இந்திய அணிக்கு எதிராக நடைபெற்றுவரும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் அனுபவ வேகப்பந்துவீச்சாளர் கிரிஸ் வோக்ஸ் பந்துவீசுவது சந்தேகத்திற்கிடமாகியுள்ளது.
இரண்டு அணிகளுக்கும் இடையில் ஆரம்பமாகியுள்ள ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தின்போது கிரிஸ் வோக்ஸ் தோற்பட்டை உபாதைக்கு முகங்கொடுத்துள்ளார்.
>>பவன் ரத்நாயக்கவின் அசத்தல் சதத்துடன் சம்பியனாகிய கொழும்பு கிரிக்கெட் கழகம்<<
மிட்-ஓஃப் பகுதியில் களத்தடுப்பில் ஈடுபட்டிருந்த வோக்ஸ் பௌண்டரி எல்லைக்கு அருகில் சென்ற பந்தொன்றை தடுக்க முற்பட்டபோது, இவருடைய இடதுகை தோற்பட்டை பகுதியில் உபாதை ஏற்பட்டது.
முதல் நாள் ஆட்டத்தின் இறுதிப்பகுதியில் இந்த உபாதை ஏற்பட்டிருந்த நிலையில் உடனடியாக இவர் களத்திலிருந்து வெளியேறினார். முதல் நாள் மழைக்காரணமாக சற்று தாமதமாகியிருந்த நிலையில், மைதானம் சற்று ஈரப்பதத்துடன் காணப்பட்டது.
எனவே மோசமான முறையில் வோக்ஸின் இடதுகை தோற்பட்டை மைதானத்தில் மோதியது. இதில் இவருடைய தோற்பட்டை விலகியிருக்கக்கூடும் என சந்தேகிக்கப்படுகின்றது.
கிரிஸ் வோக்ஸ் இந்த போட்டியில் இதுவரை 14 ஓவர்களை வீசியுள்ளதுடன் ஒரு விக்கெட்டினை கைப்பற்றியுள்ளார். மீண்டும் இவர் பந்துவீசாவிட்டால் ஒரு பந்துவீச்சாளரின்றி இங்கிலாந்து அணி இந்த போட்டியை சந்திக்க வேண்டும். அதுமாத்திரமின்றி அணியில் உள்ள அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளராகவும் வோக்ஸ் உள்ளார்.
இவர் 61 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இந்த போட்டியில் விளையாடும் ஏனைய பந்துவீச்சாளர்களான ஜோஸ் டொங், ஜெமி ஓவர்டன் மற்றும் கஸ் அட்கின்சன் ஆகியோர் மொத்தமாக 18 டெஸ்ட் போட்டிகளில் மாத்திரமே விளையாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
>>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<




















