பாதுகாப்பு காரணங்களால் BPL T20 தொடர் தொடக்க விழா ஒத்திவைப்பு

56
BPL 2026 Opening Ceremony has been postponed

பங்களாதேஷில் நிலவி வரும் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் பாதுகாப்பு காரணங்களைக் கருத்தில் கொண்டு, 2026ஆம் ஆண்டுக்கான பங்களாதேஷ் பிரீமியர் லீக் (BPL) T20 தொடரின் பிரம்மாண்டமிக்க தொடக்க விழாவை பங்களாதேஷ் கிரிக்கெட் சபை (BCB) அதிகாரப்பூர்வமாக ஒத்திவைத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

>>இலங்கையை வீழ்த்தி தோல்வியடையாத அணியாக அரையிறுதிக்குள் நுழைந்தது பங்களாதேஷ்<<

டிசம்பர் 24ஆம் திகதி டாக்காவில் நடைபெறவிருந்த இந்த தொடக்க விழா, பங்களாதேஷ் அரசாங்கத்துடன் நடத்தப்பட்ட ஆலோசனைக்குப் பிறகு ரத்து செய்யப்பட்டுள்ளது.

இருப்பினும் திட்டமிட்டபடி BPL தொடரின் போட்டிகள் டிசம்பர் 26ஆம் திகதி சில்ஹெட்டில் தொடங்கும் என்று BCB குறிப்பிட்டுள்ளது.

இந்த விடயம் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பங்களாதேஷ் கிரிக்கெட் சபை தலைவர் அமினுல் இஸ்லாம், “நாட்டின் தற்போதைய நிலைமை மற்றும் பாதுகாப்பை முக்கிய காரணியாகக் கொண்டு தொடக்க விழாவை நடத்த வேண்டாம் என்று முடிவு செய்துள்ளோம். எங்களது முதல் கடமை கிரிக்கெட் போட்டிகளைத் தடையின்றி நடத்துவதுதான். எனவே, தற்போது நாங்கள் கிரிக்கெட் போட்டிகளில் மட்டுமே முழு கவனத்தையும் செலுத்தி வருகிறோம்,” என்று கூறினார்.

2026ஆம் ஆண்டு பெப்ரவரி 12 ஆம் திகதி பங்களாதேஷில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நாட்டின் அரசியல் களம் மிகவும் பரபரப்பாகக் காணப்படுகிறது.

இத்தகைய சூழலில் பாதுகாப்புப் படையினரை விளையாட்டு விழாவிற்கு முழுமையாகப் பயன்படுத்துவதில் சிக்கல் இருப்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

டிசம்பர் 26ஆம் திகதி சில்லெட் ஸ்ட்ரைக்கர்ஸ் மற்றும் ராஜாஷி வோரியர்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியுடன் BPL 2026 தொடர் ஆரம்பமாகுகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

 >>மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க<<