கொல்கத்தா அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக ப்ரெண்டன் மெக்கலம் நியமனம்

208
Insidesport.co

நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் அணித்தலைவரும் அண்மையில் முழுமையான கிரிக்கெட் வாழ்க்கைக்கும் விடைகொடுத்த பிரெண்டன் மெக்கலம், இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் அணிகளில் ஒன்றான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என கொல்கத்தா அணி நிர்வாகம் அறிவித்துள்ளது.

கிரிக்கெட் உலகில் ஒவ்வொரு நாடுகளின் கிரிக்கெட் சபைகளினாலும் நடாத்தப்பட்டுவரும் லீக் தொடர்களில் இந்தியாவில் நடைபெறும் இந்தியன் ப்ரீமியர் லீக் தொடர் உலகில் மிகவும் பிரபல்யம் வாய்ந்த ஒரு லீக் தொடராக அமைந்திருக்கின்றது. 2008 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்த லீக் தொடர் ஒவ்வொரு வருடமும் வெற்றிகரமாக நடைபெற்று வருகிறது. 

கொல்கத்தா அணியின் உதவி பயிற்சியாளராக மெக்கல்லம் நியமனம்

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் கொல்கத்தா……………

12 பருவகாலங்களை நிறைவு செய்துள்ள குறித்த இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரில் ஆரம்ப காலத்திலிருந்து ஒரு அணியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி காணப்படுகின்றது. 2012 ஆம் ஆண்டு மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஐ.பி.எல் தொடரில் கொல்கத்தா அணி சம்பியன் பட்டத்தை வென்றுள்ளமையும் இங்கே குறிப்பிடத்தக்கது. 

மேலும் இறுதியாக இவ்வருட மே மாதம் நிறைவுக்கு வந்த தொடரில் கொல்கத்தா அணி ஐந்தாவது இடத்தை பெற்றுக்கொண்டது. தற்போது நடைமுறையில் கொல்கத்தா அணியின் தலைவராக இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் காப்பாளர் தினேஷ் கார்த்திக் செயற்பட்டு வருகின்றார். கொல்கத்தா அணியின் உரிமையாளராக பிரபல பொலிவூட் நடிகர் ஷாரூக் கான் காணப்படுகின்றார். 

கடந்த சில வருடங்களாக கொல்கத்தா அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக தென்னாபிரிக்க கிரிக்கெட் அணியின் முன்னாள் சகலதுறை வீரரான ஜெக் கல்லிஸ் செயற்பட்டுவந்தார். அவருடன் சேர்ந்து கொல்கத்தா அணியின் உதவி பயிற்றுவிப்பாளராக அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் துடுப்பாட்ட வீரர் சைமன் கெட்டிச் செயற்பட்டுவந்தார். 

இந்நிலையில் இவ்வருடம் நடைபெற்ற 12 ஆவது இந்தியன் ப்ரீமியர் லீக் தொடருடன் குறித்த இருவரும் தத்தமது பதவிகளில் இருந்து விலகிக் கொண்டனர். இவ்வாறான நிலையில் சர்வதேச அரங்கிலிருந்து ஓய்வு பெற்று லீக் தொடர்களில் விளையாடிவந்த நியூசிலாந்து வீரர் ப்ரெண்டன் மெக்கலம் கடந்த வாரம் முழு கிரிக்கெட் வாழ்க்கைக்கும் முற்றுப்புள்ளி வைத்தார்.

கிரிக்கெட் வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்தார் ப்ரெண்டன் மெக்கலம்

கிரிக்கெட் விளையாட்டில் டி20 போட்டி……………

இதனை தொடர்ந்து வெற்றிடமாக நிலவிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்றுவிப்பாளர் பதவிகளில் அணியின் உதவி பயிற்றுவிப்பாளராக ப்ரெண்டன் மெக்கலம் நியமிக்கப்பட்டுள்ளார் என்ற அறிவிப்பு கடந்த வாரம் வெளியானது. அவ்வேளையில் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளர் யார் என்ற அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை.

இந்நிலையிலேயே கொல்கத்தா அணியின் உதவி பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்ட ப்ரெண்டன் மெக்கலம் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார் என்ற அறிவிப்பை கொல்கத்தா அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் தற்போது யார் உதவி பயிற்றுவிப்பாளர் என்ற அறிவிப்பு வெளியிடப்படவில்லை. 

2008 ஆம் ஆண்டு ஆரம்பமான இந்தியன் ப்ரீமியர் லீக் தொடரின் முதல் பருவகாலத்திலேயே ப்ரெண்டன் மெக்கலம் கொல்கத்தா அணியில் விளையாடியிருந்தார். இதில் 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற தொடரின் போது வெறும் 73 பந்துகளில் 13 சிக்ஸர்கள், 10 பௌண்டரிகளுடன் ஆட்டமிழக்காது 158 ஓட்டங்களை விளாசியிருந்தார். 

ஐந்து இந்தியன் ப்ரீமியர் லீக் தொடர்களில் விளையாடியுள்ள ப்ரெண்டன் மெக்கலம் 2009 ஆம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது பருவகாலத்தில் கொல்கத்தா அணியின் தலைவராக செயற்பட்டிருந்தார். இந்நிலையில் தற்போது தான் தலைமை தாங்கிய அணிக்கே தலைமை பயிற்றுவிப்பாளராக செயற்படும் நிலைக்கு மெக்கலம் வந்துள்ளார். 

இலங்கை அணியை சரிவிலிருந்து மீட்ட டிக்வெல்ல, லக்மால்

நியூசிலாந்து அணிக்கு எதிராக காலி சர்வதேச……

இது குறித்து ப்ரெண்டன் மெக்கலம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்த பொறுப்பை ஏற்றுக்கொள்வது மிகப்பெரிய கௌரவமாக காணப்படுகிறது. அத்துடன் தொடரின் போது கொல்கத்தா அணியின் நிர்வாகிகளுடன் இணைந்து அணியின் வெற்றிக்காக கடினமாக உழைப்பேன்” என குறிப்பிட்டுள்ளார். 

இதேவேளை மெக்கலமின் நியமனம் குறித்து கொல்கத்தா அணியின் தலைமை நிறைவேற்று அதிகாரி வெங்கி மைசோர் குறிப்பிடுகையில், “ப்ரெண்டன் மெக்கலம் நீண்ட நாட்களாக எமது அணியுடன் இணைந்து பயணம் செய்து வருகிறார். அவரின் நேர்மை, பாணி, தலைமை பண்பு என்பன இணைந்து அணி வீரர்களுக்குள் காணப்படுகின்ற திறமையை வெளிக்கொண்டுவரும்” என குறிப்பிட்டுள்ளார்.  

இதேவேளை அடுத்த மாதம் மேற்கிந்திய தீவுகளில் ஆரம்பமாகவுள்ள கரீபியன் டி20 லீக் தொடரில் ட்ரிபாங்கோ நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை பயிற்றுவிப்பாளராக ப்ரெண்டன் மெக்கலம் செயற்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் மெக்கலமின் கொல்கத்தா அணிக்கான பதவி அடுத்த வருட (2020) ஐ.பி.எல் தொடரிலிருந்து ஆரம்பமாகும்.

மேலும் பல கிரிக்கெட் செய்திகளைப் படிக்க