரிக்கெட்டில் எதிர்வரும் பருவகாலத்தில் விளையாட முடிவு செய்துள்ளார்.

இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட் தொடர் அடுத்த மாதம் 7ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. சசெக்ஸ் கவுண்டி அணியில் இடம் பெற்றிருந்த

அவுஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் பணிச்சுமை காரணமாக விலகினார். எனவே அவருக்குப் பதிலாக புஜாரா அந்த அணியில் ஒப்பந்தமாகியுள்ளார்.

இதுகுறித்து சசெக்ஸ் அணி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், புஜாரா இம்முறை பருவத்தில் முதல் சம்பியன்ஷிப் போட்டிக்கான சரியான நேரத்தில் வருவார் மற்றும் ரோயல் கிண்ண ஒருநாள் தொடரின் இறுதி வரை இருப்பார் என்று கூறியுள்ளது.

இதனிடையே, சசெக்ஸ் அணியில் இணைவது குறித்து புஜாரா கருத்து வெளியிடுகையில்,

“இம்முறை பருவத்தில் வரலாற்று சிறப்புமிக்க சசெக்ஸ் கவுண்டி கிரிக்கெட் கழகத்தின் ஒரு பகுதியாக இருப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன். நான் விரைவில் சசெக்ஸ் குடும்பத்துடன் இணைந்து அதன் பணக்கார கிரிக்கெட் வரலாற்றின் ஒரு பகுதியாக இருக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்றார்.

முன்னதாக, இங்கிலாந்தின் கவுண்டி அணிகளான டெர்பிஷயர் (2014), யோர்க்ஷெயர் (2015, 2018), நொட்டிங்ஹம்ஷெயர் (2017) ஆகிய அணிகளுக்காக புஜாரா விளையாடியிருந்தார்.

எவ்வாறாயினும், புஜாராவுக்கு இது மிகவும் முக்கிய தொடராகும். ஒருவேளை இந்த கவுண்டி தொடரில் பிரகாசிக்கத் தவறினால், எதிர்வரும் ஜூன் மாதம் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெறவுள்ள டெஸ்ட் போட்டியில் பங்கேற்கும் இந்திய அணியிலிருந்து அவர் நீக்கப்பட வாய்ப்புள்ளது.

இதனால், கவுண்டி கிரிக்கெட்டில் தனது திறமையை நிரூபித்தாக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். அப்படி அவர் சிறப்பாக சோபிக்கவில்லை என்றால், வெளிநாட்டு மண்ணில் புஜாராவின் இடம் நிரந்தரமாக ஹனுமா விஹாரிக்கு செல்ல வாய்ப்புகள் இருப்பதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

>>மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<