ஈகிள்ல் கால்பந்து கழகத்தின் தலைவராக சுஜான் பெரேரா

330

மாலைத்தீவுகளில் உள்ள முன்னணி கால்பந்து அணிகளில் ஒன்றான ஈகிள்ஸ் கால்பந்து கழகம், இலங்கை தேசிய கால்பந்து அணியின் கோல் காப்பாளரான சுஜான் பெரேராவை 2018ஆம் ஆண்டுக்கான பருவகாலத்தில் தமது அணித் தலைவராக செயற்பட நியமித்திருக்கின்றது.  

இலங்கையில், களுத்துறை பார்க் கழகத்திற்காக விளையாடி வந்த சுஜான், 2015ஆம் ஆண்டு ஈகிள்ஸ் கழகத்தில் இணைந்திருந்தார். இந்த கழகத்தில் இணைந்தது முதல் ஜொலித்து வரும் சுஜான், இலங்கை கால்பந்து அணியின் தலைவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

25 வயதாகும் சுஜானை அஸ்லம் அப்துல் ரஹீம் தேர்ந்தெடுத்திருந்தார். ஈகிள்ஸ் அணிக்காக நீண்ட காலமாக கோல் காப்பு பயிற்சியாளராக செயற்பட்டு வரும் அஸ்லம், சுஜான் மீது எப்போதும் நம்பிக்கை இழந்தது கிடையாது. சுஜான் அண்மையில் தன்னுடைய 50ஆவது போட்டியை ஈகிள்ஸ் அணி சார்பாக நியூ ரேடியன்ட் கழகத்துடன் விளையாடியிருந்தார். குறித்த போட்டி 2-2 என சமநிலையில் நிறைவுற்றிருந்தது. 

”மாலே லீக்” என அழைக்கப்படும் மாலைத்தீவுகள் நாட்டினுடைய உயர்மட்ட கால்பந்து தொடரில் பங்கேற்கும் ஈகிள்ஸ் கழகம் அதில் தற்போது முதல் நிலை அணியாகவும் வலம் வருகின்றது. இத்தொடர் (மாலே லீக்) மாலைதீவில் இடம்பெறும் இன்னுமொரு கால்பந்து தொடரான திவேகி பிரிமியர் லீக் (Dhivehi Premier League) இன் தகுதிகாண் போட்டிகளாக அமையும்.

>> ஹமீட் அல் ஹுஸைனியை வீழ்த்திய ஸாஹிராவுக்கு ஜனாதிபதிக் கிண்ணம்

இந்தப் பருவகாலத்தில் மாலைத்தீவுகள் கால்பந்து கழகங்களில் ஒன்றை தலைமை தாங்கும் ஒரே வெளிநாட்டு வீரர் சுஜான் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

சுஜான் பெரேராவுக்கு உதவி வழங்குபவர்களாக ஈகிள்ஸ் அணியில் அஹ்மட் நூமானும், இப்றாகீம் முபீனும் உள்ளனர். இளமைக் காலம் முதலே இந்த இரண்டு வீரர்களும் ஈகிள்ஸ் அணிக்காக விளையாடி வருவதோடு ஈகிள்ஸ் கழகம் பிரீமியர் லீக் போட்டிகளுக்காக கடந்த பருவகாலத்தில் தெரிவாக தவறிய நிலையில் தினதூ (Thinadhoo) அணிக்காக இவ்விருவரும் பங்கேற்றிருந்தனர். 

ஈகிள்ஸ் அணியின் பயிற்றுவிப்பாளரான சியாஸ், தமது அணி திறமைகளை வெளிப்படுத்த குழாமில் பல மாற்றங்களை மேற்கொண்டிருந்த போதிலும், தனது தரப்பின் துருப்பு சீட்டு வீரர்களான சுஜான் பெரேரா, அஹ்மட் நூமான், இப்றாகீம் முபீன் ஆகியோரை நிரந்தரமாக வைத்திருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.