AFC கிண்ணத்திற்காக கொழும்பு குழாத்தில் மூன்று புது வீரர்கள்

1091
Colombo FC adds three players

எதிர்வரும் 20ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள AFC கிண்ண தகுதிகாண் கால்பந்து போட்டிக்காக கொழும்பு கால்பந்து கழகம் மூன்று புதுமுக வீரர்களை இணைத்து தனது குழாத்தை பலப்படுத்தியுள்ளது.

ஆசிய கால்பந்து சம்மேளனத்தின் 2019ஆம் ஆண்டுக்கான AFC கிண்ணத்தின் முதலாவது தகுதிகாண் சுற்றுப் போட்டியில் கொழும்பு கால்பந்து கழகம் பூட்டான் நாட்டின் ட்ரான்ஸ்போட் யுனைடட் அணியை எதிர்கொள்ளவுள்ளது. இதன் முதல் கட்டப்போட்டி இம்மாதம் 20ஆம் திகதி கொழும்பு குதிரைப் பந்தயத் திடல் (ரேஸ்கோர்ஸ்) சர்வதேச மைதானத்தில் நடைபெறவுள்ளதோடு, 2ஆவது கட்டப் போட்டி பெப்ரவரி 27ஆம் திகதி பூட்டானின், திம்பு தேசிய அரங்கில் நடைபெறும்.

AFC கிண்ணத்திற்கு போட்டியிடும் கொழும்பு கால்பந்து கழகம்

ஆசிய கால்பந்து சம்மேளனத்தின் 2019ஆம்..

இதற்காக, நியூ யங்ஸ் கால்பந்து கழகத்தில் இருந்து டக்சன் பியுஸ்லஸ், மாத்தறை சிட்டியில் இருந்து இடேவ்வோ ஐசாக் மற்றும் டிபெண்டர்ஸ் கால்பந்து கழகத்தில் இருந்து ஆசிகுர் ரஹ்மான் ஆகிய மூவரும் புதிய வீரர்களாக அழைக்கப்பட்டுள்ளனர்.

அண்மைய பருவத்தில் அணியில் பல வீரர்களும் உபாதை காரணமாக பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், 2018 டயலொக் சம்பியன்ஸ் லீக்கில் 2ஆவது இடத்தை பிடித்த கொழும்பு கால்பந்து கழகம் AFC கிண்ண தகுதிகாண் போட்டிகளுக்காக தனது அணியை பலப்படுத்துவதில் அதிகம் அவதானம் செலுத்தியுள்ளது.  

போட்டி அட்டவணை நெருக்கமாக இருந்ததால் இந்த பருவத்தில் எமக்கு பல உபாதைகளுக்கு முகம்கொடுக்க வேண்டி இருந்தது. உபாதையில் இருந்து மீண்டு வர எமக்கு நேரமில்லை. அதனால்தான் எமது பின்களத்திற்கு வலுச்சேர்க்கும் வகையில் நாம் வீரர்களை கொண்டுவந்துள்ளோம் என்று ஏமாற்றம் அடைந்துள்ள கொழும்பு கால்பந்து கழக பயிற்சியாளர் மொஹமட் ரூமி குறிப்பிட்டார்.  

அபீல் மொஹமட், ரௌமி மொஹிடீன், ஷலன சமீர, மொமாஸ் யாப்போ, மொஹமட் ரிப்னாஸ் மற்றும் சிராஜ் ஜெயின் ஆகிய வீரர்கள் தற்பொழுது உபாதைக்கு உள்ளாகியுள்ளனர். இதில் மிக அண்மையில் அணித்தலைவர் மொஹிடீன், ஜெயின், யாப்போ மற்றும் சமீர ஆகியோர் போட்டிகளில் பங்கேற்பதற்கு போதுமான அளவில் சுகம் பெற்றிருந்தபோதும் ஏனையவர்கள் பூட்டானின் டிரான்ஸ்போட் யுனைடட் அணியுடனான முதலாம் கட்டப் போட்டியில் பங்கேற்பதில் சந்தேகமுள்ளது.    

டயலொக் சம்பியன்ஸ் லீக் கிண்ணம் டிபெண்டர்ஸ் வசம்

கொழும்பு, சுகததாச அரங்கில் நடைபெற்ற சம்பியன்..

புதிய வீரர்கள்கூட டயலொக் சம்பியன்ஸ் லீக்கில் ஒன்றிணைந்து ஆட முடிந்தது. அது முடிவுற்ற இரண்டு மூன்று நாட்களிலேயே டிரான்ஸ்போட் யுனைடட் அணியுடனான போட்டியில் முகம்கொடுக்க வேண்டியுள்ளது என்று ரூமி குறிப்பிட்டார்.   

புதிய வீரர்கள் பற்றி ரூமி இவ்வாறு கூறினார்,

இந்த மூன்று வீரர்களும் சிறந்த வீரர்கள். பியுஸ்லஸ் தேசிய அணியில் எமது பல வீரர்களுடன் ஆடியுள்ளார். எனவே, அவர் அணியில் ஒன்றிணைவதற்கு இலகுவாக இருக்கும். பந்து பரிமாற்றம் மற்றும் நீண்ட தூர முயற்சிகளுடன் ஐசாக் சிறந்த பின்கள வீரராக உள்ளார். மத்திய களம் மற்றும் பின்களத்தில் விளையாட முடியுமான ஆசிகுர் இந்த பருவத்தின் டயலொக் சம்பியன்ஸ் லீக்கில் சிறப்பாக செயற்பட்டார் என்றார்.  

>> மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க <<